No menu items!

2023ன் Hot Movies – ஒரு Fast Forward ரிப்போர்ட்

2023ன் Hot Movies – ஒரு Fast Forward ரிப்போர்ட்

2022, தமிழ் சினிமாவுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸின் ஒட்டுமொத்த வசூல் ஏறக்குறைய இரண்டாயிரம் கோடியைத் தொட்டிருக்கிறது என்கிறது தகவல்கள்.

இதே சூழல் வருகிற 2023-ம் ஆண்டிலும் தொடருமா அல்லது 2022-ம் ஆண்டின் ஒட்டுமொத்த வசூலை ஒவர்டேக் செய்யுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. காரணம் வரிசைக்கட்டி நிற்கும் பெரிய தலைகளின் படங்கள்.

ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என தங்களது மார்கெட் வேல்யூவை காட்டுவதற்கான கமர்ஷியல் கோதாவில் இறங்கியிருக்கிறது நட்சத்திர பட்டாளம்.

அந்த வகையில் 2023-ல் அதிக எதிர்பார்பை உருவாக்கி இருக்கும் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

வாரிசு [Varisu]

விஜயின் ‘பீஸ்ட்’ படம் விமர்சன ரீதியாக அதிகம் கிண்டலடிக்கப்பட்டாலும் இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் 240 கோடி என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இதற்கு ஒரே காரணம் அந்த ’பீஸ்ட்’ விஜய் என்பதே. அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசையில் ‘பீஸ்ட்’ கம்பீரமாக இடம்பிடித்திருக்கிறது.


மிக சுமார் என்று விமர்சிக்கப்பட்ட படம் இவ்வளவு வசூலை அள்ளிக் குவித்திருப்பதால், ஸ்டைலீஷான படமெடுப்பதில் தேர்ந்தவரான தெலுங்கு இயக்குநர் வம்சி படிபள்ளி ‘வாரிசு’ படத்தை நிச்சயமாக வெற்றிப்படமாக்குவார் என்ற எதிர்பார்பு ரசிகர்களிடையே இருக்கிறது. மேலும் வாரிசு படம் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ‘வாரிசுடு’ என வெளியாகி இருக்கிறது.


தெலுங்கின் ஸ்டார் ப்ரொடியூஸர்களில் ஒருவரான தில் ராஜூவின் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் வாரிசு படத்தை தயாரிக்கிறது.
விஜய்க்கு ஜோடியாக ’நேஷனல் க்ரஷ்’ என கொண்டாடப்படும் ராஷ்மிக மந்தானா நடிக்கிறார். ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இருக்கிறது.

இப்படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் 120 கோடி என்கிறார்கள்.

துணிவு [Thunivu]

2022-ல் ‘வலிமை’யான ஹிட் படத்தைக் கொடுத்த அஜித், இந்த வருடம் துணிந்து விஜயுடன் நேரடி போட்டியில் இறங்கியிருக்கிறார். ’நேர்க்கொண்ட பார்வை’, ‘வலிமை’ என அடுத்தடுத்து இரண்டுப் படங்களின் அபார வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஹெச். வினோத் மீண்டும் அஜித்துடன் கைக்கோர்த்திருக்கிறார்.


இப்படத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் ஒபனிங் கிங் இன்றும் அஜித்தான். அதிலும் அவரது படம் ஆக்‌ஷனோடு ஃபேமிலி சென்டிமெண்டை கலந்தால் கட்டாய ஹிட். ஆனால் ‘துணிவு’ படத்தில் ஆக்‌ஷன் அதிரிபுதிரியாக இருக்கிறது என்று பேச்சு அடிப்படிகிறது.

அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி என்பதால் எதிர்பார்பு எகிறி கிடக்கிறது.
இப்படத்தை அஜித்தின் தற்போதைய ஃபேவரிட் ப்ரொடியூஸர் போனி கபூர் தயாரித்து இருக்கிறார்.

மஞ்சு வாரியர், ஜான் கொகேன், சமுத்திரக்கனி, மமதி சாரி, வீரா, ப்ரேம் குமார், மகாநதி சங்கர் என இப்படத்திலும் ஓரு பெரிய நட்சத்திர கூட்டம் இருக்கிறது.

ஜெயிலர் [Jailer]

ரஜினிகாந்தின் 169-வது படம். ‘விஜய்யை வைத்து டார்க் காமெடி படமெடுத்த நெல்சனை நம்பி ரஜினிகாந்த் களத்தில் இறங்கியிருக்கிறார்.

காமெடி ரஜினிக்கான களம். டார்க் காமெடி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கான படமாக இது இருக்குமா என்ற டிஸ்கஷன் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கேள்விப்பட்டவரையில் ரஜினி அதிக மாற்றங்களைச் சொன்ன கதை இதுவாக இருக்கும் என்கிறார்கள். அந்தளவிற்கு கதையில் ஈடுபாட்டோடு இறங்கி இருக்கிறார் ரஜினி.

பீஸ்ட்டின் விமர்சனங்களுக்குப் பிறகு கூட ரஜினி நெல்சனுடன் கைக்கோர்த்திருப்பதால், கதையில் ஏதோ ஒரு கலக்கான அம்சம் நிச்சயம் இருக்கிறது. அதனால்தான் ரஜினி ஒகே சொல்லியிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியை வைத்து படமெடுக்க வேண்டுமென்றால் இனி லைகா, சன் பிக்சர்ஸ் மாதிரி ஒரு ஜாம்பவான் நிறுவனம்தான் தயாரிக்க முடியும் என்ற சூழலில் மீண்டும் சன் பிக்சர்ஸ் ரஜினியை கமிட் செய்திருக்கிறது.

இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரும், ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்குமாரின் மகனுமான சிவ ராஜ்குமார் நடிப்பதன் மூலம் முதல் முறையாக தமிழ்ப் படத்தில் தோன்ற இருக்கிறார்.

வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணனும் நடித்திருக்கிறார்கள்.
அநேகமாக ‘ஜெயிலர்’ ஏப்ரல் 14- ம் தேதி திரையங்குகளில் கொண்டாடப்படுவார் என நம்பலாம்.

பொன்னியின் செல்வன் 2 [Ponniyin Selvan: Part II]

எம்.ஜி.ஆர்., கமல் என பலருக்கு பல ஆண்டு கால கனவுப் படமாக இருந்த ‘பொன்னியின் செல்வனை’ திரையில் ஒரு வழியாக காட்டி, அதிலும் வெற்றியும் பெற்றிருக்கிறார் மணி ரத்னம்.

2022-ல் சோழ சாம்ராஜ்ஜியத்தின் பகுதிகளைப் பார்த்து ரசிக்க டூரிஸ்ட்களை பேக்குகளுடன் கிளம்பி வரச் செய்ததில் இருக்கிறது ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’-ன் வெற்றி.

ஒரு நாவலை திரைப்படமாக எடுப்பதில் இருக்கும் சிக்கல்களில் மணி ரத்னமும் சிக்கிக்கொண்டார். பலரது கோபத்திற்கு ஆளாகும் வகையில் திரைக்கதையில் கதாபாத்திரங்களுக்கும் சம்பவங்களுக்கும் இடையே லாங் ஜம்ப், ஹை ஜம்ப் என தாவி தாவிப் போனதில் உயிர்ப்பு இல்லாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இருந்தாலும் கலெக்‌ஷனில் பொன்னியின் செல்வன் ஒரு பட்டத்து ராஜாவைப் போல உற்சாகத்தை கொடுத்திருக்கிறார்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு மக்கள் அடித்த கமெண்ட்களின் அடிப்படையில், சில காட்சிகளை கூடுதலாக எடுக்கவும், தேவைப்படும் மாற்றங்களுடன் எடுக்கவும், பேட்ச் வொர்க்குகளை முடிக்கவும் ஷூட் நடைபெற இருக்கிறது.

இதனால் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளே அதிகமிருப்பதால், அதற்கான வேலைகள் மளமளவென நடந்து வருகின்றன.

’பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியாவதற்கு முன்பே ஆன் -டேபிள் லாபத்தைப் பார்த்துவிடும். திரையரங்குகளிலும் கூட்டம் அதிகமிருக்கும் என்ற எதிர்பார்பு தமிழ் சினிமாவில் நிலவுகிறது.

இந்தியன் 2 [Indian 2]

1996-ல் லஞ்சத்திற்கு எதிராக மிரட்டலாக வந்தப்படம் ’இந்தியன்’.
கமலின் நடிப்பும், ஷங்கரின் பிரம்மாண்டமும் கலந்து கமர்ஷியல் கலைஞனாக கமல் தூள்கிளப்பிய இந்தியனின் இரண்டாம் பாகம் இப்பொழுது தயாராகி வருகிறது.

ஆரம்பத்தில் ஒரு ஜோரில் இப்படத்தின் ஷூட்டிங்கில் இறங்கிய கமலும், ஷங்கரும் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து நடந்த பிரச்சினைகளால் இந்தியனை மறந்துவிட்டார்கள்.

கமலின் ’விக்ரம்’ ஆதரவுக்கரம் கொடுத்திருப்பதால் இப்பொழுது மீண்டும் இந்தியன் ஓட்டமெடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த முறை லைகா, ரெட் ஜெயண்ட் என இரு நிறுவனங்களும் கைக்கோர்த்திருப்பதால் பட்ஜெட் பற்றி கவலை இல்லாமல் ஷூட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கமலின் மேக்கப் போட 5 மணி நேரம் பிடிக்கிறதாம். இதனால் காலை 5 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடும் கமலுக்கு ப்ரொதெடிக்ஸ் மேக்கப்பை ஆரம்பித்துவிடுகிறார்கள். பத்துமணி ஷூட் ஆரம்பித்தால், கமல் மேக்கப்பை கலைப்பதே இல்லை. காரணம் அந்த மேக்கப்பை கலைக்கவே இரண்டரை மணி நேரம் ஆகிறதாம்.

இப்படி பார்த்து பார்த்து இழைத்துக் கொண்டிருக்கிறார் ஷங்கர்.
காஜல் அகர்வால், ரகுல் ப்ரீதி சிங், குல்ஷன் க்ரோவர், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திர கனி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னில கிஷோர் என ஒரு மளிகை கடை பட்டியலுக்குப் போட்டியாக இப்படத்தின் நட்சத்திரப்பட்டியல் நீள்கிறது.

இப்படத்தில் இந்தியன் லஞ்சம், அரசியல் பிழைகளுக்கு எதிராக போராடும் ஒரு இளைஞருக்கு கைக்கொடுப்பது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யா 42 [Suriya 42]

சூர்யா மீண்டும் பாலாவுடன் இணைகிறார் என்றதும் ‘வணங்கான்’ படத்திற்கு பெரும் எதிர்பார்பு ஏற்பட்டது. ஆனால் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையில் நடந்த வாதப்போர் வணங்கானை இல்லாமல் செய்துவிட்டது.
ஆனாலும் சூர்யா, சிறுத்தை சிவாவுடன் இணையும் படத்திற்கென்று ஒரு மவுசு உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிக பெயராக சூர்யா 42 என்று வைத்திருக்கிறார்கள்.

இப்படம் மகதீரா போன்று ஒரு ப்ரீயட் படமாகவும், தற்போது நடக்கும் காட்சிகளாகவும் இருக்கும் என்கிறார்கள். அப்படி பார்க்கையில் ஒரு பக்காவான ஃபேன்டஸி அட்வெஞ்சர் படம் இது.

இதற்காக கோவாவில் முகாமிட்ட இப்படக்குழுவினர் தற்போது நடக்கும் காட்சிகளை முழுவீச்சில் ஷூட் செய்திருக்கின்றனர்.

முதல் முறையாக சூர்யா 3டி-யில் கலக்க இருக்கிறார். மேலும் இப்படத்தை பான் – இந்தியா படமாகவும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியிடும் திட்டமும் இருக்கிறதாம்.

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் மெல்லிடை அழகி திஷா பதானி நடிக்கிறார்.

கேப்டன் மில்லர்

அடுத்த வருடத்தில் எதிர்பார்பை கிளப்பும் படங்களின் வரிசையில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படமும் இணைந்திருக்கிறது. நானே வருவேன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் இந்தப்படம் ஒரு பக்காவான ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது.

‘சாணி காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன்தான் இந்த கேப்டனின் டைரக்டர்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தொடர்ந்து இரண்டுப் படங்களில் நடித்த ப்ரியங்கா மோகன் இதில் தனுஷூடன் காதல் செய்ய இருக்கிறார்.
ஜான் கொகேன், சிவ ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படத்தை ஒரே நேரத்தில் வெளியிட போகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...