No menu items!

அரசியலில் வேகமெடுக்கும் விஜய்

அரசியலில் வேகமெடுக்கும் விஜய்

’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கும் விஜய், இதுவரையில் தனது கட்சி தொடக்கம் குறித்த அறிவிப்பையோ அல்லது ஏதாவது முக்கிய நிகழ்வு குறித்த தனது கருத்தையோ டிஜிட்டல் முறையில்தான் வெளியிட்டு இருக்கிறார். பொதுவாக இது போன்ற முக்கிய நிகழ்வுகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள், பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்களை நேரில் சந்தித்துதான் அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். ஆனால் ஒரு முழுநேர அரசியல்வாதியாக விஜய் இன்னும் களமிறங்கவில்லை.

மேலும் 2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு தனது ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்கும் சூழலைத் தவிர்க்கவும், தேவையில்லாமல் ஏதாவது சிக்கலிலோ அல்லது சர்ச்சையிலோ சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காகவே ’கோட்’ பட ஷூட்டிங்கை ரஷ்யாவில் வைக்க சொன்னார் என்றும் கூறுகிறார்கள்.

மேலும் இந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்று யார் ஆட்சியைப் பிடிக்க போகிறார்கள் என்பதை பொறுத்தே தனது அடுத்தகட்ட நகர்வையும் முடிவு செய்திருக்கிறாராம்.

விஜய் அரசியலில் இப்படி பட்டும் படாமல் இருப்பது கொஞ்சம் கொஞ்சமாக பேசு பொருளாகி வருவதை தவிர்க்க, அவருக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் விஜயை மக்கள் முன் நிற்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்களாம்.

பணியிலிருந்து ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தனது அரசியல் ஆரம்பம் குறித்து அடிக்கடி விவாதித்து வருகிறார். இதையடுத்தே இப்படியொரு திட்டத்தை அவர்கள் கூறியிருப்பதாக தவெக கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

கடந்த வருடம் பன்னிரெண்டாவது மற்றும் பத்தாவது வகுப்பு தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து உற்சாகப்படுத்தியது போல் இந்த வருடமும் விஜயின் பிறந்த நாளன்று ஒரு விழாவை நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாம்.
விஜய் பிறந்த நாள் அன்று அப்படி விழா நடத்தினால் அது அரசியல் விழாவாக இருக்காது. விஜய் என்ற நடிகரின் பிறந்த நாள் கொண்டாட்டமாகதான் இருக்கும் என ஓய்வுப்பெற்ற அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாம்.

இதனால் விஜய் பிறந்த நாளுக்கு முன்பாகவே இவ்விழாவை நடத்தலாம். அப்போது நாட்டின் வருங்கால தலைவர்களாக போகும் மாணவர்கள் மத்தியில், அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினால், அது இருபெரும் விழாவாக இருக்கும். விஜய் பிறந்த நாள் மற்றும் தவெகவின் முதல் கூட்டமாகவும் இருக்கும் என விஜயிடம் கூறியிருக்கிறார்கள். இந்த யோசனை விஜய்க்கு ரொம்பவே பிடித்திருக்கிறதாம்.

இப்போதுதான் பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளின் தேர்ச்சி மதிப்பெண் வெளியாகி இருக்கிறது. அதையடுத்து உடனே அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி செய்தால் அது அவர்களது உயர் படிப்புக்கு உதவும் என்றும் ஒரு நோக்கத்தையும் விஜயிடம் முன் வைத்திருக்கிறார்கள்.

இதனால் விஜய் வெகுவிரைவில் ஒரு அரசியல் கட்சித் தலைவராக மக்கள் முன் நிற்கும் நிகழ்வு ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தவெக வட்டாராத்தில் பேச்சு அடிப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பிறகே, விஜயின் அரசியல் பயணம் ஆரம்பமாக இருக்கிறது. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதைப் பொறுத்து அரசியலில் விஜயின் இருக்குமாம்.

கடந்த முறை அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களைத் தேர்வு செய்ததில் சில குளறுபடிகள் இருந்தன. முதல் முறையாக முயற்சிக்கும் போது இது போன்ற தவறுகள் நடக்கலாம். ஆனால் இந்த முறை அது போன்ற தவறுகள் இருக்க கூடாது என விஜய் கறாராக தவெக நிர்வாகிகளிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.
பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 10 மாணவ மாணவியர்களை மட்டும் அழைத்தால் போதும். இதனால் தேவையில்லாத சர்ச்சைகளைத் தவிர்க்கலாம் என்று இப்போது முடிவாகி இருக்கிறதாம்.

இது தவிர நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகையை ஊக்கத்தொகையாக கொடுக்கலாம் என்று யோசனை சொல்ல்ப்பட்டு இருக்கிறது. ஆனால் எவ்வளவு கொடுக்கலாம் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிகழ்ச்சியில் விஜயின் அரசியல் கன்னிப்பேச்சு யாரையும் அதிகம் சாடாமல், ஆனால் லஞ்சம் ஊழல் குறித்த கருத்துகள் அதிகம் இடம்பெற வாய்ப்புகள் இருக்கிறதாம்.

தனது 69-வது படத்தை முடிக்க இந்த வருடம் இறுதியாகிவிடும் என்பதால், அடுத்த வருடம் முதல் விஜயின் அரசியல் பயணம் சூடுப்பிடிக்குமாம். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் விஜய் – மக்கள் சந்திப்புக்கு அவரது தவெக நிர்வாகிகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படுமாம்.

மக்களுடன் அரசியலையும் கலந்த ஒரு மக்கள் இயக்கம் போல, தவெக-வை முன்னெடுக்கும் யோசனை விஜய்க்கு இருக்கிறதாம்.

சமூக ஊடகங்களை சாதுர்யமாக பயன்படுத்தவும், தவெக நிர்வாகிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுமாம்..

ஆக தனது திரையுலக பயணத்தை அப்படியே அரசியல் பயணமாக மடை மாற்றும் வேலைகளை இப்பொழுதே தொடங்க விஜய் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தவெக நிர்வாகிகள் தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...