காதலிக்கலாம் என்று ஒரு முடிவுக்கு வரும்போது உண்மையான காதல் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலை இன்றைய இளசுகளுக்கு புரியவைப்பதுதான் ‘திருச்சிற்றம்பலம்’.
இந்த சிங்கிள் லைனை வைத்து கொண்டு ஒரு ஃபீல் குட் திரைக்கதையை வைத்து சுவாரஸ்யமான படமாக எடுத்து இருக்கிறார் இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர்.
சமீப காலமாகவே கோலிவுட்டில் அருவா, கத்தி, துப்பாக்கியை முதுகிலும் மடியிலும் வைத்து கொண்டு வெறித்தனமாக சுற்றிக் கொண்டிருந்தார் தனுஷ். படிப்பை பாதியில் விட்டுவிட்டு, அப்பாவை மதிக்காமல் வரிந்து கட்டிக்கொண்டு எடக்குமடக்கு பேசும் கதாபாத்திரத்தின் ஸ்பெஷலிஸ்ட் நீங்கள்தான் அந்த கேரக்டரில் நீங்கள் நடித்த பெரும்பாலான படம் ஹிட் என்று தனுஷூக்கு இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர். நினைவூட்டி இருப்பார் போல. ஆமாம் என்று களத்தில் இறங்கி பழைய தனுஷாக வந்திருக்கிறார் தனுஷ்.
நடிப்பில் தனுஷ் ஒரு அசுரனாக இருந்தாலும், தனது டயலாக் டெலிவரி, எக்ஸ்ப்ரஷன்ஸ் என தான் ஒரு பெர்ஃபார்மன்ஸ் ராட்சசி என நிரூபித்திருக்கிறார் நித்யா மேனன். இப்படியொரு ஒரு பெண் நமக்கெல்லாம் ஃப்ரெண்ட்டாக கிடைக்க வாய்ப்பு இருக்காதா என படம் பார்க்கும் ஆண்களை ஏங்க வைக்கும் தோழியாக ஷோபனா கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
மகனின் நடவடிக்கைகள் பிடிக்காத கோபக்கார அப்பாவாக பிரகாஷ் ராஜ். சில் பீர் அடித்தபடி இவர்கள் இருவருக்கும் நடுவே சமரசம் செய்யும் தாத்தாவாக பாரதி ராஜா. .
பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலோ என்னவோ ராஷி கன்னா, தனுஷூக்கு 2 கிஸ், 3 ஹக் கொடுப்பதற்கு மட்டுமே வந்து போகிறார்.
என்னடா இது ராஷி கன்னாவுக்கு இப்படியொரு நிலைமையா என்று யோசிக்கும் போது, படத்தில் இரண்டாம் பாதியில் நானும் இருக்கிறேன் என்று எண்ட்ரீ ஆகிறார் ப்ரியா பவானி சங்கர். முன்பெல்லாம், இரண்டு மூன்று காட்சிகளில் நடிப்பதற்கு ஜூனியர் ஆர்டிஸ்ட்டையோ அல்லது ரீச் கேர்ள் நடிகையையோ நடிக்க வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் வெறும் மூன்று காட்சிகளுக்கு ப்ரியா பவானி சங்கரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இப்படியே இன்னும் இரண்டு படங்கள் போனால், ப்ரியா பவானி சங்கர் மீண்டும் சின்னதிரைக்கே திரும்ப வேண்டியதுதான். இனி நியூஸ் வாசிக்க முடியாது என்பதால் டிவி சீரியல்களுக்கு இவருக்கு டிமாண்ட் அதிகமிருக்கும்.
பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், தனுஷ், நித்யா மேனன் என இந்த நான்கு பேருக்கும் இடையில் நடப்பதுதான் ஒட்டுமொத்த படமும். ஆனாலும் அதை ரசிக்கும் படி செய்கிறது வசனம். காமெடிக்கு என்று யாரும் இல்லையென்றாலும், கதாபாத்திரங்களின் வசனத்தில் இருக்கும் நக்கல் நையாண்டி டைமிங் நன்றாக எடுப்பட்டு இருக்கிறது.
‘மேகம் கருக்காதா பெண்ணே..’ பாடலில் டான்ஸூம், மியூசிக்கும், ’மின்சாரக் கனவே’ படத்தின் வெண்ணிலவே பாடலைப் போல ரசிக்க வைக்கிறது. இப்பொழுதெல்லாம் அனிரூத் மெட்டுகளில் ஹிட் கொடுக்கிறார். ஆனால் பின்னணி இசையில் பழையப் படங்களின் டராக்குகளை எடுத்து, கொஞ்சம் சவுண்ட் டிங்கரிங் செய்து ரீப்ரொடியூஸ் செய்வதை வழக்கமாக்கி இருக்கிறார்.