சமீபகாலத்தில் நயன்தாரா அளவிற்கு சர்ச்சைகளையும், கிசுகிசுக்களையும் சந்தித்தவர் அநேகமாக சமந்தாவாகதான் இருக்கும்.
மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோஇம்யூன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து மீண்டு வரவே ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
இப்போது பழையபடி ஷூட்டிங்கில் பரபரப்பாக இருந்தாலும், சமந்தாவின் வாழ்க்கை ரொம்பவே கடினமாகதான் கழிகிறதாம். மயோசிடிஸ் என்பது தசைகளில் உண்டாகும் பிரச்சினை. இதனால் உடலில் சக்தி இருக்காது. எப்போதும் சோர்வாகவே இருக்கும். மூச்சுவிடுவதும் சில சமயங்களில் கஷ்டமாக இருக்கும். உடலில் வீக்கம் உண்டாகும். தெம்பு இல்லாமல் போகும். இதே போல் இன்னும் பல பிரச்சினைகள் ஒன்று போல் சேர்ந்தே வரும். தோள்பட்டை, இடுப்பு, தொடைப்பகுதிகளில் இருக்கும் தசைகள் சுலபமாக பாதிக்கப்படும். சில சமயங்களில் தோல், நுரையீரல், இதயத்தைக்கூட இப்பிரச்சினை பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.
இப்படியொரு மரண வேதனையில் இருந்து மீண்ட சமந்தாவின் உடலில் ஏகப்பட்ட வலிகள் வேதனைகள். இதை சமாளிக்க தனது உணவில் உப்பு இல்லாமல் பார்த்து கொள்கிறார். உப்பு சேர்க்கவே கூடாது என மருத்துவர்கள் கண்டிப்பாக கூறி இருக்கிறார்கள். அதேபோல் சர்க்கரையையும் உணவில் சேர்க்கக் கூடாது. மருந்துகளை மொத்தமாக ஒன்று சேர்த்து சாப்பிடவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார் சமந்தா. விருப்பமே இல்லாவிட்டாலும் கூட வேறு வழியில்லாமல், ஓய்வெடுத்தே ஆகவேண்டியிருக்கிறதாம். அதேபோல் மனமே இல்லாவிட்டாலும் கூட அன்றாட வேலைகளை சீக்கிரமே மேற்கொள்ள கட்டாயம் இருக்கிறதாம்.
இப்படிதான் சமந்தாவின் வாழ்க்கை தினமும் கழிகிறது என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.
’இந்தியன் 2’ – அப்டேட்!
மெகா சீரியலை போல் இழுத்துகொண்டே போன ‘இந்தியன் -2’ படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் இருக்கிறது.
கமல் அடுத்து ஹெச். வினோத் இயக்கத்திலும், அதற்கடுத்து மணி ரத்னம் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். மேலும் பாராளுமன்ற தேர்தலும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் தான் நடித்து கொண்டிருக்கும் படங்களின் ஷூட்டிங்கை மளமளவென முடிக்குமாறு கமல் வேகம் காட்டுகிறார்.
இதனால் ‘இந்தியன் -2’ ஷூட்டிங்கையும் வேகமாக எடுத்து வருகிறார்கள். ஜூன் மாத இறுதியில் அநேகமாக அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் டப்பிங் வேலைகளும், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் ஜரூராக போய் கொண்டிருக்கின்றன. சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங் ஆகியோருக்கான டப்பிங் வேலைகள் ஓரளவிற்கு முடிந்துவிட்டன.
படத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் அதிகம் இருக்கிறதாம், அதனால் இந்த தில்லாலங்கடி வேலைகளை மட்டும் 6 மாதம் தொடர தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜின் 10 ஆண்டுத்திட்டம்!
தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர், சந்திரபாபு போன்றவர்கள், அவர்களுக்கு பிறகு நடிக்க வந்தவர்களுக்கும்,இப்போது நடித்து கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கும், ஒரு உதாரணப் பாடமாக இருந்து வருகிறார்கள்.
இதனால்தான் அவர்களுக்கு பிறகு சினிமாவிற்கு வந்தவர்கள் தாங்கள் சம்பாதித்ததை சொத்துகளாகவும், வருமான ஈட்டும் கட்டிடங்களாகவும் மாற்றி, மார்க்கெட் இழந்தப்பிறகு வாழ கற்றுக்கொண்டனர்.
இந்த ஃபார்மூலாவில் ரொம்பவே தெளிவாக இருப்பவர் இன்றைய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
’என்னால் இன்னும் 10 வருஷம் ஓடி ஓடி வேலை செய்ய முடியும். அதாவது அதிகப்பட்சம் 10 படங்கள் எடுக்கமுடியும்னு நினைக்கிறேன். கண்டிப்பா அதுக்குப் பிறகு எப்படியாவது ஒரு ப்ரேக் வந்துடும். நாம விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி தானாகவே ஒரு ப்ரேக் உண்டாயிடும். அதனால அதுக்குள்ளே முடிஞ்ச வரைக்கும் நல்ல கமர்ஷியல் படங்களைக் கொடுக்கணும் நினைக்கிறேன்.’ என்ற் தெளிவாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அதற்கேற்றவகையில், கார்த்தி, சூர்யா, கமல், ரஜினி என அடுத்தடுத்து நான்கு பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்க பக்காவாக திட்டமிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.