‘நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பக்கம் சாய்வதா? பாஜக பக்கம் சாய்வதா என்ற குழப்பத்தில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி, இன்று காலையில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜ்யசபா எம்பி தொகுதியைப் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து சேலத்தில் இன்று நடக்கும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்கிறார்.
மாற்றம் வரவேண்டும் – அன்புமணி
பாஜக – பாமக கூட்டணி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “10 ஆண்டுகாலமாக பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற மக்களவை தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் இருக்கிறது.
ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். எங்கள் கூட்டணி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க மிகப்பெரிய வெற்றி பெறும். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றார்.
தமிழக அரசியலில் மாற்றம் – அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் மக்கள் சக்தியாக, தனிப்பெரும் அரசியல் இயக்கமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்து பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின், இந்தியாவின் தனிப்பெரும் அரசியல் தலைவராக திகழும் ராமதாஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் அன்பை பெற்றவர் ராமதாஸ். தமிழகத்தில் புரட்சிகரமான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது அவரது மிகப்பெரிய கனவு.
ராமதாஸ் யோசித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களை பிரதமர் மோடி நாடு முழுவதும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். 2024 மக்களவை தேர்தலில் மக்கள் வெற்றியை கொடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருக்கிறோம். தமிழகத்தின் அரசியல் நேற்று இரவில் இருந்து மாறியிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது.
தனிமையில் அதிமுக
பாஜக கூட்டணியில் பாமக இணைந்த்தை தொடர்ந்து அதிமுக தனிமையில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இப்போது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நட்த்தி வந்தாலும், கூட்டணி குறித்த உறுதியான தகவல்கள் ஏதும் இன்று காலை வரை வரவில்லை. கூட்டணி ஏதும் முடிவாகாத சூழலில் வரும் 24-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்
கூட்டணி பற்றிய முடிவுகள் ஏதும் வராத நிலையில் தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இருந்து இன்று காலை முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தங்கள் கட்சிக்கு 1 ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிடிவாதமாக இருப்பதாக அக்கட்சி பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.