இதோ இதோ என்று கடந்த சில மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த திமுகவினர் மீதான ஊழல் மற்றும் சொத்துப் பட்டியலை சித்திரை முதல்நாளில் வெளியிட்டார் அண்ணாமலை.
கிட்டத்தட்ட 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திமுகவினர் சிலரின் சொத்துக் கணக்கு வருகிறது. இந்தப் பட்டியல் 2011வரைதான். அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் மிக முக்கியமானது முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது 200 கோடி ரூபாய் அளவில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு.
அண்ணாமலை பிரஸ் மீட் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் போன்று நகைச்சுவையானது, பலரின் பொழுது வீணானது என்று சொன்ன திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அப்படியே கடந்து போகாமல் 500 கோடி ரூபாய்க்கு அவதூறு வழக்குக்கான நோட்டீசை அனுப்பினார். 48 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அண்ணாமலையின் பட்டிமன்றத்தை பார்த்தவர் சிரித்துவிட்டு கடந்து சென்றிருக்கலாம்.
ஆர்.எஸ்.பாரதியின் நோட்டீசுக்கு அண்ணாமலை இன்று பதில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். 500 கோடியே 1 ரூபாய் கேட்டு. ஆருத்ரா ஊழலில் அண்ணாமலையை இணைத்துப் பேசியதற்காக. அது மட்டுமில்லாமல் திமுகவினர் மீது கூடுதல் குற்றச்சாட்டுக்களையும் சொல்லியிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்கதையாக மாறப் போகிறது என்பது தெரிகிறது.
இந்தத் தொடர்கதையால் யாருக்கு லாபம்?
ஊழலுக்கு எதிரானவர். அநீதியைக் கண்டு பொங்குபவர். நியாயங்களை நிலை நிறுத்துபவர் என்ற பிம்பத்துக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள அண்ணாமலை படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது அந்த முயற்சிக்கு சொந்தக் கட்சியினரிடமிருந்தே ஆதரவு இல்லை என்பதுதான் சோகம்.
DMK Files என்ற பெரும் விளம்பரங்களுடன் அவர் வெளியிட்ட செய்தியை அவரது கட்சியின் மூத்தவர்கள் பலர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிரவில்லை. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை சொன்னார்களே தவிர அண்ணாமலையின் வீடியோவைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நீங்கள் பில் கேட்டீர்கள் கொடுத்துவிட்டார், சீரியல் நம்பர் கேட்டீர்களா என்று செய்தியாளர்களிடம் கிண்டலடித்தார் வானதி சீனிவாசன்.
ஆக கட்சியின் மூத்தவர்களின் ஆதரவு இந்த அளவுக்குதான் அண்ணாமலைக்கு இருக்கிறது.
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறிய சில வாக்கியங்கள் கூட்டணியையும் அசைத்துவிட்டது. ஊழல், சொத்துப் பட்டியல் திமுகவுடன் நிற்காது. தமிழ்நாட்டை ஆண்டவர்களின் அத்தனை பேரின் சொத்துக் கணக்கு, ஊழல்கள் வெளிவரும் என்று அண்ணாமலை கூறியது – கூட்டணிக் கட்சியான அதிமுகவை பதற்றப்படுத்தியிருக்கிறது. கடுப்பாக்கியிருக்கிறது.
’முதிர்ச்சியான தலைவர்கள் பற்றி என்னிடம் கேளுங்கள். அண்ணாமலை பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். தயவுசெய்து அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்” என்று எடப்பாடி பழனிசாமி கோபப்பட்டார். அவரைத் தொடர்ந்து அதிமுகவின் பல தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டார்கள்.
திமுக ஒரு சிக்கலில் மாட்டுகிறது என்றால் அது அதிமுகவினருக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும். சிக்கலை ஏற்படுத்துபவர்களை பாராட்டி வரவேற்க வேண்டும். ஆனால் இங்கு அது நடக்கவில்லை. ஏற்கனவே பலவீனமாக இருந்த அதிமுக – பாஜக உறவு மேலும் பலவீனப்பட்டிருக்கிறது.
சரி, திமுகவின் சொத்துக்கள் குறித்த இந்த செய்தியாளர் சந்திப்பு அண்ணாமலையின் ஊழல் எதிர்ப்பு பிம்பத்துக்கு உதவியிருக்கிறதா என்றால் அதற்கும் உதட்டை பிதுக்க வேண்டியிருக்கிறது.
அண்ணாமலை தந்த ரஃபேல் வாட்ச் பில்லில் எண் மாறியிருக்கிறது. அதை ஒரிஜினலாய் வாங்கிய சேரலாதன் எதற்காக விலையைக் குறைத்து அண்ணாமலைக்கு விற்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ரஃபேல் வாட்ச்சுக்காக 3 லட்சம் ரூபாயை பணமாக அண்ணாமலை கொடுத்திருக்கிறார், அது தவறு என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
அரசியல் தலைவராக தான் பணியாற்ற தனக்கு மாதம் ஏழு அல்லது எட்டு லட்சம் ரூபாய் செலவாகிறது என்கிறார் அண்ணாமலை. அத்தனை பணத்தையும் மாதம் தோறும் நண்பர்கள் தருகிறார்கள் என்கிறார்கள். மாதம் 8 லட்சம் ரூபாய் என்றால் வருடத்துக்கு 96 லட்ச ரூபாய். இவ்வளவு பணத்தை நண்பர்கள் எதற்கு அண்ணாமலைக்கு தர வேண்டும்? அவர்களுக்கு அண்ணாமலை செய்யும் பிரதிபலன் என்ன? இந்தக் கேள்விகள் அண்ணாமலையின் நேர்மை பிம்பத்தை நோக்கி எழுப்பப்படுகின்றன.
அண்ணாமலையின் ‘டிஎம்கே ஃபைல்ஸ்’ முயற்சி அமர்பிரசாத் ரெட்டி போன்ற அவரது தீவிர ஆதரவாளர்களுக்கு மட்டும் உற்சாகத்தை தந்திருக்கிறது.
எதிர்வினைகள் குறித்து யோசிக்காமல் திமுகவினரின் சொத்துப்பட்டியலை அண்ணாமலை வெளியிட்டிருப்பாரா? ஆண்ட கட்சிகள் அனைவரது சொத்துக்களும் வெளியிடப்படும் என்று கூறியிருப்பாரா? பாஜகவின் மூத்த தலைவர்கள் ஆதரவு இல்லை என்பது அவருக்கு தெரியாதா?
ஆனாலும் அப்படி செய்கிறார்..செய்திருக்கிறார் என்றால்….சிந்திக்க வேண்டும். பின்னணியில் வேறு காட்சிகள், நிகழ்வுகள் இருக்கலாம்.
திமுகவும் அவசரப்பட்டுவிட்டது.
சாலமன் பாப்பையா காமெடி என்று கமெண்ட் அடித்ததுடன் நகர்ந்திருக்க வேண்டும்.
48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் 500 கோடி ரூபாய் அவதூறு வழக்கை சந்திக்க வேண்டும் என்று திமுக நோட்டீஸ் அனுப்பியது.
மன்னிப்பு கேட்க முடியாது. 500 கோடியே 1 ரூபாய் நீங்கள் தர வேண்டும் என்று அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
இப்போது பந்து திமுகவிடம். அவர்கள்தான் ஆட வேண்டும். பதில் சொல்ல வேண்டும். திமுகவை இப்படி ஆட வைக்க வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் தூண்டில். அதில் சிக்கியிருக்கிறது திமுக.
மறுக்கவில்லையென்றால்… வழக்கு தொடுக்கவில்லையென்றால் திமுக மறுக்கவில்லை, அதனால் அனைத்தும் உண்மை என்ற பழிக்கு ஆளாகும் என்று திமுக தலைமைக்கு யாரோ அவசர ஆலோசனை அளித்திருக்கிறார்கள்.
எ.வ.வேலுவுக்கும் ஜெகத்ரட்சகனுக்கும் கல்லூரிகளும் பள்ளிகளும் இருப்பது உலகத்துக்கு தெரியாதா? முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் பள்ளி நடத்துவது யாருக்கும் தெரியாதா? திமுகவினர் மட்டுமல்ல அரசியல்வாதிகள் சொத்துக்கள், அவர்களது நிறுவனங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் அந்தந்தப் பகுதி மக்களுக்குத் தெரியும். இதில் புதிதாய் எதுவுமில்லை. இது திமுகவினருக்கும் தெரியும். எதிர்வினை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
இந்த சூழலில் 500 கோடி ரூபாய்க்கு வக்கீல் நோட்டீஸ் என்பது தேவையில்லாத ஆணி. எடப்பாடி பழனிசாமியைப் போல் தன் பேர் வரணும்கிறதுக்காக அண்ணாமலை எதோ பேசுகிறார் என்று கடந்து போயிருக்க வேண்டும்.
திமுகவினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட அன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடன் அது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில். “தெரியலையே…நான் பார்க்கல…எல்லாம் அரசியல்ல ஒரு ஸ்டண்ட் அவ்வளவுதான்’ என்று காரில் கடந்து சென்றுவிட்டார்.
1972ல் கருணாநிதி மீது எம்.ஜி.ஆர். ஊழல் புகார்களை கூறினார். கவர்னரிடம் மனுவாக கொடுத்தார். அப்போது அந்த புகார்களை குறித்து கருணாநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கருணாநிதி பதில்: பார்த்தேன்.படித்தேன்.ரசித்தேன்.
இவை போன்றுதான் திமுகவின் எதிர்வினை இருந்திருக்க வேண்டும். அலட்சியமாய் கடந்து சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் ஒரு சொதப்பலான சிறுகதையை தொடர்கதையாக மாற்றியிருப்பது திமுகவுக்கு சறுக்கல்தான்.
சரி, அண்ணாமலை கொடுத்த திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்னவாகும்?
அந்த சொத்து ஊழல் பணத்தால் வாங்கப்பட்டதா என்பதை சரி பார்க்க வேண்டிய வேலை வருமானவரித் துறை, அமலாக்கத் துறையினுடையது. அந்தத் துறைகள் மத்திய அரசிடம் இருக்கின்றன. மத்தியில் அண்ணாமலையின் பாஜக கட்சி கடந்த 9 வருடங்களாக ஆட்சியிலிருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் விசாரித்திருக்க வேண்டும். தவறிருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.