விஜயின் 69-வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வருகையில், அட்லீ மற்றும் ஹெச். வினோத் ஆகிய இருவரின் பெயர் மட்டும் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது.
அட்லீ சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார் இனி ஷூட்டிங் செல்ல வேண்டியது மட்டும்தான் பாக்கி என்று ஒரு பரபரப்பு கோடம்பாக்கத்தில் உருவானது.
ஆனால் இப்போது ஒரு புதிய கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
அஜித் நடித்த ‘துணிவு’ பட வெளியீட்டின் போதே ஹெச். வினோத், விஜயை வைத்து படம் இயக்கினால் நிச்சயம் அரசியல் கதையைதான் எடுப்பேன் என்று சொல்லியிருந்தார். இந்த ஒற்றை வரிதான் விஜயை கவர்ந்திருப்பதாக கூறுகிறார்கள். மேலும் ஹெச். வினோத், விஜய்க்கு கதையும் சொல்லிவிட்டார் என்றும் அந்த திரைக்கதை விஜய்க்கும் பிடித்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இதனால் விஜய் – ஹெச். வினோத் கூட்டணி நிச்சயம் எனவும் கிசுகிசு இருக்கிறது.
விஜய் – வினோத் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தை சன் பிக்சர்ஸூக்கு பதிலாக பெங்களூரைச் சேர்ந்த கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புகள் மிக அதிகம் எனவும் தெரிகிறது. இந்நிறுவனம் சூர்யாவின் ‘கங்குவா’ பட விஷயத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறது.
விஜயின் சம்பளம், ஹெச். வினோத்தின் சம்பளம், பட்ஜெட். கதாநாயகி கால்ஷீட் போன்ற சில விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லையாம். இவையெல்லாம் சுமூகமாக முடிந்தால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
திரையரங்குகளுக்காக திண்டாடும் சந்தானம்
சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இங்கே நான்தான் கிங்’ படம் மே 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் இப்போது பட வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைத்து, மே 17-ல் தான் வெளியீடு என கூறியிருக்கிறார்கள்.
இப்படி படம் வெளியானது தள்ளிப் போக என்ன காரணம் என விசாரித்தால், சந்தானம் படத்திற்கு திரையரங்குகள், அவர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் கிடைக்கவில்லையாம்.
மே 3-ம் தேதி வெளியான ’அரண்மனை -4’ படம் தொடர்ந்து ஓட வாய்ப்பிருப்பதாலும், அமீர் நடிப்பில் வெளியாகும் ‘உயிர் தமிழுக்கு’, கவின் நடித்திருக்கும் ‘ஸ்டார்’ என இருப்படங்கள் மே 10-ம் தேதி வெளியாக இருக்கின்றன.
இதனால்தான் சந்தானம் படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். இதனால் எதற்கு தேவையில்லாத பிரச்சினை. ஒரு வாரம் தள்ளி வெளியிட்டால், ஏதாவது ஒரு படம் சொதப்பினாலும், கூடுதல் திரையரங்குகள் கிடைக்கும் என்பதால், மே 17- ம் தேதி வெளியிடலாம். அந்த தேதியில் வேறெந்த படங்களும் வெளியாகவில்லை என்பதால், வசூலை அள்ளலாம் என படக்குழுவினர் யோசிக்கிறார்களாம்.