பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று லேட்டஸ்ட்டாக யார் வந்தாலும், கெத்து காட்டிக் கொண்டிருப்பது சினீயர்களான ரஜினியும், கமலும்தான்.
பாக்ஸ் ஆபீஸில் முன்பு எஃப்.எம்.எஸ் (FMS) என்று ஒரு விஷயம் உண்டு, அதாவது வெளிநாடுகள், மற்றும் மலேசியா, சிங்கப்பூர் என்பதே இதன் விரிவாக்கம். அதாவது தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படும். அதேபோல் தமிழ் மக்கள் வசிக்கும், புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் நாடுகளில் மட்டும் நம்மூர் திரைப்படங்கள் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் திரையிடப்படும். இதன்மூலம் வரும் வசூல் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் லாபம் கொடுக்கும்.
டிஜிட்டல் உரிமை எனும் தொழில்நுட்ப அடிப்படையிலான வருவாய் ஈட்டும் வழி உருவாவதற்கு முன்பு வரை எஃப்.எம்.எஸ் வசூல் ராஜா என்றால் அது தமிழ் சினிமாவில் கமல் மட்டுமே.
ஆனாலும் இந்நிலை கடந்த பதினைந்து வருடங்களில் அப்படியே மாறிவிட்டது. இதற்கு காரணம் சினிமா துறையில் உண்டான அடுத்தடுத்த மாற்றங்கள். குறிப்பாக, அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் அஜித், விஜய், விக்ரம், சூர்யா கமர்ஷியல் ஹீரோக்களாக உருவெடுத்தது. அடுத்து மல்ட்டிஃப்ளெக்ஸ் கலாச்சாரம் அதிகரித்தது.
இதன் மூலம் படம் வெளியாகும் வார இறுதியில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் ஒரே நேரத்தில் படத்தை வெளியிடுவது. இதன் மூலம் ஒரு வாரத்திற்குள்ளாகவே வசூலை அறுவடை செய்யும் ஃபார்மூலா உருவானது. சேட்டிலைட் உரிமையை பல கோடிகளுக்கு தொலைக்காட்சி சேனல்களுக்கு கொடுப்பது என மார்க்கெட் நிலவரம் மாறியது.
இதில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பது ஒடிடி உரிமை மூலம் கிடைக்கும் பெரிய வருமானம். படம் வெளியான இரண்டு வாரங்களில், அப்படங்களை ஒடிடி-யில் வெளியிடும் புதிய பிஸினெஸ் மொழிகள் கடந்து, எல்லைகள் கடந்து பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைவதால் இதற்கான மார்க்கெட்டும் முக்கியத்துவம் பெற்றது.
திரைப்பட வியாபாரத்தில் இத்தனை ப்ளஸ்கள் இன்றைய இளையதலைமுறை கமர்ஷியல் ஹீரோக்களுக்கு இருந்தாலும், கலெக்ஷனில் ரஜினிக்கென்று என்றென்றும் ஒரு தனி மார்க்கெட் இருக்கிறது. இந்த போட்டியில் கொஞ்ச காலமாக கமல் கொஞ்சம் தள்ளியேதான் நின்று வந்தார்.
அவரது படங்களும் சரியாக வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து அரசியல், பிக்பாஸ் என அவர் டார்ச்சையும், பல வண்ண கோட்- சூட்டையும் கையிலெடுத்ததால் கடந்த நான்கு ஆண்டுகள், கமலுக்கு எந்தப்படங்களும் வெளியாகவில்லை.
ரஜினியை அடுத்து அஜித், விஜய் களத்தில் அடுத்த தலைமுறை போட்டி இரட்டையர்களாக களத்தில் இருக்கிறார்கள். இவர்களது வசூல் குறித்து ட்விட்டரில் குழாயடி சண்டையை விட மிக தீவிரமான டிஜிட்டல் போரை அவர்களது ரசிகர்கள் நடத்தி கொண்டிருக்கிறார்கள். இதனால் வசூல் என்றால் ரஜினி, அஜித், விஜய் என்ற நிலை இருப்பது போன்ற ஒரு பிம்பம் உருவானது.
ஆனால் இந்த பிம்பத்தை புரட்டிப் போட்டிருக்கிறது கமலின் ரீ-எண்ட்ரி. ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்’ என்ற பஞ்ச் டயலாக் ரஜினிக்கென எழுதப்பட்டாலும், அது தற்போது கமலுக்கு மிகச்சரியாக பொருந்தியிருக்கிறது.
நான்கு வருடங்கள் கழித்து வந்தாலும், நானூறு கோடி என்ற பாக்ஸ் ஆபீஸ் நம்பரை ஒரே ஹை ஜம்ப்பில் எட்டிப்பிடித்து எதிரே இருக்கும் அனைத்து போட்டியாளர்களையும் ஓவர்டேக் செய்திருக்கிறார்.
தமிழில் அதிக வசூலைப் பெற்ற படம் ரஜினியின் ‘2.0.’ இப்படம் ஏறக்குறைய 277 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது கமலின் ’விக்ரம்’ தமிழில் 14 கோடிகளையும், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 215 கோடிகளையும் தற்போது வரை வசூல் செய்திருப்பதாக கூறுகிறார்கள்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் விக்ரம் படத்திற்கு வெளிநாடுகளில் கிடைத்திருக்கும் வசூல். இருநூறு கோடிகளைத் தொட்டிருப்பதுதான். இது உலகளவில் தமிழ் சினிமாவிற்கு குறிப்பாக கமலுக்கு இருக்கும் எதிர்பார்பை மீண்டும் உருவாக்கி இருக்கிறது.
வசூலில் ரஜினி இல்லையென்றால் கமல் என்ற போட்டியை மீண்டும் உசுப்பேற்றி இருக்கிறது விக்ரமின் வசூல் வேட்டை. வித்தியாசமான கதை, பிரம்மாண்டமான மேக்கிங், அசத்தலான திரைக்கதை இருந்தால் விஜயும், அஜித்தும் கெத்து காட்டலாம் என்பதே தற்போதைய நிலவரம்.