No menu items!

பதான் – விமர்சனம்

பதான் – விமர்சனம்

நொடிக்கு நொடி பல நாடுகளுக்குப் பறக்கும் ஒரு பவர்ஃபுல் அண்டர்கவர் ஏஜெண்ட்டாக இருக்கும் ஹீரோ.

இப்பேர்பட்ட ஹீரோவை விட எல்லா அம்சங்களிலும் பலசாலியான வில்லன்.

வில்லனின் பக்கமிருந்தாலும் ஹீரோவுடன் நெருக்கமாகும் கவர்ச்சிகரமான ஹீரோயின்.

ஒரு லேடி பாஸ்.

பின்னணியில் ஏதாவது ஒரு நாட்டின் உளவு அமைப்பு, மற்றொரு நாட்டின் ராணுவம்.

எல்லா பஞ்சாயத்துகளையும் தனி ஒருவனாக ஹீரோ வெற்றிக் கொள்ளும் க்ளைமாக்ஸ்.

இதுதான் புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களின் சக்ஸஸ்ஃபுல் டெம்ப்லெட்.

இதே டெம்ப்லெட்டைதான் ‘பதான்’ படத்தில் அப்படியே கையிலெடுத்து இருக்கிறார்கள்.

எந்த மிஷனாக இருந்தாலும் அசால்ட்டாக எதிர்கொள்ளும் இந்திய ராணுவத்தின் ஏஜெண்ட் ஷாரூக்கான். அவருக்கு வில்லத்தனம் காட்டும் முன்னாள் ராணுவ வீர்ர் ஜான் ஆப்ரஹாம். ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கவர்ச்சிகரமான ஏஜெண்ட் தீபிகா படுகோன். மிஸ்டர் எக்ஸ் கதாபாத்திரத்தைப் போல் கெத்து காட்டும் லேடி பாஸ் டிம்பிள் கபாடியா. ஹீரோ & டீம்மை மட்டம் தட்டும் கர்னலாக ஆஷூதோஷ் ரானா. மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் சூப்பர் ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் வருவார்களே அதேபோல் பாலிவுட்டில் முன்பு ‘டைகர்’ கதாபாத்திரத்தில் ரவுசு காட்டிய சல்மான் கான்.

இப்படி ஒரு ஆக்‌ஷன் படத்திற்கு தேவையான கதாபாத்திரங்களை வைத்து கொண்டு ஒரு ஹை ஆக்டேன் ஆக்‌ஷன் படத்தை இயக்கியிருக்கிறார் சித்தார்த் ஆனந்த்.

படம் பார்க்க ஆரம்பிக்கும் சில நிமிடங்களிலேயே ஒரு விஷயம் புரிந்து விடுகிறது. ’லாஜிக்.. லாஜிக்..’ என்று ஒன்று இருக்குமே அதை நீங்கள் கொறிப்பதற்காக வாங்கி வைத்திருக்கும் பாப் கார்ன் டப்பாவில் மொத்தமாக அள்ளி கொட்டிவிட்டு படம் பார்த்தால் உத்தமம். என்பது புரிகிறது.

மனதைப் புரட்டி போடுகிற கதை இல்லை. ஒரு அண்டர்கவர் ஏஜெண்ட் என்னவெல்லாம் செய்வாரோ அதை திரைக்கதையில் விறுவிறுப்பாக காட்ட முயற்சித்திருக்கிறார் கதாசிரியர் ஸ்ரீதர் ராகவன்.

இந்திய அரசு ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் 370-வது பிரிவை ரத்து செய்கிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை ‘தப்பு’ என்று கர்ஜிக்கும் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி இந்தியாவுக்கு பாடம் புகட்ட நினைக்கிறார். பணம் கொடுத்தால் கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்கும் ஜான் ஆப்ரஹாமை இந்தியாவுக்கு எதிரான தனது மிஷனில் கமிட் செய்கிறார்., இவருடன் முன்னாள் ஐஎஸ்ஐ ஏஜெண்ட் தீபிகா படுகோனும் களத்தில் இருக்கிறார். இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரர் ஷாரூக்கான். இப்பொழுது அண்டர்கவர் ஏஜெண்ட்டாக இருக்கிறார். இந்த மிஷனில் இந்தியாவைக் காப்பாற்ற நம்ம பதான் ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின் என பறந்து பறந்து ஜான் ஆப்ரஹாமை எப்படி துவம்சம் செய்கிறார் என்பதே கதை.

இங்கே நம்ம ஹீரோக்கள் விதவிதமான ’விக்’குகளில் வந்து வித்தைக் காட்ட, 57 வயதாகும் ஷாருக்கான் சிக்ஸ் பேக்கில் [சிஜிஐ உபயம் என்கிறார்கள்] வந்து மிரட்டுகிறார். ஷாரூக்கான் சிக்ஸ்பேக்கில் வரும் காட்சிகளில் கைத்தட்டல்கள் அள்ளுகிறது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக்கான் ஆக்‌ஷனில் களமிறங்கி இருப்பதால் படம் முழுக்க அடிதடி தாறுமாறு. ஆக்‌ஷன் காட்சிகளில் ஹாலிவுட்டின் டாம் க்ரூஸை ஞாபகப்படுத்துகிறார் ஷாரூக்கான். இவர் ஜான் ஆப்ரஹாம் டீம் ஆட்களை அடிக்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு விழுவது போல வலிக்கிறது. அந்தளவிற்கு ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார் ஷாரூக்கான். . தனது தலைமுடியை கொண்டைப் போட்டுக்கொண்டு வந்தது நிற்கும் கெட்டப், அவரது ரசிகர்களுக்கு ஃபேன் பாய் ஸ்டைலாக வாய்ப்புகள் அதிகம்.

அதிகப்பட்சம் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், ஸ்விம் சூட்தான் தீபிகா படுகோனுக்கு. திகட்ட திகட்ட காட்டும் கவர்ச்சி, அடிதடி கலந்த ஆக்‌ஷன் காக்டெய்ல்லாக கிறங்கடிக்கிறார் தீபிகா படுகோன். சண்டைக்காட்சிகளிலும் அழகாய் அதிரடி காட்டுகிறார்.

ஜான் ஆப்ரஹாம். அபாரம். மாஸ்க் போட்டு கொண்டு அறிமுகமாகும் எண்ட்ரீ மிரட்டல். பல காட்சிகளில் ஆக்‌ஷனில் ஷாரூக்கானை ஒரங்கட்டி விடுகிறார். இவர்தான் பாஸ் வில்லன் என்று சொல்ல வைத்திருக்கிறது இவரது பெர்ஃபார்மன்ஸ்.

பழைய விக்ரமில் வசீகரித்த டிம்பிள் கபாடியாவை இப்பொழுது பார்க்கும் போது மனம் கனக்கிறது. காரணம் முகத்தில் இருக்கும் முதுமை. தான் இப்பொழுதும் பெர்ஃபார்மன்ஸ் ஆர்டிஸ்ட்டுதான் என்று நடிப்பில் கெத்து காட்டியிருக்கிறார்.

கெஸ்ட் ரோலில் ஒரு ஃபைட்டுக்கு மட்டும் வந்தாலும், டைகர் சல்மான் கான் அடிக்கும் அடியை விட அவரது டயலாக் டெலிவரி செம வெயிட்.

ஹம்மர் காரில் துரத்தும் காட்சி, ஃபால்கன் மாதிரி பறக்கும் விங்சூட் சண்டைக்காட்சி, கார் சேசிங், அதிர வைக்கும் அடிதடி உறைந்த ஏரியில் சில்லிட செய்யும் சேசிங், சூப்பர் ஹீரோ படம் பார்ப்பது போன்ற உணர்வை உருவாக்கி விடுகிறது.

‘ஹிந்தியில பேசுடா’ என்ற ஷாரூக்கின் ஓபனிங் காட்சி, மார்பழகை அளவோடு காட்டி தொடைழகை முழுவதுமாக காட்டுகிற கருப்பு நிற உடையில் தீபிகா படுகோனைப் பார்க்கும் ஷாருக், ‘இங்கே போலீஸ் இல்லையா. பார்க்க பாம் மாதிரி இருக்க’ என்று அடிக்கும் கமெண்ட்டாக இருக்கட்டும், ‘இதைவிட சீப்பான ட்ரிங்க்ஸ் இல்லையா’ என்று கேட்கும் தீபிகாவிடம், ‘உங்க ஐஎஸ்ஐ. அளவுக்கு எங்களுக்கு பட்ஜெட் இல்ல’ என்று சிரிக்கும் ஷாரூக் இப்படி படத்தில் வசனத்திலும் சின்ன சின்ன எண்டர்டெயின்மெண்ட் இருக்கிறது.

அநேகமாக அனைத்து இசைக்கருவிகளையும் பயன்படுத்தி இருப்பார்கள் போலிருக்கிறது. பின்னணி இசை பல காட்சிகளில் ஒன்றிப் போகவே இல்லை. ஆனால் ஒளிப்பதிவு, பற்றியெறியும் ஆக்‌ஷனுக்கான பெட்ரோல் போல் இந்த பதானை சூடேற்றுகிறது.

சர்ச்சையைக் கிளப்பிய பேஸ்ஷரம் பாடலில் காவி நிற நீச்சல் உடையில் தீபிகாவின் அழகை வெளிச்சம் போட்ட காட்சிக்கு கத்திரி போட்டிருக்கிறார்கள்.

ஷாரூக்கின் பலமே அவரது எமோஷன்தான். ஆனால் படம் முழுக்க ஷாரூக்கின் எமோஷனை ஆக்‌ஷன் ஓவர்டேக் செய்திருக்கிறது. இது ஷாரூக்கானின் ரசிகைகளுக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கலாம்.

நல்லவனுக்கும் கெட்டவனுக்கு இடையே நடக்கும் சண்டை. கடைசியில் நல்லவன்தான் ஜெயிப்பான் என்பது ஒரு சக்ஸஸ் ஃபார்மூலா. அதை நன்றாகவே எடுத்திருக்கிறார் சித்தார்த் ஆனந்த்.

அடிதடியெல்லாம் முடிந்து, ஷாரூக்கும் தீபிகாவும் கண்களால் பேசி, ஷாரூக் தலைக்கு ஷாம்பூ போட கிளம்பிய பிறகு, சல்மானும் ஷாரூக்கும் பண்ணும் டிஸ்கஷன், அசல் ‘Epic‘

‘முப்பது வருஷமாச்சு. நாம ரெண்டு பேரும் இதுக்கு வந்து. அவன் சரியா இருப்பானா.. இவன் சரியா இருப்பானா..இல்ல அந்த….. நாட்டை நாம தான் காப்பாத்தணும். வேற வழியில்ல’ என்ற அந்த டயலாக்குகளில் இருக்கும் டபுள் மீனிங் ஸ்பூப், சினிமாவில் இவர்கள் இருவரின் மாஸ்ஸை டச் செய்திருப்பது ரசிக்க வைக்கிறது.

பதான் – லேசுப்பட்டவன் இல்ல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...