விஜய்க்கு அரசியலில் நீண்ட காலமாகவே ஒரு ஆர்வம் இருந்து வருகிறது. இதற்காகவே தனது ரசிகர் மன்றங்களை ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்புடன் இருக்கும்படி பல மாற்றங்களைச் செய்தார். இப்போது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சியையும் தொடங்கிவிட்டார்.
விஜய் கட்சி ஆரம்பித்த இரண்டு மூன்று நாட்களிலேயே விஷாலைப் பற்றியும் புது செய்திகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. அதாவது விஷாலும் அரசியலில் இறங்கப் போகிறார். அவரும் சொந்தக் கட்சி ஒன்றை துவங்க இருக்கிறார் என்று செய்திகள் அடிப்படுகின்றன.
விஷாலுக்கு அரசியல் ஆர்வம் உண்டு. இதை வெளிப்படுத்தும் விதமாக சட்டமன்றத் தேர்தலின் போது சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது.
இதற்குப் பிறகு விஷால் அரசியல் அதிகம் பேசாவிட்டாலும், அவ்வப்போது சமூகப் பிரச்சினைகள் குறித்து பொதுவெளியில் பேசினார். மத்திய தணிக்கை அதிகாரிகள் தணிக்கைச் சான்றிதழ் அளிப்பதற்காக லஞ்சம் கேட்டது குறித்து பரபரப்பைக் கிளப்பினார்.
இப்படி தனது குரலைப் பதிவு செய்த விஷால், அரசியலுக்கு வர வாய்ப்புகள் அதிகம் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். இப்பொழுது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால், வெகு விரைவிலேயே அரசியலில் தனது விருப்பம் என்ன, நோக்கம் என்ன என்பது குறித்து விஷால் கூற வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.