“அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவு” – அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு. இன்றைய பிரேக்கிங் நியூஸ் இதுதான். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கதவு மூடப்பட்டதற்கான செய்தி. ஓபிஎஸ் இந்த நிலைக்கு செல்ல என்ன காரணம்?
அதிமுகவில் யாருக்குமே அடிக்காத ஒரு அதிர்ஷ்டம் 2001 செப்டம்பரில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலகினார். யாருமே எதிர்பார்க்காத விதத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதிமுகவில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அது. ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் பெற்றார். ஆனால் அந்த புகழ் வெளிச்சம் எதையும் பொருட்படுத்தாமல் மிகுந்த பணிவு, பவ்யத்துடன் கிட்டத்தட்ட கேள்விக்குறி போல் வளைந்து முதல்வராக வலம் வந்தார்.
பெரியகுளத்துக்காரர். விவசாயக் குடும்பம் என்றாலும் அவர் நடத்திய டீக்கடை அதிக பிரபலம். டீக்கடைக்காரார் முதல்வரானார் என்று பின்னால் அவரை வர்ணிப்பதற்கு அவர் வைத்திருந்த டீக்கடை உதவியது. அவர் டீக்கடை வைத்ததற்கும் காரணம் உண்டு. பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த பன்னீர்செல்வம் மிச்சமாகும் பாலை காசாக்க எண்ணித்தான் டீக்கடை திறந்தார் என்று உள்ளூர் மக்கள் சொல்வார்கள்.
விவசாயம், பால் வியாபாரம், டீக்கடை என்று வளர்ந்துக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தின் அடுத்த முயற்சி அரசியல். எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்த புதிதிலேயே கட்சியில் சேர்ந்தார். கட்சியில் படிப்படியாக மெதுவான வளர்ச்சி. எம்.ஜி.ஆர் மறைந்ததும் ஜானகி அணிக்கு சென்றார். 1989-ல் போடி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது அவருக்கு எதிராக ஜானகி அணி சார்பாக வெண்ணிற ஆடை நிர்மலா போட்டியிட்டார். நிர்மலாவுக்கு ஆதரவாக ஜெயலலிதாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அந்தக் காட்சியை இப்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பொதுவெளியில் பேசி ஓபிஎஸ்ஸை டேமேஜ் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜானகி அணிக்குப் பிறகு ஜெயலலிதாவிடம் வந்து சேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். இப்படி வளர்ந்துக் கொண்டிருந்த ஓபிஎஸ்க்கு 1999-ல் மீண்டும் ஒரு அதிர்ஷடம் அடித்தது. பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அவருக்கு எல்லாமாக இருந்து உதவியவர் ஓ.பன்னீர்செல்வம். அந்தத் தேர்தல் மூலம் சசிகலா குடும்பத்தினரின் தொடர்பு கிடைத்தது. அந்தத் தொடர்புதான் அவரை 2001-ல் முதல்வராக்கியது. 2014-ல் ஜெயலலிதா சிறை சென்றபோது மீண்டும் ஒரு முறை முதல்வராக்கியது.
2016-ல் ஜெயலலிதா மறைந்தபோது மீண்டும் மூன்றாம் முறையாக முதல்வரானார் ஓபிஎஸ். இப்படி மூன்று முறை முதல்வராக பதவியில் இருந்த – அதிமுகவின் ஒருங்கிணைப்பாளாராக வலம் வந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிமுகவிலேயே இல்லை. தலைமைக் கழக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கச் சொல்லி நீதிமன்றமே கூறிவிட்டது.
ஓ.பன்னீர்செல்வம் இன்று அரசியல் ஆதரவற்ற முன்னாள் தலைவராக மாறிவிட்டார்.
இத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் ஓ.பன்னீர்செல்வத்தால் ஏன் அதிமுகவை தன் வசப்படுத்த முடியவில்லை?
அரசியலில் மிக முக்கியமான செயல் இருக்கிறது. தனக்கான விசுவாசிகளை உருவாக்குவது.
அந்தக் காலத்தில் தலைவர்கள் மீது கொண்ட ஈர்ப்பால் விசுவாசிகள் உருவானார்கள். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இவர்களுக்கெல்லாம் அவர்கள் மீது கொண்ட அதீத ஈர்ப்பால் எந்த சூழலிலும் மாறாத விசுவாசிகள் இருந்தார்கள். தலைவர் பின்னே அணி வகுத்து நின்றார்கள்.
1976-லிருந்து 1989 வரை – 13 வருடங்களில் – திமுக ஆட்சியில் இல்லை. ஆனால் திமுக தலைவர் கலைஞரின் விசுவாசிகள் குறையவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கென விசுவாசிகளை உருவாக்கி வைத்திருந்தார். ஆட்சி, அதிகாரம் இல்லையென்றாலும் கலைஞர் பின்னால் நின்றார்கள். அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
அது போன்ற தானாய் சேர்ந்த கூட்டத்தை இன்றைய தலைவர்களால் உருவாக்க முடியவில்லையென்றாலும் பணம், பதவி மூலம் தங்களுக்கான விசுவாசிகளை உருவாக்குகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அதைதான் செய்கிறார். பன்னீர்செல்வம் அதை செய்ய தவறிவிட்டார். அவருடைய மகன் ரவீந்திரநாத்தை தவிர அவரால் பயன்பெற்றவர்கள் பட்டியல் அதிமுகவில் மிகக் குறைவு.
ஜெயலலிதாவுக்குப் பிறகு தனக்கான ஆதரவாளர்களை, விசுவாசிகளை ஓபிஎஸ்ஸால் உருவாக்கியிருக்க முடியும்.
சசிகலா குடும்பத்தினரை எதிர்த்து 2017-ல் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தத்தை துவக்கினார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர் மிகப் பெரிய ஹீரோவாக பார்க்கப்பட்டார்.
2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைவு, அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்பு, சென்னையில் வீசிய வர்தா புயலின்போது ஓபிஎஸ் செயல்பட்ட விதம், 2017 ஜனவரியில் மெரீனா ஜல்லிக் கட்டு போராட்டம், ஜல்லிக்கட்டுத் தடை நீக்கம் என தமிழ்நாட்டில் அரசியல் அனல் பறந்துக் கொண்டிருந்த சூழலில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். மிகப் பெரிய ஆதரவு அவருக்கு கிடைத்தது. பத்திரிகைகள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அவருக்கு ஆதரவு பெருகியது. முக்கியமாய் சசிகலா மீது வெறுப்பில் இருந்த அதிமுகவினர் ஆதரவு அவருக்கு கிடைத்தது. ஆனால் சசிகலா குடும்பத்துக்கும் அப்போது அவர்களுடன் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் ஆட்சி என்ற மிகப் பெரிய பலம் இருந்தது. அதை ஓபிஎஸ் எதிர்த்தபோது அவருக்கு ஆதரவு பெருகியது.
சசிகலா சிறைக்கு சென்றதும் அதிமுகவை தன் வசமாக்கும் வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்தது. ஆனால் டெல்லி பாஜக மேலிடத்தின் ஆலோசனையைக் கேட்டு மீண்டும் எடப்பாடியுடன் இணைந்தார். அந்த மிகப் பெரிய தவற்றை இன்று வரை ஓபிஎஸ்ஸால் சரி செய்ய இயலவில்லை.
கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர்தான். ஆனால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தன் ஆதரவு தளத்தை பெருக்கிக் கொள்ள ஓபிஎஸ் முயற்சிக்கவில்லை. தனக்கு ஆதரவாக நின்ற பத்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால் ஓபிஎஸ் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி சாமார்த்தியமாய் காய்கள் நகர்த்தி தனது ஆதரவுதளத்தை பெருக்கிக் கொண்டார்.
2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு சற்று முன்பு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தபோது அதை ஓபிஎஸ் தடுத்திருக்க வேண்டும். அதனால் அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் என்று பிடிவாதமாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை ஓ.பன்னீர்செல்வம். அந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக அவர் நின்றிருந்தால் அவர் சார்ந்த சமூகத்தினர் அவருக்கு முழு ஆதரவு அளித்திருப்பார்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் உறுதியாக நிற்கவில்லை.
முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சினை எழுந்த போதும் ஓபிஎஸ் தன்னைத் தியாகத் திருவுருவமாக பாவித்துக் கொண்டு பல மணி நேர விவாதங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளாராக அறிவித்தார். அதிமுக உடையாமல் இருப்பதற்காக விட்டுக் கொடுத்தேன் என்பது தன்னுடன் இருப்பவர்களிடம் ஓபிஎஸ் சொல்வது. இன்று அதிமுக உடையாமல் இருக்கிறது. ஆனால் அதில் ஓபிஎஸ் இல்லை.
மீண்டும் ஓபிஎஸ் பூஜய்த்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. அவருக்கு முன் சில வாய்ப்புகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக செய்து வந்தது போல் டெல்லி டாடிக்களிடம் சரணடைவது.
தான் சார்ந்த சமூகத்தினரின் ஆதரவை முழுமையாக பெறுவது. தனது நீக்கத்தை அவர்களுக்கு எதிரான சதி என்ற பிம்பத்தை கட்டமைப்பது.
மீண்டும் சசிகலாவுடன் இணைவது. சின்னம்மா தயவில் அரசியல் செய்வது.
அல்லது டெல்லியில் பேசி ஏதோ ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக பொறுப்பேற்று அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது.