நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் பலர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக் கணக்கை காட்டுவதைப் பார்த்து மலைத்துப் போயிருப்போம். இப்படிப்பட்ட வேட்பாளர்களுக்கு மத்தியில் கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதிக்காக தாமஸ் ஐசக் என்ற வேட்பாளர் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
பத்தனம்திட்டா தொகுதியில் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளராக நிற்கும் தாமஸ் ஐசக், தனது மிகப்பெரிய சொத்தாக குறிப்பிட்டுள்ளது புத்தகங்களைத்தான். தன்னிடம் 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு 9.6 லட்ச ரூபாய் என்றும் தனது சொத்துக்கணக்கில் காட்டியிருக்கிறார் தாமஸ் ஐசக்.
கேரளாவின் முன்னாள் நிதியமைச்சரும், 4 முறை எம்எல்ஏவாக இருந்தவருமான தாமஸ் ஐசக்குக்கு சொந்தமாக வீடு இல்லை. தனது சகோதரனின் வீட்டில்தான் தன் புத்தகங்களோடு அவர் வாழ்ந்து வருகிறார். 20 ஆயிரம் புத்தகங்களைத் தவிர பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருக்கும் 4 லட்ச ரூபாய் சேமிப்பு மட்டும்தான் இவரது சொத்து. இந்த சொத்துகளையும் சுமார் 50 புத்தகங்களை எழுதி சம்பாதித்துள்ளார் தாமஸ் ஐசக்.
என் மனைவி தீவிர ராமர் பக்தை – ஆ.ராசா ஒப்புதல்
என் மனைவி தீவிர ராமர் பக்தை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
குன்னூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இது தொடர்பாக ஆ.ராசா பேசியதாவது:
என் மனைவி சனிக்கிழமை ராமர் கோவிலில் கும்பிட்டதுடன், வியாழன் எனக்காகவும், திங்கள் சிவனுக்காகவும், 3 நாட்கள் விரதம் இருந்தார். அவரது பூஜை அறை இன்றும் இருக்கிறது.
நான் ஒருநாளும் உள்ளே சென்றது இல்லை. அந்த அம்மாவிற்கு நம்பிக்கை இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இங்குள்ள எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பக்தி என்பது தனிமனித தேவைக்காக தான். என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம் தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் மீது கோபம் இல்லை. இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
மோடிக்கு முதல்வரின் 3 கேள்விகள்
பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
- தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
- இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்ட போதும், தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
- பத்தாண்டுகால பா.ஜ., ஆட்சியில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?.