பட்டாசு சத்தம் பட்டையைக் கிளப்ப ஆபீசுக்குள் வந்தாள் ரகசியா.
“என்ன முன்கூட்டியே தீபாவளியை கொண்டாடுகிறாயா”
“தீபாவளியெல்லாம் இல்லை. வாசலில் எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.”
“ஓ… தீர்ப்பு வந்ததற்கான கொண்டாட்டமா? 2 வாரங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பிரிவினர் பட்டாசு வெடித்து கொண்டாடுவது அதிமுகவில் வழக்கமாகி விட்டது. க்ளைமேக்ஸ் என்ன ஆகும் என்றுதான் தெரியவில்லை.”
“எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என அதிமுகவுக்காக அடித்துக்கொண்டிருக்க, அக்கட்சியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் எந்த பக்கத்தில் இருப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். கட்சி ஓபிஎஸ் வசம் சென்றால், அவர் சசிகலா, தினகரனிடம் கட்சியை ஒப்படைத்து விடுவார். இபிஎஸ் வசம் கட்சி போனால், அங்கு குறிப்பிட்ட ஜாதிக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கும். அதனால் நாம் என்ன செய்வது என்பது அவர்களின் யோசனையாக இருக்கிறது. இந்த விஷயம் செந்தில்பாலாஜியின் காதுக்குப் போக, அவர்களுக்கு வலை விரிக்கத் தொடங்கியுள்ளார். ‘திமுக இப்போது நம்ம கட்சி. நான், ரகுபதி, முத்துசாமி, கேகேஎஸ்எஸ்ஆர், சேகர்பாபு என்று அதிமுகவில் இருந்து சென்றவர்களுக்கு அங்கு நல்ல மரியாதை இருக்கிறது. நீங்களும் வாங்க. நாங்க பார்த்துக்கறோம்” என்று அவர்களிடம் பேசி திமுகவுக்கு இழுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாராம் செந்தில்பாலாஜி.”
“பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் போல் இது ஆபரேஷன் உதயசூரியனா?”
“ இதைக் கேட்டதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. இப்போது ஆபரேஷன் லோட்டஸ் தமிழ்நாடு பக்கம் திரும்பியிருக்கிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை வளைத்துப்போடும் முயற்சியில் பாஜக உள்ளதாம். இது தொடர்பாக சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதற்கு பலன் இருக்கிறதா இல்லையா என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும். அதேசமயம் இந்த விஷயம் உளவுத்துறைக்கு தெரியவர, அவர்கள் முதல்வரிடம் சொல்லி எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள்.”
“ஆளும் கட்சியிலிருந்து…அதுவும் வலுவான ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவிலிருந்து ஆட்கள் பாஜகவுக்கு மாறுவார்களா?”
“உண்மைதான். ஆனால் இந்த இழுக்கும் முயற்சி உடனடியாக படிப்படியாக செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். முக்கியமாய் நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் கட்சித் தாவல்கள் இருக்கும் என்று பாஜகவினர் கூறுகிறார்கள்”
“மார்கழி மாதத்தை தனுர் மாசம் என்று சிலர் அழைப்பார்கள். அதுபோல் திமுகவின் ஐடி விங் செப்டம்பர் மாதத்திற்கு திராவிட மாதம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த மாதத்தில் அண்ணா பிறந்தநாள், திமுகவின் தொடக்க நாள், பெரியாரின் பிறந்த நாள் என்று திமுக முப்பெரும் விழா கொண்டாடும். இப்போது மாதம் முழுவதும் இந்த கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறது திமுகவின் ஐடி விங். இதன்படி தினம்தினம் புதுப் புது விஷயங்கள், புதிய ஆட்கள் என்று பேச வைத்திருக்கிறார்கள் இதற்காக டிஆர் பாலுவின் மகன் டிஆர்பி ராஜாவை அழைத்து சபாஷ் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.”
”பிடிஆரை கடுமையாக அண்ணாமலை விமர்சித்திருக்கிறாரே…அது குறித்து திமுக தலைமையிடமிருந்து எந்த எதிர்கருத்தும் வரவில்லையே?”
“பிடிஆர் குறித்து திமுகவில் இரு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. பிடிஆரை ஆதரிப்பவர்கள் சிலர் இருந்தாலும் அவர் ரொம்ப பேசுகிறார், மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கிறார், இது நமக்கு சிக்கலை கொண்டு வரும் என்று கட்சித் தலைமையிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். கட்சித் தலைமையும் பிடிஆர் அதிகம் பேசுவதை விரும்பவில்லை. வீணாக எதற்கு வம்பை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் கட்சியின் மேலிடத்தில் இருக்கிறது. ஆனால் பிடிஆரிடம் நேரடியாக இதுவரை சொல்லவில்லை. முன்பு இது போன்று ஜக்கி வாசுதேவை கடுமையாக பிடிஆர் விமர்சித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அந்த விமர்சனங்கள் நின்றன. அதுபோல் விரைவில் பிடிஆர் அரசியல் மௌன விரதத்துக்கு மாறிவிடுவார் என்று கட்சிக்காரர்களே சொல்லுகிறார்கள்”
“பாஜகவை கோபப்படுத்தி விடக் கூடாது என்ற எண்ணத்தில் திமுக இருக்கிறதா?”
“அப்படியல்ல, பாஜக எதிர்ப்புதான் திமுகவின் அரசியல். அதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் பிடிஆரின் திறமை மீது முதல்வர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இத்தனை நிதி நெருக்கடியிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்று பாராட்டினாராம். அது மட்டுமில்லாமல் விலைவாசி உயர்வு குறித்து ஒரு புள்ளிவிவரம் வெளிவந்திருக்கிறது. அதில் விலைவாசியின் தேசிய சராசரி 6.8 சதவீதமாக இருக்கிறது. ஆனால் பெரிய மாநிலங்களில் விலைவாசி உயர்வு குறைவாக இருப்பது கேரளாவிலும் தமிழ்நாட்டிலும்தான். தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மிகக் குறைவாக 5.2 சதவீதமாக இருக்கிறது. கேரளாவில் 4.8 சதவீதமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகதான். தமிழக நிதித் துறை சிறப்பாக செயல்படுகிறது என்பது முதல்வரின் எண்ணம். ஆனால் பிடிஆர் தேவையிலலாத சர்ச்சைகளில் சிக்குவதை அவர் விரும்பவில்லை”
”தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி திட்டங்களை துவக்கி வைக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தமிழக அரசு கூப்பிட்டிருக்கிறதே, திமுகவின் தேசிய அரசியல் நிலைப்பாடு மாறுகிறதா?”
“காங்கிரசை கழற்றிவிடுகிறதானு கேக்குறிங்க. காங்கிரசுக்கு தமிழ் நாட்டுல வாக்கு சதவீதம் அதிகம். அதனால காங்கிரசை தள்ளி வைக்க வாய்ப்பில்லை. ஆனால் தேசிய அளவுல திமுக தலைவரின் பிம்பம் தெரிய வேண்டும் என்பதற்காக திமுக எடுக்கும் முயற்சிகளில் இது ஒன்று. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இந்தியாவின் பல பகுதிகளில் திமுக தலைவரின் பெயரும் முகமும் பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும் என்று திமுகவின் தேர்தல் ஆலோசனைக் குழு திட்டமிட்டிருக்காங்க”
“கெஜ்ரிவாலை கூப்பிட்டதனால திமுக மீது காங்கிரஸ் கட்சியினருக்கு ஏதோ வருத்தம் என்று கேள்விப்பட்டேனே?”
“ஆமாம்.டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை கபளீகரம் செய்தது ஆம் ஆத்மி கட்சிதான். இப்படி நம் கட்சியையே கபளீகரம் செய்த கேஜ்ரிவாலை திமுக அழைப்பதா என்று காங்கிரஸ் கட்சியினர் பொங்குகிறார்கள். ஆனால் அதைக் கண்டித்து அறிக்கை விடவோ அல்லது பேட்டி கொடுக்கவோதான் அவர்களுக்கு தைரியமில்லை.”
“காங்கிரஸ் தலைவராக பதவியேற்க நேரு குடும்பத்தினர் மறுத்துவரும் நிலையில் யாருக்கு அந்த வாய்ப்பு வரப் போகிறது? நம்ம ஊர் சிதம்பரத்துக்கு கிடைக்குமா?”
“தலைவராகும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் ப.சிதம்பரத்தின் பெயரும் ஆரம்பத்தில் இருந்துள்ளது. ஆனாஅல் இப்போது அவரது பெயர் எலிமினேட் ஆனதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்திக்கு ப.சிதம்பரத்தை பிடிக்காததே இதற்கு காரனம் என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். ஆனால் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களோ, ‘அவர்தான் தலைவர் பதவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் காங்கிரஸ்ல சிதம்பரத்துக்கு எதிர்கோஷ்டிதான் அதிகம்”
“அவர் பையன் கார்த்தி சிதம்பரம் ஏர்போர்ட்ல அண்ணாமலை கூட செல்ஃபி எடுத்துக்கிட்டு இருந்தா காங்கிரஸ்காரங்க எப்படி சிதம்பரத்தை விரும்புவாங்க?”
“அதிமுக விவகாரங்கள் ஏதும் இருக்கிறதா?”
“ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகளை இணைக்கும் முயற்சியில் சைதை துரைசாமி, ஹண்டே உள்ளிட்ட 5 மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சமாதான முயற்சிக்கு ஓபிஎஸ் கொஞ்சம் தலையசைத்தாலும் இபிஎஸ் கொஞ்சம்கூட பிடி கொடுக்கவில்லையாம். இதனால் தங்கள் முயற்ச்சியில் தோல்வி அடைந்துள்ளனர் மூத்த தலைவர்கள். இதைவைத்து பார்த்தால் அரசியலையும் தாண்டி இருவருக்குள்ளும் வேறு ஏதோ முக்கிய பிரச்சினை இருக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.”
“ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டேனே?”
“எல்லாவற்றுக்கும் மன உளைச்சல்தான் காரணம். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தொடர்பான வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்வரை தீபாவும், அவரது அண்ணனும் ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். தீபாவின் வீட்டு மாடியில்தான் அவரது அண்ணன் தீபக் குடியிருக்கிறார். தீபாவை அநியாயத்துக்கு சந்தேகப்படுகிறாராம் தீபக். போயஸ் கார்டன் வீட்டை சுத்தப்படுத்துவதற்காக தீபா போய் வந்தால்கூட அங்கிருந்து ஏதாவது எடுத்து வந்துவிட்டாரோ என்று சந்தேகப்படுகிறாராம். தீபாவிடம் முகம் கொடுத்துகூட பேசுவதில்லையாம். எடப்பாடி தரப்பினர்தான் தீபக்கை தங்கள் கையில் வைத்து இப்படி ஆட்டுவிப்பதாக சந்தேகப்படுகிறார் தீபா. இது ஒருபுறம் இருக்க, தீபாவுக்கும், அவரது கணவருக்கும் இடையில்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் ஏற்பட்ட மன உளைச்சல்கள்தான் தீபாவை உடல் ரீதியாக பாதித்துள்ளது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.”
”அத்தை ஜெயலலிதா இருந்த போதும் அவர்களால் போயஸ் தோட்ட வீட்டை அணுக முடியவில்லை. இப்போதும் அனுபவிக்க முடியல”