ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக 4 ஓபிஎஸ்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரே தொகுதியில் 5 ஓபிஎஸ்கள் போட்டியிடுவதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பாஜக கூட்டணியில் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை தாமரை சின்னத்தில் நிற்குமாறு பாஜக வற்புறுத்தியது. ஆனால் அதை ஏற்க மறுத்த ஓபிஎஸ், சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இந்த சூழலில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் அதே பெயரில் மேலும் 4 வேட்பாளர்கள் வேபுமனு தாக்கல் செய்துள்ளனர். மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம், அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் ஆகியோர்தான் அந்த 4 வேட்பாளர்கள். ஓபிஎஸ்ஸின் சின்னம் பிரபலமாக இல்லாத நிலையில், அவரது பெயரில் புதிதாக 4 வேட்பாளர்கள் நிற்பது வாக்காளர்களை குழப்பியுள்ளது. இது ஓபிஎஸ்ஸின் கொஞ்சநஞ்ச வெற்றி வாய்ப்பையும் பாதிக்குமோ என்று அவரது ஆதரவாளர்கள் கவலைப்படுகிறார்கள். அதனால் அவர்களை வாபஸ் வாங்கச் செய்யும் முயற்சியில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புதல் அவசியம் – பாமக தேர்தல் அறிக்கை
பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று பாமகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று வெளியான பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.
உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
மத்திய அரசின் வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.
ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறதோ, அதில் 50%&ஐ அந்த மாநிலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பா.ம.க. வலியுறுத்தும்.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும். அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்ற பா.ம.க. வலியுறுத்தும்.
உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என அனைத்து விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். உற்பத்தி செலவுடன் 50% இலாபம் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படும்.
சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு மானியம் ரூ.6,000&லிருந்து ஏக்கருக்கு ரூ.10,000ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு உழவருக்கும் அதிகபட்சமாக ரூ.30,000 வழங்கப்படும்.
வேளாண் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலங்களில் மாதம் ரூ.2,500 நிதியுதவி.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கங்கை முதல் காவிரி வரையிலான இந்தியாவின் பெரும்பான்மையான நதிகள் இணைக்கப்படும். அதற்காக தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.
பாமக கட்சியின் தேர்தல் அறிக்கையில், இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம் என்கிற வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்துக்குப் பெற்றோர் ஒப்புதல் அவசியம். இந்தியாவில் கர்நாடகா உயர் நீதிமன்றமும் இதனை வலியுறுத்தி உள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும் குடும்ப அமைப்பைக் காக்கவும் வளிரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்துக்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.
அமைச்சர் நேருவுக்கு உடல்நலக் குறைவு
அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தினார்.
அமைச்சர் நேருவின் மகன் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று காலை கொசூர் பகுதியில் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தபோது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ”எனக்கு மயக்கமாக வருகிறது” என்று கூறிய நேரு பிரச்சாரத்தை பாதியில் முடித்துக்கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
மைக் இல்லாமல் புரட்சி இல்லை – சீமான்
நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்கலிடம் கூறியது:
கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். ப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். அதில் எந்த சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.
எங்களை சுயேச்சையாக நிறுத்தி, 40 தொகுதிகளுக்கும் 40 சின்னங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். ஏழு சதவிகித வாக்குக்கே பயம் என்றால், இந்த தேர்தலில் நான் என்ன செய்வேன் என்று யாருக்கு தெரியும். மைக் புரட்சியாளர்கள் பயன்படுத்திய ஒன்று. மைக் இல்லாமல் புரட்சியே இல்லை. சின்னம் மாற்றத்தால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை