ரஜினி அரசியல் சீசன் முடிந்து இது விஜய் சீசன் தொடங்கிவிட்டது.
ஜூன் 17ஆம் தேதி பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறார். விஜய். மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்வு பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் சிறப்பு பரிசையும் கொடுத்தார்.
மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்ததுடன் நிற்காமல் அரசியலையும் கொடுத்திருக்கிறார். சமீப காலமாகவே விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று அவரது பிஆர்ஓக்கள் மூலம் செய்திகள் கசிய விடப்பட்டு வருகின்றன.
லோகேஷ் கனகராஜின் லியோக்குப் பிறகு வெங்கட் பிரபு படத்தில் நடிக்கிறார் அதுதான் அவரது கடைசிப் படம் அடுத்து அரசியல்தான் என்று பதிவிடுகிறார் ஒரு சினிமா பதிவாளர்.
அடுத்த தலைமுறை வாக்களரளை கவர்ந்துவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் மற்றொரு திரை விமர்சகர்.
இந்த புளங்காகிதங்களுக்கிடையே ’ரெண்டு நாள் உள்ள போட்டா தாங்குவாரா?’ என்று கள யதார்த்தத்தை உணர்த்துகிறார் முன்னாள் தயாரிப்பாளரும் இன்னாள் பரபரப்பு பேச்சாளருமான கே.ராஜன்.
விஜய்க்கும் அவரது தந்தைக்கும் எப்போதுமே அரசியல் ஆசை உண்டு என்பது அவரது படங்களைப் பார்ப்பவர்களுக்கும் அவர் பேசும் பேச்சுக்களையும் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். இப்போது தந்தையைக் கழற்றிவிட்டுவிட்டார். தான் மட்டும் களத்தில் நிற்கிறார். தன் படங்கள் ரீலிசாகும் நேரத்தில் ஒரு குட்டிக் கதையை சொல்லி படத்துக்கு கூட்டம் கூட்டுவார்.
விஜய்யின் முந்தைய அரசியல் வாடை கொண்ட நகர்வுகளைப் பார்த்தால் அவரது அரசியலில் உள்ள சமரசங்களும் குழப்பங்களும் தெரியும்.
2006ல் மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது பிரதமர் மன்மோகன் சிங் பொங்கல் சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். அப்போது டெல்லியில் அந்த விழாவில் பங்கு பெற்றார் விஜய். அந்த சமயத்தில் சன் பிக்சர்ஸ் திரைப்பட வெளியீட்டு நிறுவனத்தை துவங்கியிருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு அதற்கடுத்த வருடங்களில் விஜய் நடித்த வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டது. அப்போது திமுகவுக்கு நெருக்கமானவராக விஜய் பார்க்கப்பட்டார். ஏற்கனவே விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திமுக முத்திரை உண்டு.
உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியபோது அதன் முதல் தயாரிப்பான குருவி படத்தின் ஹீரோ விஜய்தான். அந்தப் படத்தின்போதே விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் சிக்கல்கள் ஆரம்பித்துவிட்டன. இது குறித்து சமீபத்திய பேட்டியில் விஜய்க்கும் தனக்கும் சிக்கல்கள் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் இப்போது பேசி தீர்த்துக் கொண்டோம் என்று தெரிவித்திருந்தார் உதயநிதி. இன்றும் திமுகவுக்கும் விஜய்க்கும் விரிசல்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததும் ரஜினி, கமல் உட்பட பல நட்சத்திரங்கள் புதிய முதல்வரான ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால் விஜய் வாழ்த்து சொல்லவில்லை.
2008ல் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தனது ரசிகர்களுடன் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார் விஜய். இந்த உண்ணாவிரதத்தில் அவரது அப்பா சந்திரசேகரும் அம்மா ஷோபாவும் கலந்துக் கொண்டார்கள். தமிழ்நாடு முழுவதும் 37 இடங்களில் போராட்டம் நடப்பதாக விஜய் அறிவித்தார்.
இந்தக் காலக் கட்டத்தில் விஜய் ரசிகர் மன்றத்துக்கு தனிக் கொடி உருவாக்கப்பட்டு உழைத்திடு உயர்ந்திடு என்ற வாசகத்துடன் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஈழப் போரினால் திமுகவுக்கு நெருக்கடி இருந்தது. அந்த சமயத்தில் விஜய் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதை அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக ரசிக்கவில்லை.
2011ல் காவலன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு காரணம் திமுகவினர் என்று விஜய்யின் ஆதரவாளர்கள் கருதினார்கள். பல தடங்கல்களுக்குப் பிறகு படம் வெளியானது.
2011ல் நடந்த பொதுத் தேர்தலில் திமுக தோற்றது. அதிமுக ஆட்சியைப் பிடித்தது. பல தொகுதிகளில் விஜய் ரசிகர் மன்றத்தினர் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளித்ததாக விஜய் ஆதரவாளர்கள் கூறினார்கள். ’அதிமுகவின் வெற்றிக்கு அணிலாக உதவினோம்’ விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்று கூறினார். இதை ஜெயலலிதாவும் அதிமுகவினரும் ரசிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் அம்மா அழைக்கிறார் என்று அதிமுக கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த போது விஜய்யின் பிறந்தநாள் விழாவுக்காக அப்பா அழைக்கிறார் என்று பேனர்கள் கட்டப்பட்டது அதிமுகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
தானே புயல் பாதிப்புகளின் போது நேரடியாக கடலூர் சென்று நிவாரண உதவிகளை மேற்கொண்டார். இதுவும் ஆட்சியிலிருந்த அதிமுகவினருக்கு கடுப்பை ஏற்படுத்தியது.
இந்தப் பின்னணியில் அடுத்த சிக்கல் 2013ல் தலைவா படத்துக்கு வந்தது. தலைவா என்ற தலைப்புக்கு கீழ் Time to Lead – என்று ஆங்கிலத்தில் ஸ்டைலாக போட்டிருந்தார்கள். ஆனால் தலைமையில் இருந்தவருக்கு இந்த தலைமையேற்க நேரம் என்ற வார்த்தைகள் கடுப்பைக் கொடுக்க படத்தை ரீலிஸ் செய்ய இயலவில்லை. ஜெயலலிதாவை சந்திக்க கொட நாடு சாலையில் காத்திருந்து சந்திக்க முடியாமல் திரும்பியதாகவும் செய்திகள் உண்டு. முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என்று கையைக் கட்டிப் பேசிய ஒரு வீடியோவும் வெளியிட்டார். இறுதியில் கெஞ்சிக் கூத்தாடி படம் ஒரு வழியாக வெளியானது, டைம் டூ லீட் என்ற வரி நீக்கப்பட்டு. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாட்டில் நல்லாட்சி தருகிறார் என்று சர்டிஃபிகேட்டும் கொடுத்தார்.
இதற்கு நடுவே 2009ல் ராகுல் காந்தியுடன் சந்திப்பு, 2011ல் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து திடீர் இந்தியன் தாத்தாவாக உருவெடுத்த அன்னா ஹசாரேயுடன் சந்திப்பு என்று ஊறுகாயாக அரசியலைத் தொட்டுக் கொண்டே வந்தார் தளபதி விஜய். 2014ல் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக கோவை வந்திருந்த நரேந்திர மோடியை சந்தித்து பேசினார் விஜய்.
இடையே தனது பட்டத்தையும் மாற்றிக் கொண்டார் விஜய். இளைய தளபதியாகதான் இருந்தார். தளபதி என்று மு.க.ஸ்டாலினைதான் திமுகவின் தொண்டர்கள் அழைத்துக் கொண்டிருந்தார்கள். 2021ல் வெளியான மெர்சல் படத்தில் இளைய தளபதியாக இருந்தவர் தளபதியாக பிரோமோஷன் செய்துக் கொண்டார்.
திமுக, அதிமுகவுடனான மோதல்களைத் தொடர்ந்து மெர்சல் படம் மூலம் பாஜகவினரின் எதிர்ப்பையும் சந்தித்தார். மெர்சல் படத்தில் வந்த ஜிஎஸ்டி, டிஜிடல் இந்தியா பற்றிய வசனம் பாஜகவினருக்கு கடுப்பை ஏற்படுத்தியது. கோயில்களுக்கு பதில் மருத்துவமனைகளை கட்டலாம் என்று பேசியது இன்னும் எரிச்சலைக் கொடுத்தது. விஜய் மீது பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். விஜய்யை மத ரீதியாக ஜோசப் விஜய் என்று தாக்கினர். அவர்களை கிண்டல் செய்வது போல் மெர்சல் பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் ஜோசப் விஜய் என்றே தன்னைக் குறிப்பிட்டார்.
அடுத்து பிகில் படத்தினால் மீண்டும் ஒரு சோதனை, வருமானவரித் துறை வடிவில். விஜய்யின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மாஸ்டர் படத்தில் நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பகுதியில் நடித்துக் கொண்டிருந்த விஜய்யை தங்களது காரிலேயே சென்னைக்கு அழைத்து வந்தார்கள் வருமானவரித் துறையினர். ஏஜிஎஸ் தயாரித்த பிகில் படத்துக்கு வாங்கின சம்பளம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணையின் வழியாகதான் விஜய்யின் சம்பளம் வெளியில் தெரிந்தது. வருமானவரித் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் பிகில் படத்துக்கு 50 கோடியும் மாஸ்டர் படத்துக்கு 80 கோடி ரூபாய் சம்பளமும் விஜய் பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிகழ்கால விஜய்க்கு வருவோம்.
இன்றைய விஜய்க்கு அவருடைய தந்தையுடன் சிக்கல். அரசியல் ஆசையை ஊட்டி வளர்த்த தந்தையுடன் இப்போது முரண்பட்டு, தன் ரசிகர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தள்ளி வைத்திருக்கிறார். ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பார்த்துக் கொள்கிறார்.
அதிகம் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பரிசு கொடுத்து பாராட்டுவதையும் அரசியலாக்கியிருக்கிறார் விஜய். பரிசு வழங்குவதை மாவட்ட ரீதியாக பிரிக்காமல் தொகுதி ரீதியாக பிரித்து 234 தொகுதிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் பாராட்டுக்களையும் வழங்கியிருக்கிறார். 234 தொகுதி என்று பிரித்ததிலேயே அரசியல் தொடங்கிவிட்டது.
அடுத்து அவர் பேசிய விஷயங்கள். பணத்துக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். சிறப்பான கருத்து. தேர்தலுக்கு 15 கோடி செலவழிக்கும் வேட்பாளர் எத்தனை கோடி சம்பாதித்திருப்பார் என்று இன்றைய அரசியல்வாதிகளை மறைமுகமாக குறிப்பிடுகிறார். இது நிகழ்கால அரசியல்.
நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். புதிய, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுவும் அரசியல்தான். எதிர்கால அரசியல்.
அம்பேத்கர், பெரியார், காமராஜரைப் படியுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அவர் சொன்ன இந்தப் பெயர்களும் அவர் சொல்லாத பெயர்களும் அவரது அரசியலை சொல்லுகின்றன. அவரது எதிர்கால அரசியல்.
ஒடுக்கப்பட்டவர்களுக்காக அம்பேத்கர், திராவிடக் கொள்கைகளின் நீட்சிக்காக பெரியார், நேர்மை ஊழலற்ற பிம்பத்துக்காக காமராஜர். இதுதான் விஜய் நடக்கப் போகும் பாதை.
அரசியலுக்கு வருவதாய் சொன்ன ரஜினி கூட, அரசியல் வரவை அறிவித்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்பேன் என்றார். கலைஞர் கட்சி நடத்திய விதத்தை புகழ்ந்தார். ஜெயலலிதாவின் தைரியத்தைப் பாராட்டினார். ஆனால் விஜய் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று யாரையும் குறிப்பிடவில்லை.
ரஜினி பேசிய சூழல் வேறு. இன்று சூழல் வேறு. அதை விஜய் புரிந்திருக்கிறார். அதற்கேற்றவாறு பேசியிருக்கிறார். ரஜினி அன்று பேசிய போது ஜெயலலிதா, கருணாநிதி மறைந்து அரசியல் வெற்றிடம் என்று பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம். அவர்கள் வாக்குகளை கவர அந்தப் பேச்சு தேவைப்பட்டது. இன்று கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத பொதுத் தேர்தல் முடிந்து வாக்குசதவீதம் தெளிவாக பிரிக்கப்பட்டுவிட்டது. இனி அவர்களைப் பற்றி பேசி பயனில்லை என்பதுதான் விஜய்யின் கணக்கு.
சரி, இப்படியெல்லாம் செய்தால் அரசியலில் வெற்றி பெற்றுவிட முடியுமா?
234 தொகுதிகளில் மாணவர்களை கவர்ந்திருக்கிறார். அவர்கள்தாம் எதிர்கால வாக்காளர்கள். அதனால் வாக்களித்துவிடுவார்கள் என்றோரு வாதம். பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு என ஒவ்வொரு வகுப்புக்கும் மூன்று மாணவர்கள் என்றால் ஒரு தொகுதிக்கு 6 மாணவர்கள். 234 தொகுதிக்கு கணக்கிட்டால் 1404 மாணவர்கள். இவர்கள் போதுமா இளம் வாக்களர்களை கவர? சாதனைப் படைத்த மாணவர்களை பாராட்டுவதும் பரிசளிப்பதும் நல்லெண்ணத்தை உருவாக்கும். அதைத் தாண்டி….?
எம்.ஜி.ஆர்., என்.டி.ஆரைத் தவிர இந்திய சரித்திரத்தில் அரசியலில் வெற்றிப் பெற்றவர்கள் எவருமில்லை. அமிதாப் முயற்சித்திருக்கிறார். சிரஞ்சீவி முயற்சிசித்திருக்கிறார். கமல்ஹாசனும் பவன் கல்யாணும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் வெற்றிக்கு மிக அருகில் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இன்னொரு வளர்ப்பான விஜயகாந்த். 2011 பொது தேர்தலில் சோ போன்றவர்களின் தந்திர ஆலோசனையில் சிக்காமல இருந்திருந்தால் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு சக்தியாக இருந்திருப்பார். அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுக, அதிமுகவுக்கு மாற்று என்ற சந்தர்ப்பத்தை இழந்தார்.
விஜயகாந்தின் அரசியல் களப்பணிகளால் ஆனது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளிலும் அவரது குரல் இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் அவர் கால் பதிந்திருக்கும். ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர் போராட்டம் இருக்கும். 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8.4 சதவீத வாக்குகளைப் பெற்றார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10.3 சதவீத வாக்குகளைப் பெற்றது விஜயகாந்தின் தேமுதிக கட்சி. ஆனால் அதிமுக கூட்டணிக்குப் பிறகு தனது தனித்துவத்தை இழந்து இன்று பரிதாபமாய் இருக்கிறார்.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி, ஆன்மிக அரசியல் என்று அதிரடியுடன் ஆரம்பித்தார் ரஜினிகாந்த். ஆனால் கொரோனா, உடல்நலம் என்று அரசியலலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் என்று 2018ல் கட்சி ஆரம்பித்தார் கமல்ஹாசன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.6 சதவீத வாக்குகள். 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் 2.5 சதவீத வாக்குகள். இன்று கட்சி அறிக்கைகளுடன் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழ்நாட்டில் கட்சிஆரம்பித்த நடிகர்கள் யாரும் – நடிகர் திலகம் சிவாஜி உட்பட –வெற்றிப் பெற்றதில்லை.
காரணம் கட்சி பலம் வேறு, ரசிகர் பலம் வேறு.
சிவாஜிக்கும் கமல்ஹாசனுக்கு இல்லாத ரசிகர் மன்றங்களா, ரசிகர்களா? ஆனால் அவை வாக்குகளாக மாறவில்லை. சினிமாவில் நடிக்கிறார் என்பதற்காக மக்கள் சிம்மாசனங்களை தூக்கிக் கொடுத்துவிடுவதில்லை.
எம்.ஜி.ஆருக்கு நடந்த அரசியல் மேஜிக் ஒரு நாளில் நடக்கவில்லை. காங்கிரஸ்,திமுக, அதிமுக என்று நீண்ட அரசியல் சவால்களுக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு வெற்றி கிடைத்தது. என்.டி.ஆருக்கு நடந்த திடீர் அரசியல் மாற்றம் வெறும் அதிர்ஷ்டம் இல்லை. ஆந்திராவில் அன்றைய தன்மான அரசியல் சூழல் அவர் வருகைக்கு உகந்ததாக இருந்தது.
புதிதாய் அரசியலுக்கு வந்து ஆட்சி மாற்றத்தை செய்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. சமீபத்திய உதாரணமாய் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை மட்டும்தான் குறிப்பிட முடியும். அவரும் பல வருடங்கள் ஊழல் எதிர்ப்பு பணியில் ஈடுபட்டப் பிறகே இந்த நிலையை அடைய முடிந்தது.
மாணவர்களை அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிக்கச் சொல்லியிருக்கிறார் விஜய்.