தனது படம் வெளியாகும் போதே அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கில் மும்முரமானவது விஜய்யின் வழக்கம். இதே பாணியில்தான் இப்போது ‘லியோ’ வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகையில், அவற்றைப் பற்றி கவலைப் படாமல் தனது அடுத்தப்பட ஷூட்டிங்கில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் ‘விஜய் 68’ படத்தின் பூஜை சமீபத்தில்தான் நடைபெற்றது. ’கொலை’ படத்தில் நடித்த மீனாட்சி செளத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பல வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்த முன்னாள் ஹீரோ மோகன், பிரபுதேவா, ஜெயராம், பிரஷாந்த், ஸ்நேகா, லைலா, யோகி பாபு, விடிவி கணேஷ், அஜ்மல் அமீர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்திலும் இருக்கிறது. வெங்கட் பிரபு படமென்றால் அவருடைய கம்பெனி ஆர்டிஸ்ட்கள் எல்லோருமே இருப்பார்கள். இந்த முறையும் வைபவ், ப்ரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என அனைவரும் இந்தப் படத்திலும் தலைக்காட்ட இருக்கிறார்கள்.
வழக்கம் போல் வெங்கட் பிரபுவின் சகோதரர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இவர் ‘கீதை’ என்ற தோல்விப் படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு தயவினால் மீண்டும் விஜய்யுடன் கைக்கோர்த்திருக்கிறார்.
சித்தார்த்தா நுநி இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்ள இருக்கிறார். வெங்கட் ராஜேன் எடிட்டிங்கை கவனிக்கப் போகிறார். ஆக்ஷன் காட்சிகளுக்கான அதிரடியை திலீப் சுப்பராயன் வடிமைக்க இருக்கிறார்
விஜய் படத்தில் பாடல்கள் பொதுவாக ஹிட் ரகமாக இருக்கும். அதனால் விஜய் பட பாடல்களுக்கென ஒரு வியாபாரம் இருப்பது வாடிக்கை. அந்த வகையில் இப்படத்தின் அனைத்து மொழிகளுக்கான ஆடியோ உரிமையை டி-சிரீஸ் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் 68 ஷூட்டிங் முழுவீச்சில் ஆரம்பிப்பதற்கு முன்பே, அப்படத்தின் கதை களம் குறித்த கிசுகிசு கிளம்பி இருக்கிறது. அதாவது இப்படம் டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கலாம் என்று ஒரு யூகம் இருக்கிறது. அதேபோல் தற்போது எல்லாவற்றிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கும் செயற்கை நுண்ணறிவு பின்னணியில் நடைபெறும் கதை என்றும் ஒரு பேச்சு அடிப்படுகிறது.
ஆனால் இப்படத்தில் அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்கிறது வெங்கட் பிரபுவுக்கு நெருங்கிய வட்டாரம். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு பிட் நோட்டீஸ் போட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு கதையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.