No menu items!

வடியாத தண்ணீர்… என்ன நடக்கிறது? Full Round Up

வடியாத தண்ணீர்… என்ன நடக்கிறது? Full Round Up

மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தாலும், தமிழகத்தில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் குறையவில்லை. மழை வெள்ளம், தண்ணீருடன் கழிவுநீர் கலப்பு, மின் சப்ளை துண்டிப்பு, தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாத நிலையில் அவர்கள் தவித்து வருகிறார்கள்.

ஹெலிகாப்டரில் உணவுப் பொருட்கள்

ஒருசில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. ராணுவம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது. ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் இந்திய கடலோர காவற்படை வீரர்கள் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியை இன்று காலை முடுக்கிவிட்டனர். மழை வெள்ளம் வடியாததால் மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. மேற்கு தாம்பரத்தில் கிஷ்கிந்தா சாலையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்னும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

முடிச்சூர் வரதராஜபுரம், அமுதன் நகர் பகுதியில் வெள்ள நீர் வடியாததால் பல குடும்பங்கள் சிக்கித் தவிக்கின்றன. குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முடிச்சூர் ஏரி முழுவதுமாக நிரம்பி வழிவதால் கால்வாய்களில் நீர் வெளியேறாமல் அது குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. முடிச்சூர் ஏரி, மழைநீர் வெளியேறும் கால்வாய்களை முறையாக அவ்வப்போது தூர்வாரியிருந்தால் இவ்வாறு தண்ணீர் தேங்காது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு:

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் அவர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது தரமணி 100 அடி சாலையில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பால், பிரெட், பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதல்வர் வழங்கினார். அத்துடன் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிச.4 முதல் டிச.6 வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (டிச.7) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும். இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

29 ரயில்கள் ரத்து

மிக்சாங் புயல் காரணமாக வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் சென்னையில் இருந்து இன்று புறப்பட வேண்டிய 29 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டன.

திருப்பதி சப்தகிரி, திருப்பதி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், சென்ட்ரல்-திருப்பதி கருடாத்திரி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், பெங்களூரு-சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், கோவை-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்ட்ரல் வந்தே பாரத், கோவை-சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன. தண்ணீர் வடிந்த பிறகுதான் சென்ட்ரலில் இருந்து முழுமையாக ரெயில்கள் இயக்கப்படும். நாளை முதல் போக்குவரத்து சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...