No menu items!

போதை பிடியில் தமிழ் சினிமா! – சிக்கலில் கோலிவுட்!

போதை பிடியில் தமிழ் சினிமா! – சிக்கலில் கோலிவுட்!

தமிழ் திரையுலகம் கொஞ்சம் கிறுகிறுத்துப் போய்தான் இருக்கிறது.யார் யாரையெல்லாம் விசாரணைக்கு அழைப்பார்கள்.

யார் யாரைப் பற்றி போட்டுக்கொடுத்து பஞ்சாயத்திற்குள் இழுத்துவிடுவார்கள்.

இப்படியொரு மனநிலையில்தான் கோலிவுட் இருக்கிறது.

இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு மிகப்பெரும் தடுமாற்றத்திற்கு கோலிவுட் உள்ளானது இல்லை என்பதே உண்மை.

ஃபைனான்ஸ் பிரச்சினை, கதைத் திருட்டு, மீட்டர் வட்டிக்கு சொத்தையே பிடுங்கியது, நட்சத்திர காதல், கடன் தொல்லையால் தற்கொலை இப்படி பல சர்ச்சைகளுக்கு உள்ளானாலும், இந்த முறை கோலிவுட்டை தாக்கியிருக்கும் பிரச்சினை ஒரு பெரும் சுனாமியைப் போல் இருப்பதுதான்.
தமிழ் சினிமாவில் தற்போது முக்கியத்துவம் பெற்று வரும் தயாரிப்பாளர்களில் ஒருவராகி இருப்பவர் ஜெ.எஸ்.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஜாபர் சாதிக். இவர் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு இருக்கிறார் என்ற குற்றச்சாட்டே இப்போது கோலிவுட்டில் பீதியைக் கிளப்பி இருக்கிறது.

தேசிய புலனாய்வு முகமை வெகுவிரைவிலேயே தனது விசாரணை வளையத்திற்குள் ஜாபர் சாதிக்குக்கு நெருக்கமான, வியாபாரத்தில் தொடர்புடைய சினிமா புள்ளிகளை கொண்டுவந்துவிடும் என்ற பயமே இந்த பரபரப்புக்கு காரணம்.

ஜெ.எஸ்.எம் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் நடித்து இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’, அடுத்து அதர்மம்’ பட இயக்குநர் ரமேஷ் பாலகிருஷணன் இயக்கத்தில் ‘மாயவலை’, கயல் ஆனந்தி நடிப்பில் ‘மங்கை’ என அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வருகிறார்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உட்பட வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தல்கள் மேற்கொள்ள முக்கிய நபராக இருந்திருக்கிறார் என்பதே இப்போது அவர் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், டெல்லியில் சில நாட்களாகவே போதைப் பொருள் கும்பல்களை வேட்டையாடுவது தொடங்கியிருக்கிறது. பல சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படியொரு சோதனையில்தான் தெற்கு டெல்லியில் இருக்கும் இரண்டு குடோன்களில் சுமார் 1700 கிலோ போதைப் பொருட்கள் இருப்பதை சிறப்பு போதை தடுப்பு பிரிவு கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

1700 கிலோவா என அதிர்ச்சியடைந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு டெல்லி போலீஸூடன் சேர்ந்து களத்தில் இறங்கி சோதனைகளை நடத்தியது. அப்போதுதான் வேறு கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் வசமாக சிக்கியிருக்கிறார்கள். இந்த மூன்று பேரிடம் சுமார் 50 கிலோ போதைப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பொடியுடன் போதை பொருளை கடத்த இவர்கள் திட்டமிட்டு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதன் மதிப்பு சந்தை மதிப்பில் சுமார் 2000 கோடி என்கிறார்கள்.

அதாவது தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பொடியுடன் சூடோப்பெட்ரின் எனப்படும் போதைப் பொருளை கலந்து கடத்த முயன்று இருக்கிறார்கள். இப்படி சுமார் 3,500 கிலோ சூடோபெட்ரினை கடத்தியிருப்பதாக தெரிய வந்திருக்கிறதாம்.

இப்படி தயாரிக்கப்படும் சரக்கை டெலிவரி செய்ய 2 நிறுவனங்களும், அதை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல 2 லாஜிஸ்டிக் நிறுவனங்களும், அந்த சரக்கை சாதாரண பயன்பாட்டு தயாரிப்பாக காட்டுவதற்கு 2 உணவு நிறுவனங்களும், அதை மார்க்கெட் செய்ய ஒரு மருந்து நிறுவனமும் இருப்பதாக விசாரணையில் தெரிவந்திருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

வேட்டையில் சிக்கிய இந்த மூன்று பேருக்கும் பின்னணியில் யாரென்று விசாரித்த போதுதான் ஜாபர் சாதிக் பெயரை அந்த மூவரும் கூறியிருக்கிறார்களாம். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமையக அதிகாரிகள், இங்குள்ள மண்டல அதிகாரிகளுடன் ஆலோசித்திருக்கிறார்கள்.
ஆனால் இங்கு ஜாபர் சாதிக்கை எங்கும் பார்க்க முடியவில்லை. அவரது மொபைல் போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறதாம். அதேபோல் ஜாபர் சாதிக்குடன் பிஸினெஸில் கூடவே இருந்த அவரது வலது கரம் மற்றும் இடதுகரமாக இருந்த அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லையாம்.

அமீர் நடிக்க ரமேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாயவலை’ படம் முடிவடைந்துவிட்டது. ஒரு சில காட்சிகளை மட்டுமே மீண்டும் ஷூட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதில் ஜாபர் சாதிக் இணை தயாரிப்பாளர்.

அடுத்து அமீர் இயக்கி நடிக்கும் படம் ‘இறைவன் மிகப் பெரியவன்’. இதன் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக். மேலும் இவரது தம்பி மைதீன் இப்படத்தில் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

அடுத்து கயல் ஆனந்தி நடிப்பில் மார்ச் மாதம் வெளியாக காத்திருந்த படம் ‘மங்கை’ இதன் வெளியீடு இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா கூட சில தினங்களுக்கு முன்புதான் கோலாகலமாக நடைபெற்றது.

அதேபோல் ‘இறைவன மிகப்பெரியவன்’ பட ஷூட்டிங்கும் முன்பின் அறிவிப்பின்றி, எப்போது மீண்டும் ஷூட்டிங் என்பது தெரியாமல் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஜாபர் சாதிக் தலைமறைவால் இந்தப் படங்கள் வெளியாவதில், ஷூட்டிங்கை தொடங்குவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.

சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் யாராவது ஒருவர் திடீர் பிரபலம் ஆவார். அந்த மாதிரியான திடீர் பிரபலங்களுடன் சேர்ந்து படம் பண்ண தானாக ஒரு கூட்டம் சேரும். அவருக்கு மாலை மரியாதை என ஆர்ப்பாட்டம் நடக்கும். இப்படி கூட்டம் சேரும் பலருக்கு அந்த திடீர் பிரபலத்தின் பின்னணி என்ன என்று தெரியாது. இதனால்தான் அவ்வப்போது பலர் தமிழ் சினிமாவில் வந்து போவதை அதிகம் பார்த்திருக்கமுடியும். ஆனால் இப்படி திடீர் பிரபலமானவர்கள் யாரும் இந்தளவிற்கு பெரும் இடியாப்பச் சிக்கலில் மாட்டியது இல்லை.

இரண்டு நாட்களுக்கு முன்புவரை வழக்கம் போல் சினிமா பேச்சு, பிஸினெஸ் சந்திப்பு என பிஸியாக இருந்த ஜாபரும், அவரது சகோதரர்களும் திடீரென யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனது அவருக்கு இப்போது சினிமாவில் நெருக்கமாக இருக்கும் அனைவருக்குமே அதிர்ச்சியாக இருக்கிறதாம்.

ஜாபர் சாதிக் ஆரம்பத்தில் ஒரு சின்ன பட்ஜெட் படமெடுத்து இருந்ததாகவும். அப்படம் பாதியில் நின்றுப் போனதாகவும், இதனால் ’கனவு வீரர்கள்’ நிறுவனத்திடமிருந்து, அதன் உரிமையை அவரே வாங்கிவிட்டதாகவும், அதை அமீரிடம் கொடுத்ததாகவும் ஒரு கிசுகிசு இருக்கிறது. இப்படிதான் ஜாபர் சாதிக்கின் சினிமா வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள்..

மேலும் ஜாபர் சாதிக் மீது இப்படியொரு குற்றச்சாட்டு எழுந்ததுமே, அவரை திமுக கட்சியைவிட்டு நிரந்தரமாக நீக்கி இருக்கிறது. இது குறித்த அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் உடனடியாக அறிவித்திருக்கிறார். இவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.

ஜாபர் சாதிக்குக்கு இவ்வளவு படம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு இங்குள்ள சினிமா புள்ளிகளிடம் எந்த பதிலும் இல்லை. யாருக்கும் தெரியவும் இல்லை. ஆனால் இவ்வளவு பணம் புழங்க வேண்டுமென்றால், ஹவாலா அல்லது சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம் என சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.

இதனால் இதில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு, அடுத்து அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை என பல தரப்பில் இருந்து ஜாபர் சாதிக்குக்கு நெருக்கமானவர்கள் மீது கிடுக்கிப்பிடி வரக்கூடும் என்பதால் கோலிவுட்டில் பெரும் நடுக்கம் ஏற்பட்டு இருப்பதை உணரமுடிகிறது.
.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...