”என்ன திடீர்னு மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தியிருக்கிறாரு? போன வாரம் ஓபிஎஸ் இதே மாதிரி ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துனாருன்றதுக்காகவா?” என்று ரகசியாவிடம் கேள்வியை வைத்தோம்.
”உள்ள வந்து உக்காரகூட இல்லை… அதுக்குள்ள கேள்வியா” என்று அலுத்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தாள் ரகசியா.
“இந்தக் கூட்டம் ஒபிஎஸ்க்காக இல்லை, பாஜகவுக்காக. ஒபிஎஸ் கூட சேருங்கனு எடப்பாடியை பாஜக தொல்லைப் பண்ணிக்கிட்டு இருக்கு. ஓபிஎஸ் வேண்டாம்கிறதை நான் சொல்லல மொத்தக் கட்சியுமே சொல்லுதுனு அதிகாரப்பூர்வமா காட்டுறதுக்குதான் இந்தக் கூட்டம். அது மட்டுமில்லாம இன்னொரு சமாச்சாரத்தையும் பாஜகவுக்கு சொல்லாம சொல்லியிருக்கு.”
“என்னது அது?”
“எடப்பாடி கூட கோவிச்சுக்கிட்டு இருந்த சி.வி.சண்முகம் கூட்டத்துக்கு வந்திருந்தாரு பாத்திங்களா?”
“நானே கேக்கணும்னு நினைச்சேன். சி.வி.சண்முகம் ஏன் அப்செட்?”
“அவருக்கு எடப்பாடி தனக்கு முக்கியத்துவம் கொடுக்கலைனு வருத்தம் இருக்கு. அது மட்டுமில்லாம பாஜக அழுத்தங்களுக்கு எடப்பாடி தலையாட்டுறாருன்ற கோபமும் இருக்கு.”
“வருத்தம் இருக்குன்ன்னு சொல்ற ஆனா இந்த ஆலோசனைக் கூட்டத்துல கலந்துக்கிட்டாரே?”
”ஆமாம், எடப்பாடி அவரை சமாதானம் பண்ணியிருக்கிறாரு. கூடவே ஒரு அசைன்மெண்டும் கொடுத்திருக்கிறார்”
“என்ன அசைன்மெண்ட்?”
“பாஜகவை கடுமையா விமர்சிக்கணும். இதுதான் அசைன்மெண்ட். அதனாலதான் அந்த ஆலோசனைக் கூட்டத்துல பாஜக கூட்டணி வேண்டாம்னு சி.வி.சண்முகம் ஸ்ட்ராங்கா பேசுனார். ஏற்கெனவே பாஜகவும் திமுகவும் கூட்டணி அமைக்கப் போகுதுனும் கொளுத்திப் போட்டிருந்தார்.”
“நீ இப்படி சொல்ற… யாரும் கூட்டணியைப் பத்தி பேசக் கூடாதுனு எடப்பாடி ஸ்ட்ரிக்டா சொன்னார்னு நியூஸ் வருதே?”
“அப்படிதான் சொல்லுவாங்க. நல்லா பேசுங்கனா சொல்லுவாங்க? பாஜக கூட்டணிக்கு கட்சிக்குள்ள நிறைய எதிர்ப்பு இருக்குன்றதைக் காட்டுனாதான் பாஜக கொஞ்சம் பயந்து அதிமுக சொல்ற மாதிரி கேக்கும். அதிமுக சொல்ற மாதிரி கேக்கலனா பாஜக கூட்டணி இருக்காதுன்றதை இந்த ஆலோசனைக் கூட்டத்துல சொல்லாம சொல்லியிருக்காங்க. ஒபிஎஸ் கிடையாது, பாஜக பணிந்து போகணும். இதுதான் ஆலோசனைக் கூட்டம் மூலம் வெளியில வந்திருக்கும் அரசியல் செய்தி.”
“சி.வி.சண்முகம் திமுகவுல சேரப் போறதா நியூஸ் வந்ததே?”
“அதெல்லாம் கிடையாது. திமுகவை அவர் கன்னாபின்னானு திட்டியிருக்கிறாரு. போன வாரம்கூட அவருக்கும் அமைச்சர் பொன்முடிக்கும் சண்டை. அதனால அதற்கு வாய்ப்பில்லை.”
“திமுக எதிர்ப்பு சரி, எதற்கு சண்முகம் பாஜகவை எதிர்க்கிறாரு?”
“அவர் சார்ந்த பகுதிகள்ள மைனாரிட்டி வாக்குகள் அதிகம். பாஜக கூட்டணில இருக்கிறதுனால மைனாரிட்டி வாக்குகள் அவருக்கு கிடைக்க மாட்டேங்கிறது. அந்தக் கடுப்பும் பாஜக மேல அவருக்கு இருக்கிறது.”
“அப்போ பாஜக – அதிமுக கூட்டணி கஷ்டம்… ஒபிஎஸ் அதிமுகவுல சேர்க்கப்பட மாட்டார் அதானே?”
“இல்லை. கூட்டணி இருக்கும் ஆனா, பாஜகவுக்கு குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்படும். பதவி எதுவும் கேக்காம சாதாரண தொண்டரா ஓ.பன்னீர்செல்வம் வந்தா எடப்பாடி சேர்த்துக் கொள்ளலாம் என்று அதிமுகவில் சிலர் பேசியிருக்கிறார்கள். அதனால் ஓபிஎஸ்க்கு முழுசா கதவை மூடல”
”அதிமுக இப்படி ஸ்ட்ராங்க இருக்கிறாங்களே… பாஜக என்ன செய்யப் போகிறது?”
“பாஜகவின் தலைவர் நட்டா இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதே அதிமுகவை சமாதானம் செய்து தமிழ்நாட்டு பாஜகவை சரி செய்யதான்னு நியூஸ் வந்திருக்கு. தமிழ்நாட்டு பாஜகவுக்கு இப்ப கஷ்ட காலம். திருச்சி சூர்யா, டெய்சி, காயத்ரி ரகுராம் போதாதுனு இப்ப புதுசா பாஜகவுல சேர்ந்த அலிஷாவும் தன் பங்குக்கு ஆபாச குட்டையைக் கிளறியிருக்கிறார். இதனால டெல்லி தலைமை செம டென்ஷன்ல இருக்கிறதாம். அண்ணாமலையிடம் விசாரித்திருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை. அது மட்டுமில்லை வாரிசு அரசியல் பிரச்சினையை சரியாக தமிழ்நாட்டு பாஜக கையாளவில்லை என்றும் அவர் மீது குற்றம் சொல்லப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சரானதை எதிர்த்து தீவிரமாய் அரசியல் செய்திருக்க வேண்டும் என்றும் மேலிடம் சொல்லியதாம்.”
”அண்ணாமலை என்ன செய்யப் போகிறார்?”
“அவருக்குப் பிரச்சினையே ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் அவரை எதிர்ப்பதுதான். அதனால் அந்த அமைப்பை சார்ந்தவர்களுக்கு தூது விட்டுக் கொண்டிருக்கிறார்.”
“திமுகவிலயும் கொஞ்சம் பேர் வருத்தத்துல இருக்கிறதா கேள்விப்பட்டேனே.”
“ஆமாம். அமைச்சர் பதவி கிடைக்கலைன்னு டி.ஆர்.பி. ராஜா வருத்தத்துல இருக்கார். அவருக்காக டி.ஆர். பாலு இன்னும் ஸ்டாலின்கிட்ட பேசிட்டுதான் இருக்கார். அவரும் கூடிய சீக்கிரம் பதவி கொடுக்கறதா சொல்லி இருக்காராம். அநேகமா ஜனவரி 9-ம் தேதிக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு அறிவாலயத்துல பேசிக்கறாங்க. இந்த முறை டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் கூடவே தமிழக அரசின் தலைமைக் கொறடாவான கோவி செழியனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.”
“ராகுல் காந்தியோட பாதயாத்திரையில கமல்ஹாசன் கலந்துகிட்டாரே. என்ன திடீர்னு கமலுக்கு ராகுல் பாசம்?”
“எப்பவுமே கமலுக்கு ராகுல் மீது பாசம் அதிகம். இதற்கு முன்பும் ராகுலை சந்தித்திருக்கிறார். காங்கிரசில் கமல் சேரப் போகிறாரா என்ற பேச்சு கூட அப்போது இருந்தது. இப்ப அந்த நட்பு இன்னும் பலமாகியிருக்கு. பாதயாத்திரைல ராகுல் காந்தி தனக்கு கொடுத்த வரவேற்பால கமல் உச்சி குளிர்ந்து போயிருக்கார். அதேநேரத்துல உளவுத் துறை அதிகாரிகள் ராகுல் காந்தியோட நடைப்பயணத்துல கலந்துகிட்ட முக்கிய விஐபிகள், நடிகர்களை தொடர்புகொண்டு ‘இந்த நடைப்பயணத்துல நீங்களா கலந்துக்கிட்டீங்களா… இல்லை ராகுல் காந்தி அழைச்சாரான்னு விவரம் கேட்டுட்டு இருக்காங்க. இது தொடர்பா ஒரு அதிகாரி கமல்ஹாசனை தொடர்புகொண்டு கேட்க, அவர் காச் மூச்னு கத்தி இருக்காரு. பயந்துபோன அந்த அதிகாரி டெலிபோன் லைனை துண்டிச்சுட்டாராம். உடனே ராகுல் காந்திக்கு போன் போட்டு பேசின கமல்ஹாசன் நடந்த விஷயங்களை அப்படியே சொல்லி இருக்கார். அதுக்கு ராகுல் காந்தி, உங்களை மட்டுமில்லை, இப்படி நிறைய பேரை உளவுத்துறை அதிகாரிகள் விசாரிச்சு இருக்காங்கன்னு சொல்லி இருக்கார்.”
“நாடாளுமன்ற தேர்தல்ல காங்கிரஸ் கட்சியோட கமல் கூட்டணி அமைப்பாரா?“
“கமல், காங்கிரஸ், திமுக கூட்டணி அமையலாம்னு பேச்சு இருக்கு. அது மட்டுமில்லாம திமுக கூட்டணிக்கு பாமக வருதுனும் திமுக வட்டாரத்துல பேசிக்கிறாங்க.”
“பாமகவை திமுக கூடணியில சேர்க்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சம்மதிக்குமா?”
”அதுபத்தி திமுக பெருசா கவலைப்படல. ஒருவேளை விடுதலைச்ச் சிறுத்தைகள் கோவிச்சுட்டு போனா 2 சீட் மிச்சமாகும்னு நினைக்கறாங்களாம்.”
“புது அமைச்சர் உதயநிதி செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஏதாவது தகவல் உண்டா?”
“கட்சியின் சீனியர் துரைமுருன் நிறைய அட்வைஸ் உதயநிதிக்கு கொடுத்திருக்கிறார். அதுல முக்கியமானது கலைஞர் மாதிரி எல்லோர்கிட்டயும் நல்லா பழகணும் என்பது. மூத்த தலைவர்கள் எல்லோர்கிட்டயும் நெருக்கமா பழகுனதுனாலதான் அவரால கட்சியைக் காப்பாற்ற முடிஞ்சது. கட்சிக்கு நெருக்கடி வந்தா தோள் கொடுப்பது நமக்கு நெருக்கமானவர்கள்தாம். அதனால எல்லோர்கிட்டயும் நெருக்கமா பழகணும்னு சொல்லியிருக்கிறார். அதை அப்படியே ஏத்துக்கிட்டாராம் உதயநிதி.”
“பரவாயில்லையே அட்வைஸ்லாம் கேக்குறாரா?”
“உதயநிதி பத்தி இன்னொரு நியூஸ்ஸும் சொல்றேன். ராகுல் காந்தி நடை பயணத்துல உதய்யும் கலந்துக்கப் போறார். அதற்கான ஏற்பாடுகளை காங்கிரசும் திமுகவும் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. தேசிய அளவுல இதற்கு முக்கியத்துவம் கிடைக்கணும்னு திட்டமிட்டிருக்காங்க.”
“ஜனவரில சட்டப் பேரவை கூடுதே… உதயநிதிக்கு முதல் வரிசைல இடம்னு சொல்லியிருக்காங்களே?”
”இப்ப திமுகவுக்கு அது கவலையில்லை. கவர்னர் என்ன பேசப் போறார்ன்றதுதான் கவலை. அவர் ஏதாவது எடக்கு மடக்கா பேசுனா அதை அவை குறிப்புலருந்து நீக்க முடியுமா? என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்காங்க.”
”முதல்வர் கலந்துக்கிற கூட்டத்துல எல்லாம் கவர்னர் அடக்கிதான் வாசிக்கிறார். அதனால எந்தப் பிரச்சினையும் வராது.”
“பிரச்சினை வராதுனு நீங்க சொன்னதா சபாநாயகர் அப்பாவுக்கிட்ட சொல்லிடறேன்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.