No menu items!

விடுதலை – விமர்சனம்

விடுதலை – விமர்சனம்

’வேலை முடிந்ததும் போலீஸ் செக்போஸ்ட்டில் ஜீப்பை கொடுத்துவிட்டு போகச் சொல்லும் காவல்துறை அதிகாரி’

‘உடனே மருத்துவமனைக்குப் போகவில்லையென்றால் கரடியால் தாக்கப்பட்ட பெண்ணின் உயிர் போய்விடும். என்ற சூழ்நிலையில் போலீஸ் ஜீப்பை ஒப்படைக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் டிரைவர்.

இந்த சம்பவத்தில், ஒரு உயிரைக் காப்பாற்ற நான் செய்தது சரிதான், மன்னிப்பு கேட்டால் உதவி செய்வதே தவறு என்று ஆகிவிடும், அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் போலீஸ் டிரைவர் சூரி.
ஒரு உயர் அதிகாரி போட்ட உத்தரவை உயிரே போனாலும் மதிக்க வேண்டும். உத்தரவை மீறியதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் சேத்தன்.

இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் இடையே விடாப்பிடியாக தொடரும் பிடிவாதம் எந்த எல்லை வரைக்கும் நீள்கிறது என்பதே 2 மணிநேரம் 25 நிமிடம் 37 விநாடிகள் பரபரக்கும் ’விடுதலை’.

மூலக்கதை இலக்கிய வட்டாரத்தில் அவ்வப்போது பரபரப்பைக் கிளப்பும் ஜெயமோகன். திரைக்கதை வெற்றி மாறன் மற்றும் மணி மாறன்.

சூரி, சேத்தன் இவர்கள் இருவரின் கதாபாத்திரங்களுக்கு இடையே உண்டாகும் பிடிவாதம் படம் நெடுக எதிரொலித்தாலும், போராளிகள், காவல்துறை, அரசாங்கம் என இந்த மூன்று அமைப்புகளுக்கும் இடையே இருக்கும் ஆணவம், கெளரவம், பிடிவாதம், வஞ்சகம், துரோகம், விரோதம், வலி, வேதனை இவற்றுக்கு இடையே மெல்லிய காதலையும் கலந்து தனக்கே உரிய பாணியில் ‘விடுதலை பாகம் -1’ திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

1987-ம் ஆண்டுவாக்கில் சிறுமலை பகுதியில் இருக்கும் கனிம வளத்தை தோண்டி எடுக்க திட்டமிடுகிறது அரசாங்கம். ஆனால் அது மக்கள் வளம் என போராடுகிறது தமிழர் மக்கள் படை. அரசாங்கம், அரசு அதிகாரிகள் எடுக்கும் முடிவை செயல்படுத்த லத்தியையும், துப்பாக்கியையும் கையிலெடுக்கிறது காவல்துறை..

இப்படியொரு வாய்ஸ் ஓவரில் ஆரம்பிக்கும் படம், அடுத்த 10 நிமிடங்கள் மிரளவைக்கிறது.
முதல் காட்சியிலேயே, சிலர் ரயிலைக் குண்டு வைத்து தகர்க்கிறார்கள். ரயில் பாலம் உடைந்து, ரயில்பெட்டிகள் தடம்புரண்டு கிடக்கின்றன, எங்கும் மரண ஓலம்.. காவல்துறை வருகிறது, ஆம்புலன்ஸ்கள் சைரனை அலறவிட்டப்படி வருகின்றன. அமைச்சரும் வருகிறார். இந்த சூழலை ’நுணுக்கமான வித்தைகளுடன்’ 10 நிமிடம் ஒரே ஷாட்டில் காட்டி ஒபனிங்கிலேயே மிரளவைக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

மலைப்பகுதியில் கனிம சுரங்கம் வரக்கூடாது என போராடும் தமிழர் மக்கள் படையைச் சேர்ந்தவர்கள்தான் இந்த ரயிலைக் குண்டு வைத்து தகர்த்திருப்பார்கள் என காவல்துறை தனது வேட்டையைத் துவங்குகிறது.
இந்த வேட்டையில் தமிழர் மக்கள் படையினரால், தலைவனாக கொண்டாடப்படும் ’வாத்தியார்’ விஜய் சேதுபதியைக் குறிவைக்கிறது காவல்துறை. இறுதியில் என்ன நடக்கிறது என்பதே விடுதலை முதல் பாகம்.

கதையின் நாயகனாக சூரி. வெற்றிமாறன் இப்படியொரு கதாபாத்திரத்திற்கு தன்னை தேர்ந்தெடுத்தது சரிதான் என்பதை உறுதிப்படுத்தும் வெரிஃபைட் ப்ளூ டிக் வாங்கியிருக்கிறார். காமெடி என்ற பெயரில் சூரி செய்யும் வழக்கமான உருட்டல்கள் எல்லாம் மிஸ்ஸிங். சண்டைக்காட்சிகளிலும்கூட தனது பாடி லாங்க்வேஜ் முடிந்தவரை இல்லாமல் பார்த்து கொண்டிருக்கிறார். காமெடியனாக பிஸியாக இருந்து, அப்புறம் ஹீரோவான வேகத்திலேயே படங்கள் இல்லாமல் வீட்டில் பிஸியாக இருக்கும் இதர காமெடி நடிகர்கள் பட்டியலில் சூரி சேராமால் இருப்பாராக.

அநேகமாக சூரிக்கு விருதுகள் கிடைக்கலாம்.

சூரிக்கு ஜோடி பவானி ஸ்ரீ. மலைப்பகுதி பெண்களுக்கே உரிய அந்த வெளந்தியான குணத்தை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறார். நயன்தாரா மாதிரி ஒரு கமர்ஷியல் ஹீரோயினுக்கான அம்சங்கள் இல்லை. ஆனால் நடிப்பு வருகிறது. நடிப்பு வந்தால் வாய்ப்புகள் வராது. இந்த க்ளிஷேவை பவானி ஸ்ரீ உடைப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இனி தமிழ் சினிமாவில் ‘சிங்கம்’ சூர்யாவை தவிர்த்து கமிஷனர், டிஎஸ்பி என்றால் நிச்சயம் முதல் சாய்ஸாக கெளதம் வாசுதேவ் மேனன் இருப்பார் என நம்பலாம். ஐபிஎஸ் படித்தவரை போல, பாடிலாங்வேஜ் லுக் எல்லாமே பக்காவாக இருக்கிறது. டிஎஸ்பியாக வேட்டையாடி விளையாடி இருக்கிறார்.

சேத்தன் பிடிவாதம் பிடிப்பது, சூரியைப் பார்க்கும் போதெல்லாம் மன்னிப்பு கேட்க வருகிறாரோ என்று நினைப்பது போன்ற காட்சிகளில் நமட்டு சிரிப்பு வரவைக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு முதல் பாகத்தில் பெரிய வேலை இல்லை. 1987 கால கதை என்பதால் என்னவோ அவருக்கு தலையில் ஒரு விக்கை மாட்டிவிட்டிருக்கிறார்கள். வேறு எதுவும் இப்போதைக்கு இல்லை. ஆனால் இரண்டாம் பாகத்தில் இவருக்கான சம்பவங்கள் இருக்கின்றன என ஒரு டீசரை படத்தின் இறுதியில் வைத்து எதிர்பார்பை உருவாக்கி இருப்பது ட்ர்போ ட்விஸ்ட்.

கம்பெனி இ – போலீஸ் பட்டாலியனில் போலீஸாக நடித்திருக்கும் அனைவருக்கும் ஒரு கைத்தட்டல் கொடுக்கலாம்.

வழக்கமாக வெற்றி மாறன் படங்களில் ட்யூன் போடும் ஜி,வி. பிரகாஷூக்குப் பதிலாக இந்தப்படத்தில் ஏன் இளையராஜா என்று கேட்பவர்களுக்கு ‘காட்டுமல்லி’ பொக்கே கொடுத்து வரவேற்று இருக்கிறார் இளையராஜா. பின்னணியில் பின்னியிருக்கிறார். கேப் விட்டாலும் நான் டாப் என்பதை மீண்டும் நினைவூட்டி இருக்கிறார் இளையராஜா.

படத்தில் அதிகம் மெனக்கெட்டு இருப்பவர் அநேகமாக ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்தான் போல. இப்படியொரு லொகேஷன்களில் ஷூட் செய்வது இதுநாள் வரை ஜாலியாக கமர்ஷியல் படங்களை அசால்ட்டாக ஷூட் செய்தவருக்கு கொடுத்த பனிஷ்மெண்ட்டாக கூட இருக்கலாம். ஒளிப்பதிவு மிரட்டல்.

விஜய் சேதுபதியை போலீஸ் துரத்தும் காட்சிகளில் நம்மையும் கடந்து போலீஸ் துரத்துவது போன்ற உணர்வை அளிக்கிறது ஸ்டண்ட் சிவா, பீட்டர் ஹெய்ன் இருவரின் ஆக்‌ஷன் டைரக்‌ஷன்.

வெற்றி மாறனின் படங்களில் வழக்கமாக இருக்கும் போலீஸ், சித்ரவதை, ரத்தம் இதிலும் அதிகம். ஏகப்பட்ட இடங்களில் சென்சார் போர்ட் போட்ட கண்டிஷனால் மியூட் செய்திருக்கிறார்கள். அவ்வளவு கெட்ட வார்த்தைகள் .போலீஸினால் மக்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் மொசைக் செய்திருக்கிறார்கள். காட்சிகள் யதார்த்தமாக இருக்க இந்த அம்சங்கள் உதவலாம். ஆனால் இதை இனி வெற்றி மாறன் குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நக்சலைட்கள் பற்றிய கதையாக காட்டப்பட்டாலும், நக்சலைட்களின் அதன் உண்மையான குணாதிசயத்தை காட்டுவதில் கொஞ்சம் மிஸ் செய்தது போன்ற உணர்வு உண்டாகிறது.

ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கினாலும், போக போக பரபரப்பாகும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் மலையேற முடியாமல் தவித்து, பிறகு மளமளவென மலையேறுகிறது.

’என்னை எல்லோரோட முன்னாடி அம்மணமாக்கி உட்கார வைச்சப் பிறகுதான் நான் உனக்கு சமமா தோணுதுல’ என்று விஜய் சேதுபதி சொல்லும் அந்த காட்சி ‘விடுதலை -2 பாகத்திற்கு’ விறுவிறுப்பு ஏற்றியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...