No menu items!

ஒரு வார்த்தை – இந்திதான் தீர்வா?

ஒரு வார்த்தை – இந்திதான் தீர்வா?

மீண்டும் இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது திமுக. சமூக ஊடகங்களில் ‘இந்தி தெரியாது போடா’ வாசகங்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இந்த முறை எதிர்ப்புக்கு காரணம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை. இந்த அறிக்கையில் இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் பல பரிந்துரைகள் இருக்கின்றன.

• இந்தியா முழுவதும் பாடத் திட்டங்கள் இந்தியிலோ மாநில மொழிகளிலோ இருக்க வேண்டும். விரும்பினால் மட்டும் ஆங்கிலத்தை வைத்துக்கொள்ளலாம்.

• மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் ஆங்கிலம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டும்.

• மத்திய அமைச்சகத்தின் துறைகளில் இந்தியிலோ அல்லது உள்ளூர் மொழியிலோதான் பேச வேண்டும், எழுத வேண்டும், அச்சிட வேண்டும்.

• மத்திய அரசின் விழாக்கள் இந்தியிலோ அல்லது மாநில மொழியிலோ நடக்க வேண்டும்.

• இந்தி பேசும் மாநிலங்களில் அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும்

இப்படி இந்திக்கு முதலிடம் கொடுத்தும் ஆங்கிலத்தை அறவே நீக்கியும் பரிந்துரைகள் இருக்கின்றன. முழு அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்தப் பரிந்திரைகளில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே… ஆங்கிலத்தைதானே அப்புறப்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் எழலாம்.

இன்று ஆங்கிலம்தான் இந்தியா முழுவதிலும் இணைப்பு மொழியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இணைப்பு மொழியான ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பிடித்துக் கொள்ளும். சில வருடங்களில் இந்தி, இந்தியா முழுமைக்குமான ஒரே மொழியாக மாறும். இதுதான் இந்தப் பரிந்துரைகளின் நோக்கம்.

ஒரே நாடு ஒரே கலாச்சாரம், ஒரே நாடு ஒரே சந்தை, ஒரே நாடு ஒரே மதம், ஒரே நாடு ஒரே வரி…இப்படி பாஜகவின் இலக்கு வரிசையில் ஒரே நாடு ஒரே மொழி என்பது மிக முக்கியமானது. இன்றுகூட பிரதமர் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்.

இந்த ஒரே நாடு என்ற கட்டமைப்பு இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டுக்கு பொருந்துமா எனதுதான் இந்த ஒரே திட்டத்தின் எதிர்ப்பாளர்களின் கேள்வி.

ஆங்கிலம் அந்நிய மொழி அதை ஏன் நாம் பயில வேண்டும் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. ஆங்கிலம் அந்நிய மொழிதான் ஆனால் உலக மொழி. இன்று உலகத்துக்கான பாஸ்போர்ட்டாக இருப்பது ஆங்கிலம்தான். இன்று உலகம் முழுக்க உள்ள ஐடி வேலை வாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு கிடைத்ததற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் கம்ப்யூட்டர் படிப்பு மட்டுமல்ல, அவர்களது அடிப்படை ஆங்கில அறிவும்.

இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்தினால், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறையும். ஆங்கிலம் கற்பவர்களின் எண்ணிக்கை குறையும். அடுத்த தலைமுறை ஆங்கிலம் தெரியாமலேயே வளரும். இந்த நிலை இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

மத்தியில் அலுவல் மொழியாக இந்தி மாற்றப்பட்டால் இந்தி பேசாத மாநிலங்களும் மத்திய அரசுடன் இந்தியில்தான் உரையாட வேண்டியிருக்கும். அதற்காக இந்தி கற்க வேண்டியிருக்கும். இது மறைமுக இந்தி திணிப்புதான்.

தமிழ்நாட்டில் இந்தி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் ஆர்வமாகதான் இருக்கிறார்கள் ஆனால் அரசுகள்தாம் இந்தியை எதிர்க்கின்றன என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தி கற்பதற்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. விருப்பப்பட்டவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளலாம் என்ற நிலைதான் இருக்கிறது. இந்தி தேவைப்படுபவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இந்தியை கற்றுக் கொண்டால்தான் வேலை, இந்தி தெரிந்தால்தான் மத்திய அரசை அணுக முடியும் என்பதெல்லாம் தீவிரமான இந்தி திணிப்பு.

இந்தி தெரிந்தால் பலன் அதிகம் என்கிற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் இன்று இந்தி நன்கறிந்த உபி, பீகார் போன்ற மாநிலங்களிலிருந்துதான் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடிப் போகிறார்கள். உத்தரப்பிரதேசத்திலிருந்து 15 சதவீத இளைஞர்களும் பீகாரிலிருந்து 12 சதவீத இளைஞர்களும் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் அங்கு வேலை தேடி போவது என்பது சொற்பம். இதுதான் இன்றைய யதார்த்தம். இந்தி சோறு போடாது என்பதற்கு உதாரணம்.

இந்தியாவில் 43 சதவீதத்தினர் இந்தி மொழி பேசுபவர்கள். 57 சதவீதத்தினர் வேறு மொழிகளைப் பேசுபவர்கள். இந்தியாவின் மையப் பகுதியில் முன்னேறாத மாநிலங்களில் அதிகம் பேசும் மொழியை இந்தியாவின் ஒரே மொழியாக மாற்றுவது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு பாதகமாகதான் முடியும்.

அரசியல் காரணங்களுக்காக இந்தியை தமிழ்நாடு எதிர்க்கிறது என்று பாஜக கூறுகிறது. ஆனால் இந்தி திணிப்பை தமிழ்நாடு மட்டும் எதிர்க்கவில்லை. கேரளா எதிர்க்கிறது. கர்நாடகா எதிர்க்கிறது. மகாராஷ்டிரா எதிர்க்கிறது. மேற்கு வங்கம் எதிர்க்கிறது. இந்தி தாய் மொழி இல்லாத அனைத்து மாநிலங்களும் எதிர்க்கின்றன.

இந்தியில் மருத்துவப் படிப்பை துவக்கி வைத்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அதற்கான பாடபுத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். மருத்துவர்கள் மருந்து குறிப்பு எழுதித் தரும்போது ஸ்ரீஹரி என்று மேலே எழுதிவிட்டே கீழே மருந்துகளின் பெயர்களை இந்தியில் எழுத வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

பொறியியல் கல்வியும் மருத்துவக் கல்வியும் தாய் மொழியிலோ அல்லது இந்தியிலோ படிக்க வேண்டும் என்பது மொழியார்வலர்களின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அதற்கான பாடப்புத்தங்கள் அந்த மொழியில் இருக்கின்றனவா? ஆராய்ச்சிக் கட்டுரைகள் இருக்கின்றனவா? மருத்துவம் மற்றும் பொறியியல் வார்த்தைகள் அந்தந்த மொழிகளில் இருக்கின்றனவா? இந்தியில் பயின்று மேற்கத்திய நாடுகளுடன் போட்டிப் போட முடியுமா? …இப்படி கேள்விகள் நிறைய இருக்கின்றன.

இந்தியை மொழியாக பாருங்கள். இந்தியை வைத்து அரசியல் செய்ய முயலாதீர்கள். இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு இந்தி ஆதரவாளர்கள் சொல்லும் வார்த்தைகள் இவை.

இதே வார்த்தைகளைதான் அவர்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தியை மொழியாக பாருங்கள். இந்தியை வைத்து அரசியல் செய்ய முயலாதீர்கள்.

இந்தி திணிப்புக்கு தொடர்ந்து முயன்றுக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு ஒரு வார்த்தை – வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...