சத்யராஜ் மீண்டும் ரஜினியோடு சேந்து நடிக்க இருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. மிரட்டல் வில்லனாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தினாலும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சத்யராஜ் சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு 1978ம் ஆண்டில் வந்தார். 1982ம் ஆண்டில் ரஜினிகாந்துடன் முதல் முறையாக தாடி ராஜ் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
ரஜினிகாந்த் 1975ம் ஆண்டில் அபூர்வாராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறியிருந்தார். ஆனால் சத்யராஜ் அதுவரைக்கும் சிறிய சிறிய கதாபாத்திரங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் நடித்துக் கொண்டிருந்தார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சிவகுமார், மணிவண்ணன், கவுண்டமணி ஆகியோர் பலரும் கைக்கொடுக்க தமிழ் சினிமாவில் முக்கிய இடத்திற்கு நகர்ந்து வந்தார் சத்யராஜ். 1983ம் ஆண்டில் பாயும் புலி படத்திலும் 1984 ஆண்டில் நான் மகான் அல்ல படத்திலும் ரஜினியோடு நடித்து அவரது படங்கள் வெளிவந்தன. அவரது உயரமும், வசனம் பேசும் ஸ்டைலும் ரசிகர்களுக்கு அவரை ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது. 1984. ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான நூறாவது நாள் திரைப்படத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரம் அவரை ரசிகர்களிடம் பெரிய இடத்தில் கொண்டுபோய் சேர்த்தது.
இதன் பிறகு சத்யராஜ் தனி அடையாளமுள்ள பாத்திரங்களில், வில்லன் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதே நேரத்தில் ரஜினிகாந்த் அவரது வேகத்தை போலவே சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தோடு வலம் வந்து கொண்டிருந்தார். இருவரும் 1986ம் ஆண்டில் வெளியான மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் சேர்ந்து நடித்தனர். ரஜினி நாயகனாகவும் அவரது அப்பாவாக கோபிநாத் என்ற பாத்திரத்தில் சத்யுராஜ் நடித்திருந்தார். தன்னை விட வயதில் நான்கு வருடங்கள் மூத்த ரஜினிக்கு அப்பாவாக நடித்தார் சத்யராஜ். இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு நடித்திருந்தனர். அது படத்தின் பரபரப்புக்கு கைக்கொடுத்தது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பில்லாமல் போனது. சாவி படத்தின் மூலம் சதுயராஜ் வில்லன் வேடத்திலிருந்து கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இருவரும் சினிமாவில் வேறு வேறு கதை, வேறு வேறு சிந்தனை கொண்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். தனி த்தனி ரசிகர்கள் கூட்டம், தனித்தனி அடையாளங்கள் தனித்தனி அரசியல் நிலைப்பாடு என்று பாதைகள் பிரிந்து வெகுதூரம் பயணம் தொடர்ந்தது. இந்த நிலையில் தான் சிவாஜி திரைப்படம் எடுக்கும் போது, அதில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சத்யராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அவர் ரஜினியை என் படத்தில் வில்லனாக நடிக்க வைப்பீர்களா என்று கேட்டதாக ஒரு பேச்சு நிலவியது. ஆனால் சத்யராஜிடம் ரஜினியே பேச நினைத்தும் அவர் வில்லன் ரோலில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது.
கர்நாடக தமிழ்நாடு தண்ணீர் பிரச்சனையில்; சத்யராஜ் ரஜினிகாந்த்தை நேருக்கு நேர் மேடையில் கருத்தியல் ரீதியாக எதிர்த்துப் பேசினார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஒருவித வெறுப்பையும், பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு சத்யராஜ் என்றாலே ரஜினி ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வந்தனர்.
பாகுபலி படத்திற்கு பிறகு கட்டப்பா என்ற அடையாளம் அவருக்கு பல மொழிகளிலும் திரைப்பட வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் அங்கு அவர் பல படங்களில் வில்லனாகத்தான் நடிக்க முடிந்தது. சம்பளமும் கேட்ட தொகையைக் கொடுப்பதால் சத்யராஜிற்கு அது பெரிய விஷய்மாக தெரியவில்லை. மேலும் பட வாய்ப்புகளும் தொடர்ந்து வருவதும் குறைந்து போனது.
இந்த நேரத்தில்தான் லோகேஷ் கனராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்க சம்மதிக்கக் காரணம் சம்பளம்தான் என்கிறார்கள். வில்லன் வேடத்தை தவிர்க்க நினைத்து 5 கோடி கேட்டிருக்கிறார் சத்யராஜ். அதற்கு தயாரிப்பு தரப்பினர் உடனே ஓகே சொல்லி விட்டதாகவும் இதனால் சத்யராஜால் தவிர்க்க முடியவில்லை என்றும் கூறுகி்றார்கள்.
ஆனாலும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இது ஒரு மனக்குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இணையதளத்தில் அவர்கள் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.