நடிக்க வந்த சில வருடத்திலேயே தேசிய விருதை வென்றார் கீர்த்தி சுரேஷ். இதனால் அவர் கதாநாயகியை மையமாக கொண்ட கதைகளில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அதேநேரம் இவர் கமர்ஷியல் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தப் படங்களும் பெரிதாக போகவில்லை.
இதனால் ரொம்பவே மன வருத்தத்தில் இருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் எதிர்பாராத வகையில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த ‘மாமன்னன்’ பெரியளவில் பிரபலமடைந்து இருக்கிறது.
இந்த வரவேற்பினால் பெரியளவில் அறுவடை செய்தது அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ்தான். ஆனால் இப்போது கீர்த்தி சுரேஷூம் அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.
இதுவரையில் 1.5 கோடி முதல் 2 கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் இப்போது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.
புதிதாக கதை சொல்ல வருபவர்களிடம் 3 கோடி சம்பளம் கொடுத்தால்தான் கால்ஷீட் என்று அடம்பிடிக்கிறாராம்.
மறைந்த விவேக்கிற்கு உயிர் கொடுக்கும் ஷங்கர்!
ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், இதெல்லாம் சாத்தியமா என்று யோசித்த விஷயங்களை எல்லாம் இன்று நடத்தி காட்டிவருகிறது.
ஏஐ தொழில்நுட்பம் இன்று சினிமாவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறது.
ஏதாவது தொழில்நுட்பம் வந்தால் அதை முதலில் கையிலெடுப்பவர் நம்மூர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். வழக்கம்போல் இந்த ஏஐ தொழில்நுட்பத்தை தனது ‘இந்தியன் 2’ படத்தில் பயன்படுத்தலாமா என்று யோசித்து வருகிறாராம்.
’இந்தியன் 2’ சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. சில நாட்கள் ஷூட்டிங் நடந்த பிறகு, இப்படம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது நினைவிலிருக்கலாம்.
இந்த சூழலில்தான் கோவிட் உலகையே பதம் பார்த்தது. உலகமே இரண்டாண்டு காலம் வீட்டிற்குள் முடங்கிப் போனது. பலர் உலகை விட்டு பிரிந்து போனார்கள். இந்தப் பட்டியலில் நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு போன்றவர்களும் அடக்கம். இவர்கள் இருவரும் ’இந்தியன்’ படத்தில் நடித்திருந்தார்கள். அதனால் ‘இந்தியன் 2’ படத்திலும் சில காட்சிகள் நடித்திருந்தார்கள்.
’இந்தியன் 2’ கிடப்பில் இருந்ததால், இவர்களுடைய மறைவு படத்திற்கு எந்த பாதிப்பையும் உருவாக்கவில்லை. ஆனால் ‘இந்தியன் 2’ படம் மீண்டும் உயிர்பெற்றிருப்பதால் இப்போது சிக்கல் உருவாகி இருக்கிறது.
இவர்கள் இருவரும் நடித்த காட்சிகளை மீண்டும் வேறு நடிகர்களை வைத்து ஷூட் செய்வதுதான் இதற்கு ஒரு வழி. ஆனால் இவர்கள் இருவருடன் நடித்த மற்ற நட்சத்திரங்களின் கால்ஷீட் மீண்டும் கேட்டு வாங்குவது, அவர்களை வைத்து ஏற்கனவே எடுத்த காட்சிகளை எடுப்பதற்கான ஷூட்டிங் செலவு என எல்லாமே தலைவலியாக இருக்கும் என்பது நிச்சயம்.
இதனால், விவேக், நெடுமுடி வேணு ஆகிய இருவரையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், அவர்களுக்கு திரையில் உயிர் கொடுக்கலாமா என ஷங்கர் களத்தில் இறங்கி இருக்கிறாராம்.
இதனால் விவேக் மற்றும் நெடுமுடி வேணு இவர்கள் இருவரும் திரையில் உயிர்ப்புடன் இருப்பதை பார்ப்பது வேறு மாதிரியான அனுபவமாக இருக்கும்.
‘இந்தியன் 2’ படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடி என்று கூறுகிறார்கள்.
’விஜய்68’ புது சாதனை!
விஜய்க்கு சினிமா தேவதையின் ஆசி அமோகமாக இருக்கிறது போல. தனது ஓவ்வொரு படமும் ஏதாவது ஒரு வகையில் சாதனை படைப்பதோடு, அவரது சாதனைகளையே முறியடிக்கும் படங்களாக அமைந்து வருகின்றன.
தற்போது லோகேஷ கனகராஜ் இயக்கத்தில் நடித்து இருக்கும் ‘லியோ’ படமும் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது. ஒடிடி உரிமை அதிக பட்ச தொகைக்கு விலைப் போயிருக்கிறது. சுமார் 75 கோடி என்கிறார்கள்.
இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்கு தற்காலிகமாக விஜய்68 என்று பெயரிட்டு இருக்கிறார்கள். வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க இருக்கிறார்.
வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். யுவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்திற்கு இசையமைப்பாளராகவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதனால் இப்படத்திற்கான எதிர்பார்பு உருவாகி இருக்கிறது. இப்படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த ஆடியோ உரிமை பெரிய விலைக்குப் போயிருக்கிறதாம்.
பிரபல ஆடியோ நிறுவனமான ‘டி சிரீஸ்’ விஜய்68 படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. ஆடியோ உரிமத்தை வாங்க டி சிரீஸ் கொடுத்திருக்கும் தொகை 25 கோடி என்று கோலிவுட் கிசுகிசுக்கிறது.