தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவுபெற்றதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதன்படி பாஜக தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக 10 இடங்களிலும், தமாகா 3 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. மற்ற சிறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தாமரை சின்னத்தில் தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவரது நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் அணியினரை தாமரை சின்னத்தில் நிற்குமாறு பாஜகவினர் நிர்பந்தித்ததாகவும், இதை ஏற்க மறுத்த ஓபிஎஸ் தேர்தலில் போட்டியிடாமல் பாஜக கூட்டணி ஆதரவு மட்டும் அளிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் கூட்டணி பற்றிய தனது முடிவை நாளை அறிவிப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.
தொகுதி பங்கீடு பற்றி செய்தியாளர்களிடம் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமாகாவைப் பொறுத்தவரை 3 இடங்களில் போட்டியிடுகின்றனர். அது தொடர்பாக அவர்கள் அறிவிப்பார்கள். அது குறித்து நான் அறிவிப்பது முறையாக இருக்காது. அதேபோல், ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, அது தொடர்பாகவும் நான் கூறுவது சரியாக இருக்காது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பார்” என்றார். பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு முதல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும் அவர் கூறினார்.
அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்கள்
கோவை – சிங்கை ராமச்சந்திரன்
திருச்சி – கருப்பையா
பெரம்பலூர் – சந்திரமோகன்
மயிலாடுதுறை – பாபு
ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார்
தருமபுரி – அசோகன்
திருப்பூர் – அருணாசலம்
நீலகிரி – லோகேஷ்
வேலூர் – பசுபதி
திருவண்ணாமலை – கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி – குமரகுரு
சிவகங்கை – சேகர் தாஸ்
நெல்லை – சிம்லா முத்துச்சோழன்
புதுச்சேரி – தமிழ்வேந்தன்
தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி – பசிலியா நசரேத்
விளவங்கோடு இடைத்தேர்தல் – ராணி
திமுக கூட்டணிக்கு கருணாஸ் ஆதரவு
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த மக்களவை தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்.
மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற, மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க ‘இண்டியா’ கூட்டணியை 2024 மக்களவை தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.
மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அதிமுகவை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.