இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இளையராஜாவின் மகளான பவதாரிணி, இனிமையான பல பாடல்களைப் பாடியுள்ளார். அவரது குரல் ஒரு மயிலிறகைப் போல் ரசிகர்களுக்கு மென்மையான இதத்தை தரும்வகையில் இருக்கும்.
பிரபுதேவா நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான ‘ராசய்யா’ படத்தில் வரும் ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் வரும் ‘அய்யோ அய்யோ’, தாமிரபரணி படத்தின் ‘தாலியே தேவையில்ல’ உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். பாரதி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மயில் போல’ பாடலுக்கு அவர் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றார்.
இளையராஜா மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பல படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இப்போதுகூட 2 படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்த சூழலில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் 4-ம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன் கொழும்பு சென்றிருந்தார். கொழும்பில் வாடகைக்கு வீடொன்றை எடுத்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு அங்கு ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சிக்காக கடந்த 24-ம் தேதி கொழும்பை வந்தடைந்த இளையராஜாவும் அவரை அடிக்கடி சென்று பார்த்துவந்தார். இந்நிலையில் பவதாரணியின் உடல்நிலை நேற்று முன்தினம் மோசமானது.
இதையடுத்து, பவதாரணி கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே அவரது மறைவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
பவதாரிணியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், திரையுலக நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்:
பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்:
பவதாரணி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.
கனிமொழி எம்.பி:
’அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார்கள். பவதாரணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மான்:
மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த நேரத்தில் உங்களுடன் துணை நிற்கிறேன்.
கமல்ஹாசன்:
மனம் பதைக்கிறது. அருமை சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்.
வடிவேலு:
பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் இன்னைக்கு நொறுங்கிப்போய் இருக்கிறார்கள். தைப்பூச நாளில் தங்கை பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் இளைப்பாருவார்கள்.