மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நடித்த நடிகர்கள் கொண்டாட்டமாய் இருக்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வனில் நடிக்க ஆசைப்பட்டு மிஸ் ஆன நடிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.
எம்.ஜி.ஆர். படமெடுக்க விரும்பினார். பிறகு கமல்ஹாசன் படமெடுக்க விரும்பினார். ரஜினிகாந்த் வந்திய தேவனாக நடிக்க விரும்பினார். வந்தியதேவன், அருள்மொழி வர்மன் மட்டுமில்லாமல் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்பியதாக கமல்ஹாசன் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இவையெல்லா ஆசைகள், விருப்பங்கள்.
இவர்களைத் தவிர பொன்னியின் செல்வனுக்காக துவக்கத்தில் தேர்வு செய்யப்பட்டு பிறகு ஏதோ ஒரு காரணத்துக்காக நடிக்க முடியாமல் போனவர்கள் இவர்கள்.
இதில் முக்கியமானவர் விஜய். வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு மணிரத்னம் மனதில் இருந்தவர் விஜய்தான். மேக்கப் டெஸ்ட் கூட எடுக்கப்பட்டது என்கிறது மணிரத்னம் வட்டாரம். ஆனால் விஜய்யின் சம்பளம், படத்தின் பட்ஜெட், கால்ஷீட் சிக்கல்கள் காரணமாக விஜய் நடிக்க முடியாமல் போனது.
அடுத்து விஜய் சேதுபதி. சின்ன பழவேட்டரையர் வேடத்துக்கு இவரைதான் மணிரத்னம் தேர்வு செய்திருந்தார். விஜய் சேதுபதிக்கும் சம்மதம்தான் ஆனால் 2019ல் தொடங்கப்பட்ட பணிகள் கொரோனாவால் நீண்டுக் கொண்டே போனதால் கால்ஷீட் சிக்கல்கள் காரணமாக விஜய் சேதுபதி நடிக்க முடியாமல் போனது.
நயன்தாரா. தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்துக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நயன் தான். ஆனால் அவருடைய சம்பளமும் தேதிகளும் குறுக்கே வர ஐஸ்வர்யா ராய் வந்துவிட்டார். ஐஸ்வர்யா வந்தால் இந்தி பகுதிகளிலும் படத்தை விற்க முடியும் என்ற மணிரத்னத்தின் மார்க்கெட்டிங் ஐடியாவும் நயன் நடிக்காமல் போனதற்கு காரணம்.
திரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரத்துக்கு முதலில் கீர்த்தி சுரேஷ் யோசிக்கப்பட்டார். ஆனால் அவரிடத்தில் இன்னும் குழந்தைத்தனம் இருக்கிறது என்பதால் அவருக்குப் பதில் த்ரிஷா தேர்வு செய்யப்பட்டார்.