திரைப்படங்களில் இடைவேளையைப் பார்த்திருக்கிறோம். இப்போது நடிப்பிலிருந்து இடைவேளை எடுத்துக் கொள்ளப்போகிறார் விஜய். இன்று தமிழ்நாட்டின் நம்பர் ஒன் நட்சத்திரம். அவர் பெயரை சொன்னாலே நூற்றுக் கணக்கான கோடிகள் கொட்டும் சூழலி இந்த முடிவை எடுக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். வெங்கட் பிரபுவின் படம் முடிந்ததும் இரண்டு வருட இடைவேளையாம். இந்த வாரம் பனையூரில் தனது ரசிகர் மன்றத்தினரை சந்தித்து வருகிறார். இது அரசியலுக்கான அஸ்திவாரம் என்று கூறப்படுகிறது.
விஜய் எடுக்கப் போகும் இடைவேளையில் அரசியலில் ஆழம் பார்க்கப் போகிறார் என்கிறது விஜய் வட்டாரம். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு திரையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் யாருமோ ஜொலிக்கவில்லை என்ற சரித்திரத்தையும் அறிந்துக் கொண்டுதான் அரசியலுக்குள் நுழைகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதற்கு அவர் நான்கு வழிகளை பயன்படுத்தப் போகிறாராம்.
முதல் வழி: கல்வியும் மாணவர்களும். இன்றைய மாணவர்கள்தாம் நாளைய வாக்களர்கள் என்பது விஜய்யின் கணக்கு. மாணவர்களுக்கு நல்லது செய்தால் அது மக்களிடம் நல்ல பிம்பத்தை உருவாக்கும். மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்வார்கள். இப்போது ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை கொடுப்பது போல் அடுத்தக் கட்டமாக ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் இந்த பரிசுத் திட்டத்தை விரிவாக்கப் போகிறார். விஜய் என்றால் படிப்பு, கல்வி என்ற பிம்பம் வர வேண்டும் என்ற திட்டம் போடப்பட்டிருக்கிறது.
இரண்டாம் வழி: இது முதல் வழியின் நீட்சி. ஒவ்வொரு தொகுதியிலும் இரவுப் பள்ளிக் கூடங்கள். ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த இரவு நேர பாடசாலைகள் உதவும். அதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மாணவர்களுக்கு பாடங்களில் உதவுவார்கள். முக்கியமாய் பத்தாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நீட் பயிற்சி மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நீட் என்ற சர்ச்சையான தேர்வு முறைக்குள் நுழைய வேண்டாம். தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு அரசியல்தான் பலன் தரும் என்று விஜய் கூறியதாக தகவல்கள் கசிகின்றன.
மூன்றாம் வழி: நடை பயணம். தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் பயணம் செய்ய இருக்கிறார். இது பல அரசியல் தலைவர்கள் கையாண்ட முறை. 2005ல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததும் மதுரையிலிருந்து தமிழக சுற்றுப் பயணத்தை தொடங்கினார். ஆனால் அவர் நடக்கவில்லை, வாகனத்தில் சென்றார். தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் விஜயகாந்த் சென்றார். கட்சி தொடங்கினார் விஜயகாந்த் அதனால் தமிழக சுற்றுப்பயணம் சென்றார். அது போல் தமிழ்நாட்டு சுற்றுப் பயணத்துக்கு ஒரு வலுவான காரணம் வேண்டுமல்லவா? இப்போது சினிமாக்காரர்கள் தங்கள் படங்களை ஊர் ஊராக சென்று பிரபலப்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. அது போன்று லியோ படத்துக்கு ஊர் ஊராக செல்லலாம் என்று ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்துக்கு நகரங்களுக்கு மட்டும் சென்றார்கள். அப்படியில்லாமல் சிறு சிறு ஊர்களுக்கும் செல்லலாம் என்று யோசிக்கப்படுகிறது. அரசியலில் முழுமையாக இறங்காத நிலையில் சினிமா என்று சொல்லி ஊர் ஊராய் போவது பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்று விஜய் முகாம் கருதுகிறது.
நான்காம் வழி: பொதுப் பிரச்சினைகள்.விஜய்யின் குறி 2026. அதற்கான உழைப்பு 2024ல் தொடங்கும். இரண்டு வருடங்கள் பொது மக்களுடன் இணைந்த உழைப்பு. இனி விஜய்யை திரையில்தான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பொதுப் பிரச்சினைகளில் மக்களோடு மக்களாக நிற்கப் போகிறார். அதுதான் அவரது தீவிர அரசியல் முகத்தைக் காட்டப் போகிறது.
இப்படி ஒரு வியூகத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ஆலோசகர்கள். இவற்றில் கல்வி வழி இது வரை பிற அரசியல் தலைவர்கள் செல்லாத வழி, நிச்சயம் பலனளிக்கும் என்று திடமாக நம்புகிறார்கள். கல்வி வழியை அடிப்படையாக வைத்து நடை பயணம், பொதுப் பிரச்சினைகள் என்ற கழக சந்துகளில் நுழைந்து வெற்றியைக் காணலாம் என்று நம்புகிறார்கள் விஜய் வழிகாட்டிகள்.
இப்படி விஜய்யின் அரசியல் திட்டங்கள் கிசுகிசுக்களாய் வந்துக் கொண்டிருக்க, வெங்கட் பிரபு படம் முடிந்ததும் ஷங்கர் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது என்ற கிசுகிசுவும் வந்துக் கொண்டிருக்கிறது.