ஷ்ருதி ஹாஸன், அப்படியே அவரது அப்பாவைப் போல. மனதில் பட்டதை பொசுக்கென்று வெளிப்படையாக கூறுவது. என் வாழ்க்கை என்னுடையது, அதை விருப்பம் போல் கொண்டாடுவேன் என்பது. கலையில் ஆர்வம் அதிகமிருப்பது. காதலில் தெளிவாக இருப்பது. இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஷ்ருதி ஹாஸன் நடிக்க வந்த கொஞ்ச நாட்களிலேயே ரிலேஷன்ஷிப் கிசுகிசுக்களில் சிக்கினார். ஆனால் அவை எதுவுமே நிகழவில்லை. தேடி வந்த படங்களில் நடித்தார். தனக்கு பிடித்தமான இசையைக் கொண்டாடினார். திரைப்பட பாடல்களைப் பாடினார். இப்படியே கழிந்த இவரது வாழ்க்கையில் இப்போது துணைக்கு ஒருவர் இணைந்திருக்கிறார்.
அவர் பெயர் சாந்தனு ஹஸாரிகா. ஷ்ருதி ஹாஸனின் நண்பர். இவர்கள் இருவரும் லிவ்விங் டு கெதர் பாணியில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் திருமணம் பற்றி இவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இப்படியொரு சூழலில், சாந்தனுவைப் பற்றி ஷ்ருதி ஹாஸன் வெளிப்படையாக கமெண்ட் அடித்திருக்கிறார். ‘உலகத்திலேயே காதல் ரசனையே இல்லாத ஒரே மனிதன் யாரென்றால் அது சாந்தனுதான்’ என்று தனது நீண்டகால நெருங்கிய நண்பருக்கு தரச்சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.
‘ஒரு நாள் எனக்காக பூக்களை ஆர்டர் பண்ணியிருந்தேன். கொஞ்ச நேரத்திலேயே அந்த பூக்களை டெலிவரி பண்ணிவிட்டார்கள். ஆனால் அந்தப் பூக்களை கொஞ்சம் கூட யோசிக்காமல் சாந்தனு எடுத்துகொண்டார். கொஞ்சம் கூட காதல் ரசனை இல்லாமல், இப்படி யாராவது இருக்க முடியுமா’ என்று சாந்தனுவை பற்றி சிரித்து கொண்டே கூறுகிறார் ஷ்ருதி ஹாஸன்.
மகாபாரதத்தை குறிவைக்கும் ராஜமெளலி!
’பாகுபலி’ வரிசைப் படங்களும், ’ஆர்.ஆர்.ஆர்.’ படமும் இயக்குநர் ராஜமெளலியின் புகழை உச்சத்திற்கு கொண்டு போய் இருக்கின்றன. இதனால் இன்று இந்தியாவின் பிரம்மாண்டமான இயக்குநர் என்ற அடைமொழியோடு, எந்தவித பகட்டும் இல்லாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார் ராஜமெளலி.
அடுத்தடுத்து ஹிட்களை கொடுத்த ராஜமெளலி இப்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார்.
அடுத்து ராஜமெளலியின் திட்டம் என்ன என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.
’பாகுபலி’ கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத். இவர் ராஜமெளலியின் அப்பா. இவரது கதையில் படமெடுப்பதையே தொடர்ந்து வருகிறார் ராஜமெளலி. இதனால் விஜயேந்திர பிரசாத் கூறிய விஷயங்கள் இப்போது வைரல் ஆகி வருகின்றன.
‘ராஜமெளலிக்கு மகாபாரதம் எடுக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அதுதான் ராஜமெளலியின் கனவும் கூட. இதனால் அடுத்து அவர் மகாபாரத்தை திரைப்படமாக எடுக்க இருக்கிறார்’ என்று விஜயேந்திர பிரசாத் கூறியிருக்கிறார்.
இதனால் ’பாகுபலி’ மாதிரி மகாபாரத கதையை திரைப்படமாக ராஜமெளலி எடுக்க இருப்பது இப்போது உறுதியாகி இருக்கிறது.
இந்தப்படத்திற்கு பிறகு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் எண்ணம் ராஜமெளலிக்கு இருக்கிறதாம்.
‘மகாபாரதம்’, ‘ஆர்’ஆர்’ஆர்’ -2’ என இரண்டுப் படங்கள் முடிவாகி இருப்பதால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஊடகங்களின் தினீப்போடும் டார்லிங்காக ராஜமெளலி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இல்லாமல் ’இந்தியன்-2’ ஷூட்டிங்!
ஷங்கர் எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொண்டு இருக்கிறார். ‘இந்தியன் 2’ நீண்ட காலமாக கிடப்பில் கிடந்ததாலும், அப்படம் மேற்கொண்டு எடுக்க வாய்ப்புகள் குறைவாக இருந்ததாலும், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் ராம் சரணை வைத்து தனது முதல் தெலுங்குப்படத்தை இயக்கலாம் என திட்டமிட்டார்.
தெலுங்கில் மிகப்பெரும் பட்ஜெட்டில் ‘கேம் சேஞ்சர்’ உருவாகி வருகிறது. ராம் சரணும், கியாரா அத்வானியும் நடிக்கிறார்கள். இந்தப்படம் ஷூட்டிங் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் போய் கொண்டிருக்கையில்தான், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் வெளியானது.
விக்ரம் பெரும் வசூலை அள்ளியதால், கிடப்பில் கிடந்த ‘இந்தியன் -2’ வை எடுக்கும் வேலைகள் ஆரம்பமாகின. இங்குதான் ஷங்கருக்கு நெருக்கடி உருவானது.
ஒரு படம் முடித்த பின்பே அடுத்தப்படம் என்று இயங்கிவந்த ஷங்கருக்கு ஒரே நேரத்தில் இரண்டுப் படங்களையும் எடுத்து முடித்தாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் கொஞ்ச நாள் ’இந்தியன் –2’ ஷூட்டிங். மீதி நாட்கள் ‘கேம் சேஞ்சர்’ ஷூட்டிங் என பிஸியானார் ஷங்கர். ஆனால் ’இந்தியன் -2’ படத்தை முதலில் ரிலீஸ் செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதால், ’கேம் சேஞ்சர்’ ஷூட்டிங்கை தள்ளி வைத்துவிட்டார்.
கடந்த 45 நாட்களாக ராம் சரண் வீட்டில் ஓய்வெடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் ராம் சரண் தரப்பு கொஞ்சம் டென்ஷனில் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டதாம்.
’கேம் சேஞ்சர்’ ஷூட்டிங்கை திட்டமிட்ட படி முடித்து படத்தை ரிலீஸ் செய்யவேண்டுமென ராம் சரண் சொல்லிவிட்டாராம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த தயாரிப்பாளர் தில் ராஜு பக்காவான திட்டமொன்றை செயல்படுத்தி விட்டாராம்.
ஷங்கர் இங்கே பிஸியாக இருப்பதால், ஆக்ஷன் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவை வைத்து எடுக்க ஷெட்யூல் போடு இருக்கிறார்கள். தெலுங்கு இயக்குநர் சைலேஷ் என்பவரை வைத்து இந்த ஆக்ஷன் காட்சிகளை ஷூட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சைலேஷ் குழுவிற்கும், ஷங்கர் குழுவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுதான் இதில் ஹைலைட்.