கேரளா.
மூன்று பெண்கள்.
கட்டாய மதமாற்றம்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு.
இந்த நான்கு களங்களையும் வைத்து கொண்டு ‘’The Kerala Story’ என்று ஒரு படம். ’த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு பிறகு இந்தியா முழுவதிலும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.
‘த கேரளா ஸ்டோரி’ படத்தின் வெளியான போதே புகார் ஒன்று எழுந்தது. கேரள காவல்துறை அதை எப்படி சட்டரீதியாக அணுகுவது எப்படி என்ற குழப்பதில் மூழ்கியது.
காரணம், அந்த டீசரில் இருந்த விஷயம் அப்படி. கேரளாவில் இருந்து 32,000 பெண்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தீவிரவாதிகளாகி இருக்கிறார்கள் என்ற ’கன்னி’ வெடிகுண்டை தூவியது.
இதைப் பார்த்த சில அரசியல்வாதிகள், த கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென்றார்கள்.
அரவிந்தாக்ஷன் என்னும் பத்திரிகையாளர், இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்த விசாரணை வேண்டுமென கேரள முதல் அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தை கேரள காவல்துறைக்கு அனுப்பி வைத்தது கேரள முதல்வர் அலுவலகம்.
’விசாரணை ஆரம்பமாகிவிட்டது. எந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதற்கான சட்டரீதியான கருத்து கேட்கப்படிருக்கிறது’ என்று திருவனந்தப்புரத்தில் நடைபெற்ற சந்திப்பில் திருவனந்தப்புர காவல் ஆணையாளர் ஸ்பர்ஜன் குமார் சொன்னார்.
இது உண்மைக்கதை என்று குறிப்பிட்டு இருப்பதால், ’த கேரளா ஸ்டோரி’ படத்தை எடுத்தவர்கள் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது.
2021-ல் ஒரு ஊடகத்திற்கு பதிலளித்த ’த கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர், படத்தில் நாங்கள் குறிப்பிட்ட அந்த எண்ணிக்கையானது, கேரளா சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி குறிப்பிட்டதை வைத்தே சொல்லப்பட்டிருக்கிறது என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் தோரயமாக 2,800 முதல் 3,200 இளம் பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவருகின்றனர். அதனால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 32,000 பெண்கள் மதம் மாறியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட தை அடிப்படையாக வைத்தே நாங்களும் படத்தில் சொல்லியிருக்கிறோம் என்றார் இயக்குநர்.
ஆனால் இதற்கெல்லாம் எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராய்ந்தறியும் ஆல்ட்நியூஸ்.இன் என்னும் தளம் தெரிவித்தது. 2012-ல் உம்மன் சாண்டி, 2006-ம் ஆண்டிலிருந்து 2,667 இளம் பெண்கள் இஸ்லாம் மத த்திற்கு மாறியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதில் ஆண்டுக்கு எவ்வளவு பேர் மதம் மாறுகிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.
20216-ம் ஆண்டு 21 பேர் கொண்ட ஒரு குழு, கேரளாவிலிருந்து கிளம்பி இஸ்லாமிக் ஸ்டேட் ஜிகாதிஸ்ட் மிலிட்டரி க்ரூப்பில் சேர்வதற்காக சென்றிருக்கிறார்கள். இதில் ஒருவர் மாணவி. தனது திருமணத்திற்கு முன்பாக இஸ்லாம் மதத்திற்கு மாறியவர். இந்தியாவைவிட்டு அவர் கிளம்பிய போது அவர் 8 மாத கர்ப்பிணி.
2021-ல் ஆப்கானிஸ்தானில் தலீபன்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பிறகு, கேரளாவில் இருந்து 4 இளம் பெண்கள் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பில் சேர்ந்தவர்கள் இப்போது சிறையில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இப்படியொரு சூழலில், பல எதிர்ப்புகளுக்கிடையில் ‘த கேரளா ஸ்டோரி’ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் இளம் பெண்கள் கதாபாத்திரங்களில் அடா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி மற்றும் சித்தி இதானி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சுதீப்தோ சென் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
‘த கேரளா ஸ்டோரி’ படம் வெளியான 12 நாட்களிலேயே, சுமார் 156.69 கோடி வசூல் செய்திருப்பதாக அப்படத்தின் இயக்குநர் சுதீப்தோ சென் கூறியிருக்கிறார். இந்த வசூல் சாதனையின் மூலம், இந்தியாவில் பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் மிக அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையைத் தட்டிச்சென்றிருக்கிறது ‘த கேரளா ஸ்டோரி’.
இதுவரை பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் வரிசையில் வசூலில் சாதனையைப் படைத்திருந்த, கங்கனா ரனவத் நடித்த ‘தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்’ [Tanu Weds Manu Returns] படத்தை இப்படம் வசூலில் முந்தியிருக்கிறது. இப்படம் வெளியான இரண்டாவது வாரத்தில் 50 கோடி வசூல் செய்திருக்கிறது.
இந்தியாவில் பெண்களை மையமாக கொண்ட, அதிக வசூல் செய்த டாப் – 3 திரைப்படங்கள்
- த கேரளா ஸ்டோரி [12 நாட்கள் நிலவரப்படி] – 156.69 கோடிகள்
- தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் – 150.71 கோடிகள்
- கங்குபாய் கதியாவாடி – 132 கோடிகள்
இப்படியொரு சாதனையைப் படைத்திருக்கும் இப்படம், 2023-ம் ஆண்டைப் பொறுத்தவரை, அதிகம் வசூல் செய்த இரண்டாவது படமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளியான ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்திருக்கும் ‘ து ஜூதி மெய்ன் மக்கார்’ [Tu Jhoothi Main Makkaar] படத்தின் வசூலான 147 கோடியையும் தாண்டியிருக்கிறது. வசூலில் முதலிடத்தில் ஷாரூக்கான் – திபீகா படுகோன் நடித்த ’பதான்’ படம் முன்னிலை வகிக்கிறது. இப்படம் இதுவரை 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
தமிழ் நாட்டில் இப்படம் 19 மல்ட்டிஃப்ளெக்ஸ்களில் திரையிடப்பட்டது. ஆனால் போதுமான எண்ணிக்கையில் படம் பார்க்க மக்கள் வராததால் மல்ட்டிஃப்ளெக்ஸ் உரிமையாளர்கள் இப்படத்தை திரையிடுவதை நிறுத்த முடிவு செய்திருக்கிறார்கள், மற்றப்படி இப்படம் திரையிடப்படுவதில் அரசு எந்தவிதமான தடையையும் விதிக்கவில்லை என்று தமிழ் நாடு அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.
ஆனால் மறுபக்கம் மேற்கு வங்காள அரசு, அம்மாநிலத்தில் இப்படம் திரையிடப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. வெறுப்புணர்வை பரப்பும், திரிக்கப்பட்ட உண்மைகளை அடிப்படையாக கொண்ட படமாக இருப்பதால், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளையும், வகுப்புவாத ஒற்றுமைக்கு எதிராகவும் இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.