இந்தியாவில் கூகுளில் மையோசிடிஸ் என்றால் என்ன, அது என்ன வியாதி என திடீரென பல லட்சம் பேர் தேடிப்பார்க்க ஒரே காரணம் சமந்தா.
’எனக்கு மையோசிடிஸ் பிரச்சினை இருக்கு.அதனால என்னால சுறுசுறுப்பா இருக்க முடியல. அதுக்கு சிகிச்சை எடுக்கணும். நான் சினிமாவுல நடிக்கப் போறது இல்ல.’ என்று சமந்தா சொன்ன ஸ்டேட்மெண்ட்தான் பரபரப்பானது.
ஜூலை 2023-ல் சிகிச்சைக்காக ஒரு இடைவெளி விட்ட சமந்தா, இப்பொழுதுதான் மீண்டும் நடிக்கப் போகிறாராம். ஏறக்குறைய 7 மாத காலம் மேக்கப் போடாமல், டூயட் பாடாமல், டயலாக் பேசாமல் அமைதியாக இருந்தார் சமந்தா.
சமந்தா கடைசியாக ’சிடாடெல்’ என்ற வெப் சிரீஸில் நடித்து கொண்டிருந்தார். சினிமாவைப் பொறுத்த வரை ‘யசோதா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து கொண்டிருந்தார். அந்தப் பட வேலைகள் அனைத்தையும் முடித்து கொடுத்த சமந்தா, ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்தார்.
மனதில் இருக்கும் பாரத்தை மறக்க தனது தோழிகளுடன் சுற்றுலா சென்றார். அப்படியே மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொண்டார். ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய ஒரு வருடம் சிகிச்சைகளை எடுத்திருக்கிறார். திடீரென சிகிச்சைக்காக சமந்தா ப்ரேக் எடுத்ததால், அவர் சம்பந்தப்பட்ட டப்பிங் வேலைகள் அப்படியே இருந்தன. இந்த வேலைகளை இப்பொழுது முடிக்கும் மும்முரத்தில் இருக்கிறார் சமந்தா.
அதேபோல் சினிமாவில் தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருப்பதால்தான், சமந்தா ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனம் மூலம் வெப் சிரீஸ், திரைப்படங்களைத் தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் சமந்தா.
கூடிய சீக்கிரமே தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் சமந்தா நடிக்கவிருப்பதாக அவரது பிஆர் ஏஜென்ஸி தரப்பில் கூறுகிறார்கள்..
ரஜினியின் சம்பளம் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி
படம் வெளியான இரண்டே வாரத்தில் 600 கோடி வசூல் என்ற ஒரு பெரும் சாதனையைப் படைத்துவிட்டு உற்சாகத்தில் இருக்கையில், அடுத்து வந்த ‘லால் சலாம்’ படம் ஒன்றுமில்லாமல் போயிருக்கிறது என்கிறது தமிழ் சினிமாவின் வியாபார வட்டாரம். இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, உச்சத்தில் இருக்கும் ரஜினியின் இமேஜை சல்லி சல்லியாக உடைத்திருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
ரஜினி தன் மகளுக்கு ஒரு அப்பாவாக கைக்கொடுக்கும் வகையில், சிறப்பு கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறார். அவர் திரையில் வருவது வெறும் 30-40 நிமிடங்கள்தான் என்றாலும் ரஜினி படமாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் நாள் முன்பதிவே எதிர்பார்த்தது போல் இல்லை என்கிறார்கள். ரஜினி படம் என்றால் முதல் நான்கைந்து நாட்கள் முன்பதிவு முழுவதும் முடிந்திருக்கும். ஆனால் இந்த முறை ‘லால் சலாம்’ படத்திற்கு முன்பதிவில் வரவேற்பு இல்லை.
இதெல்லால் ஒரு பக்கமிருந்தாலும், ரஜினியின் சம்பளம் பற்றிதான் இப்போது பேச்சு. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் ரஜினியின் சம்பளம் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி என்று இருக்கிறது என்கிறார்கள்.
அது என்ன கணக்கு?
இந்தப் படத்தில் ரஜினிக்கு சிறப்புத்தோற்றம். அதனால் 10 முதல் 15 வரைதான் ரஜினியின் கால்ஷீட். படத்தில் இவர் திரையில் தோன்றும் நிமிடங்கள் 30 முதல் 40 நிமிடங்கள். இந்தப் படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம் சுமார் 40 கோடி என்று கூறப்படுகிறது.