தமிழ் சினிமாவில் கதையைத் திருடுவது என்பது மிகவும் சகஜமான சமாச்சாரம். இதுபற்றி கேட்டால் ‘இன்ஸ்ப்ரேஷன்’ என்ற ஒரே வார்த்தையில் அந்த பஞ்சாயத்தை பரணில் ஏற்றி வைத்துவிடுவார்கள். இது உலகறிய நடக்கும் திருட்டுத்தனம். ஆனால் திரைப்படத்துறையிலேயே இருக்கும் விவரமான ஆட்களையும், அசராமல் ஏமாற்றும் கில்லாடிகளும் இருக்கதான் செய்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கும் திருட்டுத்தனங்களில் முக்கியமான டாப் 5 த தில்லாலங்கடிகள் இதோ உங்களுக்காக…
இந்த மாதிரியான திருட்டுத்தனத்தை திரைப்படத்துறையில் இருக்கும் அனைவரும் செய்வதாக நினைக்கவேண்டாம். சிலபேர் மட்டுமே இந்த மாதிரியான, தில்லாங்கடிகளின் மூலம் கரன்ஸியில் கொழிக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் ரசிகர் மன்றம் வைத்து கொண்டாடதான் செய்கிறோம். என்பதை நினைவில் கொள்க.
தில்லாலங்கடி 1
’நோகாமல் நொங்கு எடுப்பது’ போல என்பார்களே அந்த ஃபார்மூலாவில் வருகிறது இந்த அசகாய தில்லாலங்கடி. புதுமுகங்கள் நடிக்கும் படங்களைத் தயாரிக்க ஆர்வக்கோளாறுடன் களத்தில் இறங்கும் பல அனுபவமில்லாத தயாரிப்பாளர்கள், அப்படத்தை எடுத்து முடித்து வெளியிடுவதற்குள் மறு ஜென்மம் எடுத்துவிடுவார்கள். கடைசியில் கந்துவட்டி உதவியுடன் கஷ்டப்பட்டு அப்படங்களை வெளியிட்டாலும், பல படங்களுக்கு ஓபனிங் கிடைக்காது. இந்த தயாரிப்பாளர்கள்தான் நோகாமல் நொங்கு எடுக்கும் நம்ம கில்லாடியின் இலக்கு. ஒரு கட்டத்தில் பணம் கொடுத்த ஃபைனான்சியர் அப்பாவி தயாரிப்பாளர் கழுத்தில் கத்தியை வைப்பார். அந்த நேரம் பார்த்து சரியாக எண்ட்ரீ கொடுப்பார் ஏதாவது முக்கிய சேனலில் பவர்ஃபுல்லான இடத்தில் இருக்கும் பார்ட்டி ஒருவர். ‘என்ன சார் நல்லப் படம் எடுத்துட்டு ரொம்ப கஷ்டப்படுறீங்க போல. உங்கப் படத்தோட சேட்டிலைட் உரிமையை நல்ல விலைக்கு வாங்கிக்குறேன்’ என்பார். நைசாக பேசி வெறும் இருபது லட்சங்களுக்குள் வியாபாரத்தை முடித்துவிடுவார். இந்த பணமாவது கிடைத்ததே என்று அத்தயாரிப்பாளரும் உரிமையைக் கொடுத்து விடுவார். இதற்கு பிறகுதான் நம்ம கில்லாடி தனது தந்திரத்தை கையிலெடுப்பார். அவர் நட்பில் இருக்கும் சேனலில் ஒரு பில்டப் கொடுத்து இப்படத்தின் உரிமையை ஒரு கோடி வரைக்கும் விலைப் பேசிவிடுவார். கடைசியில் நம்ம கில்லாடிக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் சுமார் முப்பது முதல் அறுபது லட்சம் வரை லாபம். இதுவே ஒரு தனி பிஸினெஸாக மேற்கொள்ளப்பட்டு வருவது சம்பந்தப்பட்ட சேனல்களுக்கே தெரியும். ஆனாலும் கரன்ஸி கலாட்டா தொடரதான் செய்கிறது. ஓடிடி-க்கு போகலாம் என்றால் புதுமுகங்கள் படத்திற்கு ஒடிடி நிறுவனங்கள் பெரிய தொகை கொடுப்பதில்லை. அப்படியே அந்நிறுவனங்கள் வாங்கினாலும் அதை ப்ரமோட் செய்யமாட்டார்கள். இதனால் தயாரிப்பாளர் தனது சொந்த செலவில் செய்தி தாள்களிலும், இணையதளத்திலும் விளம்பரம் செய்ய வேண்டியிருக்கும். இதையும் கணக்கு பண்ணி, ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சரளமாக பேசும் டிப்டாப் பேர்வழிகள் ப்ரொடக்ஷன் மேனேஜர்கள் மூலமாக தயாரிப்பாளர்களை அணுகி ஒடிடி-யில் விற்று தருகிறேன் என்று கமிஷன் வாங்கிவிட்டு எஸ்கேப் ஆவதும் தற்போது அதிகரித்து இருக்கிறது. இதில் ப்ரொடக்ஷன் மேனேஜருக்கும் ஒரு கமிஷன் போகும் என்பது தனிக்கதை.
தில்லாலங்கடி – 2
தொடர்ந்து இரண்டுப் படங்கள் நன்றாக ஓடினால் போதும், அப்புறம் சிலருக்கு ஒஸியிலேயே மீட்டர் ஓடும். ’இவரோட இரண்டும் மெஹா ஹிட். இதேவேகத்துல இவரை வைச்சு நாம் படமெடுத்தா அது பம்பர் ஹிட்.’ சில தயாரிப்பாளர்கள் மனதில் இப்படிதான் கனவுகள் டாப் கியரில் பறக்கும். அப்படியே கட் பண்ணினால் இவர்கள் அந்த ஹீரோ அல்லது இயக்குநரின் வீட்டு வாசலில் வெள்ளையும் சொள்ளையுமாய் நிற்பார்கள். தலையைச் சொறிந்தபடியே கால்ஷீட் கேட்பார்கள். அடுத்தது பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான். ஹிட் பார்ட்டி ஒரு பெரும் தொகையை அட்வான்ஸாக கேட்பார். அடுத்த விநாடியே அட்வான்ஸ் சூட்கேஸிலிருந்து கைமாறிவிடும். கட் பண்ணினால ஒரு வருடம் ஓடிப்போயிருக்கும். ஹிட் பார்ட்டி வீட்டுவாசலில் மேற்படி தயாரிப்பாளர் பெட்ஷீட் விரித்து படுக்கும் நிலைக்கு போயிருப்பார். காரணம் அட்வான்ஸாக கொடுத்த தொகைக்கான வட்டி பல மடங்கு எகிறியிருக்கும். ’சார் நம்ம படம்..கால்ஷீட்…’ என்று இழுக்கும் தயாரிப்பாளரிடம், ‘சார் என்ன வைச்சுகிட்டா இல்லைன்னு சொல்றேன். பழைய கமிட்மெண்ட். தட்ட முடியல. வேணும்னா நீங்க கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்கிக்கோங்க’ என்று வாங்கியதை சிலர் திருப்பிக் கொடுப்பதும் உண்டு. சிலர் கொடுக்காமல் டிமிக்கி கொடுப்பது உண்டு. மொத்ததில் அந்த அட்வான்ஸ் தொகையில் ஹிட் பார்ட்டி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருப்பார். ஒரு வருடத்தில் அதன் விலை மூன்று மடங்கு ஏறியிருக்கும். அவர் எடுக்கும் அந்த லாபத்திற்கு இங்கே தயாரிப்பாளர் அட்வான்ஸ் என்கிற பெயரில் வட்டியைக் கட்டிக்கொண்டிருப்பார்.
தில்லாலங்கடி – 3
அழகோடு அறிவும் கலக்கும் போதுதான் இந்த கலர்ஃபுல் தில்லாலங்கடி அரங்கேறுகிறது. சில பெரிய பேனர்களில் நடிக்கும் ஒரு சில நடிகைகள் அப்படத்திற்காக கொடுக்கப்பட்ட பட்டுப்புடவைகள், டிஸைனர் புடவைகள், காஸ்ட்லியான மாடர்ன் டிரெஸ்களை அப்படியே லவட்டி விடுவார்கள். போனால் போகட்டும் என்று பெரிய தயாரிப்பாளர்களும் விட்டுவிடுவார்கள். இப்படியே போக போக அந்த நடிகையின் வீட்டிலேயே ஒரு பொட்டிக் வைக்குமளவுக்கு குவிந்து கிடக்கும் ஓஸி காஸ்ட்யூம்கள். ஏதாவது ஒரு அப்பாவி தயாரிப்பாளர் சிக்கினால் அவருக்கு கலர்ஃபுல் ஆப்புதான். ‘என்னோட சொந்த காஸ்ட்யூமையே யூஸ் பண்ணிக்குறேன். எல்லாம் ஃபாரீனுக்கு ட்ரிப் அடிச்சப்ப வாங்கின காஸ்ட்லியான காஸ்ட்யூம் சார். பாட்டுக்கு விதவிதமா போட்டு அசத்திடலாம். ஒரு அமெளண்ட் கொடுங்க போதும்’ என்று ஒரு வெயிட்டான பில்லை அவர் கையில் திணிப்பார். லம்ப்பாக ஒரு தொகையை அடிப்பார். இதில் சில நடிகைகள் படு உஷாரான தில்லாலங்கடிகள். ஒரு படத்தின் பாடல் காட்சிக்கு பயன்படுத்திய காஸ்ட்யூமை, வேறோரு படத்தின் பாடல் காட்சிக்கு பயன்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் ஏகப்பட்ட மியூஸிக் சேனல்களில் பல படங்களின் பாடல்கள் மாறி மாறி போடும் போது ஒரே காஸ்ட்யூமை இரண்டுப்பட பாடல்களில் யூஸ் பண்ணினால தெரிந்துவிடும் என்ற முன்னெச்சரிக்கைதான் காரணம்.
தில்லாலங்கடி – 4
மும்பை நடிகைகளில் பலர் பறந்துக்கொண்டே அடிக்கிற ஃப்ராட் இது. ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பையிலிருந்து வரும் நடிகை, அம்மா அல்லது அப்பா, அஸிஸ்டெண்ட், டச்சப் பாய், மேக்கப் மேன், ஹேர் டிரெஸ்ஸர் என மளிகைச் சாமான் பட்டியலைப் போல் ஒரு பெரிய பட்டியலைப் போட்டு கொடுப்பார். ’ஜி இவர்களுக்கு மும்பை டு சென்னை, பிறகு சென்னை டு மும்பைக்கு ஃப்ளைட்டில் ஓபன் டிக்கெட் போட்டுடுங்க ஜி’ என்று குழையும் தமிழில் சொல்வார். ஷீட்டிங் முடிந்ததும் மும்பைக்குக் கிளம்புவது போல ப்ரொடக்ஷன் காரில் ஏறுவார். கார் அப்படியே மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கு போகாமல் டேக் டைவர்ஷன் எடுக்கும். அவர் நடிக்கும் வேறோருப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நிற்கும். அங்கேயே அந்தப்பட ப்ரொடக்ஷன் பார்ட்டிகளிடம் ’ஜி.. ஃப்ளைட் டிக்கெட் போட்டுட்டீங்களா?’ என்று கேட்பார். அது ஓ.கே ஆனதும் முந்தையப் படத்திற்காக போட்ட ரிட்டர்ன் டிக்கெட்டுகளை கேன்ஸல் செய்துவிட்டு அதில் வரும் பணத்தை தனது அக்கெளண்ட்டில் ஏற்றி விடுவார். இப்படியே படத்திற்குப்படம் பறக்கும் இந்த டிக்கெட் தில்லாலங்கடி.
தில்லாலங்கடி – 5
ப்ரொடக்ஷன் மேனேஜர்களில் சிலர் அடிப்பதுதான் கமர்ஷியல் சினிமாவின் அதிரடி காட்சிகளை மிஞ்சும் நுணுக்கமான சமாச்சாரங்களாக இருக்கும். ஒவ்வொரு நாளுக்குமான ஷூட்டிங் செலவுகளைப் பட்டியலிடுவார்கள் இவர்கள். அதில் ஒரு நாள் ஒரு காட்சிக்கு பூக்கள் தேவைப்படுகிறது என்றால், செலவு பட்டியலில் முதலில் பூக்கள் செலவு என்று ஒரு தொகையைக் குறிப்பிடுவார். அடுத்து பத்துபதினைந்து செலவுகளை எழுதிய பின்பு புஷ்பம் என்று அதற்கும் ஒரு தொகையைக் குறிப்பிடுவார். அடுத்து சில செலவுகளை எழுதிய பின்பு ஃப்ளவர்ஸ் செலவு என்று மூன்றாவதாகவும் ஒரு தொகையைக் குறிப்பிடுவார். இப்படி பூக்களுக்கான செலவை மூன்று வெவ்வேறு பெயர்களில் செலவு வைத்து கணக்கை முடித்துவிடுவார். இந்த மாமங்கத்தை படத்தின் செலவு பற்றிய ஆடிட்டிங்கின் போது பார்க்கும்போது ஆடிட்டர் கொஞ்சம் ஆடிப்போவார். தயாரிப்பாளர் காதில் ஒரு பூவையும் இப்படி சொருகிவிடுவதில் இப்படியும் ஒரு தில்லாலங்கடி இருக்கிறது.