நாடாளுமன்ற தாக்குதல் நினைவஞ்சலி தினமான இன்று நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இருவர் திடீரென அவைக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.
நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வார திங்கள் கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி லஷ்கர் ஏ தொய்பா அமைப்பினர் இந்திய பாராளுமன்றத்தில் ஒரு வாகனத்தில் வந்து கடும் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், அந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் 22ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று மக்களவையில் அனுசரிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மக்களவையில் இன்று பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர் திடீரென அவைக்கு குதித்து, மேஜை மீது ஓடினர். உள்ளே நுழைந்த இருவரும் தங்கள் காலணியில் மறைத்து வைத்திருந்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பின்னர் ‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி மேஜையில் தாவி குதித்து தப்பிக்க முயன்றனர். இருவரையும் எம்.பிக்களே மடக்கி பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகள் வீசிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் வந்திருந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் அவையில் இல்லை. சத்தீஸ்கர் மாநில முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக பிரதமர் ராய்ப்பூர் சென்றிருந்த நிலையில் மக்களவை இந்த சம்பவம் நடந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவைக்கு வந்த சில நிமிடங்களில் இந்த சம்பவம் அரங்கேறியது.
புகை குண்டுகளை திறந்ததால் மக்களவையில் மஞ்சள் நிற புகை எழுந்ததாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மக்களவை பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடி உள்ளன. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இதுகுறித்து பேசிய போது “திடீரென்று 20 வயதுடைய இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து சபைக்குள் குதித்து கையில் குப்பிகளை வைத்திருந்தனர். இந்த குப்பிகள் மஞ்சள் புகையை உமிழ்ந்தன. அவர்களில் ஒருவர் சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓட முயன்றார். சில கோஷங்களை எழுப்பியது. புகை விஷமாக இருந்திருக்கலாம். இது 2001 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாக்கப்பட்ட டிசம்பர் 13 அன்று ஒரு கடுமையான பாதுகாப்பு மீறலாகும்.” என்று தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ககோலி தஸ்திதர் இதுகுறித்து பேசிய போது “எனக்குத் தெரியாது, இரண்டு நபர்கள் கேலரியில் இருந்து குதித்தனர். அவர்கள் கோஷங்களை எழுப்பினர், மேலும் சில வாயுக்களை வீசினர்,” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து பாராளுமன்றத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தற்போது பாராளுமன்றம் முழுவதும் தீவிர சோதனைக்கு உட்படுத்த பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.