தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்களில் நடித்ததால் தனக்கென ஒரு ரசிகர்கள் ரசிகைகள் வட்டத்தை பெற்றவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டியதால் இவரை மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமானவராக ரசிகர்கள் பார்த்தார்கள்.
இதெல்லாம் விஜய் சேதுபதி நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில்தான். அதற்குப் பிறகு வித்தியாசமான ஹீரோ என்ற இமேஜில் இருந்து கமர்ஷியல் ஹீரோவாக நினைத்தார்.
இங்குதான் அவருக்கு சறுக்கல். பணம் சம்பாதித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்தவரைப் போல, சம்பளம் அதிகம் கொடுக்கும் படங்களில் கதையைப் பற்றி கவலைப்படாமலேயே நடிக்க ஆரம்பித்தார். படங்கள் ஓடவில்லை.
பின்னர் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக இவர் நடித்தப்படங்கள் ஓடினர். இதனால் காஸ்ட்லியான வில்லன் ஆனார்.
இந்நிலையில்தான், இவருக்கு ஹிந்தி வெப்சிரீஸ் வாய்ப்பு கிடைத்தது. அது நன்றாக இருப்பதாக பெயர் வாங்கிய போதே, அட்லீ இவரை பாலிவுட்டில் ஷாரூக்கானுக்கு வில்லனாக அறிமுகப்படுத்தினார்.
இதுவே விஜய் சேதுபதிக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. ஹிந்தியிலும் இப்போது நிறைய வாய்ப்புகள். தமிழில் ஆரம்பத்தில் கையாண்ட அதே பாணியைதான் இப்போதும் கையிலெடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
வந்த வாய்ப்புகளை எல்லாம் எடுத்து கொள்ளாமல், நிதானம் காட்டுகிறாராம். இதன் மூலம் பாலிவுட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தபடியே மற்ற மொழி படங்களில் நடிக்கவேண்டுமென விஜய் சேதுபதி திட்டமிட்டு இருக்கிறாராம்.
அந்தவகையில் இப்போது ‘டங்கல்’ படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி ‘ராமாயணத்தை’ திரைப்படமாக எடுக்க இருக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், கேஜிஎஃப் புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் ஹனுமானாகவும் நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள். இதில் ராவணனின் தம்பி விபீஷணன் ஆக நடிக்க விஜய் சேதுபதியைக் கேட்டிருக்கிறார்களாம்.