No menu items!

ஓபிஎஸ் – வளர்ந்ததும் வீழ்ந்ததும்

ஓபிஎஸ் – வளர்ந்ததும் வீழ்ந்ததும்

எதிர்பார்த்தபடியே அதிமுக பொதுக்குழு ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக முடிந்திருக்கிறது. ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை கொண்டுவரக் கூடாது என்று இன்று விடியலில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டுவரக் கூடாது என்று சொல்லாமல் சொல்லியிருந்தார்கள். ஓபிஎஸ் தரப்பு ஸ்வீட் எடுத்து கொண்டாடியது. அந்த இனிப்பு சில மணி நேரங்கள் மட்டுமே.

இன்று நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. ஒற்றைத் தலைமை கோஷங்கள் ஓபிஎஸ் முன்னிலையிலேயே ஓங்கி எழுப்பப்பட்டன. ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு நடைபெறும் என்று புதிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவிக்காமல் அவைத் தலைவரால் பொதுக் குழுவை கூட்ட இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் ஒரு நீண்ட நீதிமன்ற போரட்டம் நடக்கலாம்.

ஆனால் நீதிமன்றம் சென்றாலும் செல்லாவிட்டாலும் ஒரு விஷயம் மிகத் தெளிவாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்குதான் அதிமுகவினரின் முழுமையான ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் அட்டைக் கத்தியாகவே மீண்டும் காட்சியளிக்கிறார்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த வாய்ப்புகள் போல் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. ஜெயலலிதாவாலேயே இரண்டு முறை முதல்வராக நியமிக்கப்பட்டவர். ஜெயலலிதா கை காட்டியவர் என்ற மிகப்பெரிய தகுதியை அவர் தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக தன்னை முன்னிறுத்தி அரசியல் செய்திருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா காலமானார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பு ஏற்கிறார். முதல்வர் பதவி மீது சசிகலாவுக்கு ஆசை வருகிறது. அதிமுகவின் பொதுச் செயலாளராகிறார். ஓபிஎஸ் ராஜினாமா செய்கிறார். அதிமுகவின் பொருளாளர் பதவி பறிக்கப்படுகிறது. ஜெயலலிதா சமாதி முன் தியானம் செய்கிறார். தர்ம யுத்தம் என்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு அது.

ஜெயிலுக்குப் போகும் சசிகலா, தவழ்ந்து சென்று ஆசிர்வாதம் வாங்கும் எடப்பாடி இவர்களுக்கு இடையே ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் உயர்ந்த தலைவராக தெரிகிறார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்கிறார். விசாரணை வேண்டும் என்று அழுத்தமாக சொல்கிறார். அதிமுகவினர் ஓபிஎஸ்ஸை அண்ணாந்து பார்த்தார்கள். ஆஹா ஒரு நல்ல தலைவன் கிடைத்துவிட்டான் என்ற நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். ஆனால் அந்த வாய்ப்பையும் ஓபிஎஸ் இழந்தார். எடப்பாடி பழனிசாமியுடன் கை குலுக்கினார்.

ஓபிஎஸ் கேட்டுக்கொண்டபடி ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு நினைவில்லமாக மாற்றப்படும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார்.
ஆட்சித் தலைமையாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிப்பார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்படுகிறது. கட்சித் தலைமையாக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளாராக ஈபிஎஸ்ஸும் இருப்பார்கள் என்றும் ஒப்பந்தம் போடப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர்தானே முழுமையான ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்தானே என்று அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

முதல்வரின் அதிகாரங்களில் துணை முதல்வர் குறுக்கிட முடியாது. முதல்வர் கையெழுத்து முதல்வர் கையெழுத்துதான் துணை முதல்வர் கையெழுத்தும் தேவை என்ற நிலை இல்லை. ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தில்லாமால் முடிவுகளை எடுக்க இயலாது.

இந்த நுட்பத்தை ஓபிஎஸ் புரிந்துக் கொள்ளவில்லையா அல்லது புரிந்தும் கிடைத்தது போதும் என்று இருந்தாரா என்று தெரியவில்லை. அங்கேயும் கோட்டைவிட்டார்.
ஒருங்கிணைப்பாளராக தனது அதிகாரங்களை ஓபிஎஸ் பயன்படுத்தினாரா என்பதும் கேள்விக்குறிதான். அதிமுகவில் அணிகள் இணைந்தபோது 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு இந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறையாவது கூடி ஆலோசித்ததா? வழிகாட்டியதா என்றால் ஒரு முறை கூட நடந்ததில்லை என்பதுதான் உண்மை. அந்தக் குழுவை கூட்டி அதிமுகவை தன் வழியில் ஓபிஎஸ் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் ஓபிஎஸ் அந்த வாய்ப்பையும் தவற விட்டார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அங்கேயும் தன் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள ஓபிஎஸ் தவறினார். அவருடைய ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்புகள் வாங்கித் தரவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. தனது மகனுக்கு மட்டும் சீட் வாங்கிக் கொண்டார் என்று அவரது ஆதரவாளர்களே விமர்சித்தார்கள். அவருடைய ஆதரவாளர்களாக இருந்த ராஜேந்திரபாலாஜி, அன்வர் ராஜா போன்றோருக்கும் அவர் உதவவில்லை.

அவருடனே இருந்த மாஃபா பாண்டியராஜன் கூட அவர் மீது நம்பிக்கை இழந்து எடப்பாடி பக்கம் சென்று விட்டார். 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் தனது ஆதரவாளர்களுக்கு சீட் பெற்றுத் தரவில்லை.

தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அவர் போட்டியிட வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருந்தால் இன்று அவருடைய ஆதரவாளர்கள் என சில எம்.எல்.ஏ.க்கள் இருந்திருப்பார்கள். ஆதரவாளர்களை வளர்க்க தவறியதும் ஓபிஎஸ்ஸின் இறங்கு முகத்துக்கு காரணமாக இருக்கிறது.

2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக வன்னியருக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பிறபடுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதத்தை பிரித்துக் கொடுத்தால் மற்ற சமூகத்தினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் முக்கியமாய் பன்னீர்செல்வம் சார்ந்துள்ள சமூகத்தினருக்கு அது ஏற்புடையது அல்ல என்பதை ஓபிஎஸ் புரிந்திருந்தும் அதை தடுக்க முயற்சிக்கவில்லை.

தன்னுடைய் அரசியல் போட்டியாளரான எடப்பாடிக்கு இந்த உள் ஒதுக்கீடு அரசியல் ரீதியாக உதவும் என்று தெரிந்தும் அவர் தடுக்கவில்லை என்பது அவரது பலவீனமே.

வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானதே என்று ஓபிஎஸ் கூறியும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது இந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீடு. ஆனால் எடப்பாடி சார்ந்த மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் இந்த உள் ஒதுக்கீடு அதிமுகவுக்கு பெரிய அளவில் வாக்குகளைப் பெற்றுத் தந்தது. எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.

சசிகலா குறித்த ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. 2017 பிப்ரவரியில் சசிகலா குடும்பத்தை எதிர்த்துதான் தியானம் செய்தார், தர்ம யுத்தம் நடத்தினார். அந்தக் குடும்பத்துக்கு அதிமுகவில் இடமில்லை என்றார்.

எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த பிறகும் அதே நிலைப்பாட்டைத் தொடர்கிறார். ஆனால் 2018ல் தினகரனை ரகசியமாய் சந்திக்கிறார் ஒபிஎஸ்.

இந்த சந்திப்பை தங்கத் தமிழ்செல்வன் பகிரங்கப்படுத்தியதும், ஆமாம் சந்தித்தேன் என்று ஒப்புக் கொள்கிறார். அதன்பிறகு 2021ல் சசிகலா விடுதலையாகி வந்தப் பிறகும் சசிகலா குறித்து குழப்ப நிலையிலேயே தொடர்ந்தார் ஓபிஎஸ். சசிகலாவைக் குறித்து தலைமைக் கழகம் ஆலோசிக்கும் என்று கடந்த அக்டோபரில் குறிப்பிட்டது அதிமுகவில் சர்ச்சையாகியது. ஓபிஎஸ் சசிகலா குடும்பத்தினருக்காக செயல்படுகிறார் என்ற கருத்து அதிமுகவினரிடையே பலமாக இருக்கிறது. இதுவும் ஓபிஎஸ்ஸின் பலவீனம்.

தமிழ்நாட்டில் நாங்கள்தான் உண்மையான எதிர்க் கட்சி என்று கூறும் பாஜகவுடம் ஓபிஎஸ் நெருக்கமாக இருப்பதும் அவருக்கு எதிராக இருக்கிறது. மோடி சொல்லிதான் இணைந்தேன், துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று ஓபிஎஸ் கூறியதை பாஜகவின் தலைமையே ரசிக்கவில்லை. பிரதமரை தேவையில்லாமல் இந்த சிக்கலுக்குள் ஓபிஎஸ் இழுத்து விட்டிருக்கிறார் என்பதே பாஜகவினரின் கருத்து. பாஜகவின் ஆதரவும் ஓபிஎஸ்க்கு குறைந்துவிட்டது.

சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் சந்தித்ததையும் அதிமுகவினர் ரசிக்கவில்லை. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். காலத்தில் திமுகவினரை சந்திப்பதை அதிமுகவினர் அறவே தவிர்ப்பார்கள். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளரின் மகனே திமுக தலைவரை சந்தித்தது அதிமுகவின் நடைமுறைக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வும் ஓபிஎஸ்க்கு எதிரானதாகவே இருக்கிறது.

இனி ஓபிஎஸ்ஸிடம் மிச்சம் இருப்பது சட்டப் போராட்டம்தான்.

என் கையெழுத்தில்லாமல் பொதுக் குழு கூட்டியிருக்கிறார்கள். பொருளாளரான என்னை அதிமுகவின் நிதி அறிக்கையை வாசிக்கவிடவில்லை என்ற புகார்களுடன் அவர் நீதிமன்றம் செல்லலாம். ஜூலை 11ல் நடக்க உள்ள எடப்பாடி தரப்பு பொதுக்குழுவுக்கு தடை வாங்கலாம். பாஜக தலைமையிடம் மீண்டும் உதவி கேட்டுப் பார்க்கலாம். இவையெல்லாம்தான் இப்போது ஓபிஎஸ் முன் உள்ள வாய்ப்புகள்.

அவையெல்லாம் அவருக்கும் பலன் தருமா?

கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது ஓபிஎஸ்க்கு இனி சிரம காலம்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...