மீண்டும் அணி மாறியிருக்கிறார் நிதிஷ் குமார். மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார். எட்டாவது முறையாக மீண்டும் முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார்.
நிதிஷ் குமாருக்கு கூட்டணி மாறுவது புதிதல்ல.
பொறியியல் பட்டப்படிப்பு முடித்து அரசு ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்த நிதிஷ் குமாருக்கு அரசியல் ஆசை கல்லூரி காலத்திலிருந்தே உண்டு. சோஷலிச கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த நிதிஷ் குமாருக்கு ஆரம்ப கால அரசியல் குரு ராம் மனோகர் லோகியா. 70-களின் துவக்கத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் பயணித்திருக்கிறார். கல்லூரி காலங்களில் இப்படி துவங்கிய அவரது அரசியல் பயணம் எஸ்.என்.சின்ஹா, வி.பி.சிங் என்று தொடர்ந்து ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸுடன் சமதா கட்சியில் தொடர்ந்தது. அனைத்தும் காங்கிரசுக்கு எதிர் நிலையிலிருந்த கட்சிகள்.
1977-ல் முதல் முறையாக பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். தோற்கிறார். 1980 தேர்தலில் போட்டியிடுகிறார், மீண்டும் தோற்கிறார். 1985 தேர்தலில் அவருக்கு முதல் வெற்றி கிடைக்கிறது. 1989-ல் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். வெல்கிறார். 1991, 96, 98, 99, 2004 என தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற நிதிஷ், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியிருக்கிறார்.
2000-ம் ஆண்டு பீகார் அரசியலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக முதல் முறையாக பீகார் முதல்வர் பொறுப்பு ஏற்கிறார். ஏழே நாட்களில் ராஜினாமா செய்கிறார். 2004 வரை மத்திய அமைச்சராக பொறுப்பைத் தொடர்கிறார்.
2000-ம் ஆண்டு 7 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், 2005 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று இரண்டாம் முறையாக முதல்வராகிறார். அன்று தொடங்கிய அவரது முதல்வர் வாழ்க்கை 2022 (இன்று) வரை தொடர்கிறது. இடையே சில மாதங்கள் கூட்டணிப் பிரச்சினைகளினால் முதல்வர் பதவியிலிருந்து விலகி இருந்த சம்பவங்களும் உண்டு. 2005, 2010, 2015, 2020 என தொடர்ந்து சட்டப் பேரவைத் தேர்தல்களில் வென்றிருக்கிறது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி. பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் கூட்டணிக் கணக்குகள் மூலம் முதல்வர் பொறுப்பிலேயே நீடிப்பார் நிதிஷ். உதாரணமாய் 2020 சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வென்றது 45 இடங்களில்தான். கூட்டணிக் கட்சியான பாஜக வென்றது 77 இடங்கள். ஆனாலும் நிதிஷ்குமார்தான் முதல்வரானார். இதுதான் நிதிஷ்குமாரின் அரசியல் மேஜிக்.
இப்போது பாஜக கூட்டணியைக் கழற்றிவிட்டு தேர்தலில் நேர் எதிராக மோதிய லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் பொறுப்பேற்கிறார். லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சட்டப் பேரவையில் 79 இடங்கள் வைத்திருக்கிறது. நிதிஷ்குமார் கட்சியைவிட 34 இடங்கள் கூடுதல் ஆனாலும் நிதிஷ்தான் முதல்வர். இரண்டாமிடம்தான் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு.
நிதிஷ் குமாரால் இதை சாதிக்க முடிவதற்கு காரணம் அவர் போடும் அரசியல் கணக்குகளும் கூட்டணி மாறுவதற்கு அவர் தயங்காததும்தான்.
2013 வரை பாஜகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த நிதிஷ், பிரதமர் வேட்பாளாராக மோடி அறிவிக்கப்பட்டதும் கூட்டணியிலிருந்து விலகினார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ் வென்றது இரண்டு இடங்கள்தான். தன்னுடைய செல்வாக்கு குறைவதை அறிந்த நிதிஷ் குமார் 2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் லாலு கட்சியுடனும் காங்கிரசுடனும் கூட்டு வைத்து பெரிய வெற்றி பெறுகிறார். அந்தத் தேர்தலில் நிதிஷ் கட்சி 73 இடங்களையும் லாலு கட்சி 80 இடங்களிலும் வென்றிருந்த போதிலும் நிதிஷ்தான் முதல்வர். லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வர்.
சில வருடங்களில் இந்தக் கூட்டணியில் குழப்பம் வர மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிறார். 2020 சட்டப் பேரவைத் தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்திக்கிறார். சொந்தக் கட்சி குறைவான இடங்களில் வென்றபோதும் பாஜகவின் உதவியுடன் முதல்வராகிறார்.
இப்போது மீண்டும் சிக்கல். இந்த முறை மீண்டும் கூட்டணி மாறி எதிர் துருவத்திலிருந்தவர்களுடன் கை கோர்த்திருக்கிறார்.
இப்போது பாஜகவுடன் நிதிஷுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு சில காரணங்கள் இருக்கின்றன.
பீகார் அரசியல் மகாராஷ்டிரா அரசியல் போல் மாறிவிடுமோ என்ற நிதிஷ் குமாரின் அச்சம். தான் கூட்டணி வைக்கும் கட்சிகளை ஏமாற்றி ஏப்பம் விடும் கட்சி பாஜக என்பது நிதிஷ் குமாருக்குத் தெரியும். அந்த அரசியல் வரலாறு பீகாரில் எழுதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உஷாராக தேஜஸ்வி யாதவுடன் இணைந்திருக்கிறார். அதை புத்திசாலித்தனமாக செய்திருக்கிறார்.
அமைச்சரவையிலிருந்து பாஜக அமைச்சர்களை நீக்கி அமைச்சரவையை மாற்றியமைப்பதன் மூலம் பாஜக கூட்டணியை முறித்திருக்கலாம். ஆனால் பாஜக அமைச்சர்களை நீக்குவது என்பது பாஜகவுக்கு அனுதாபத்தை தரும், தேர்தல் நேரத்தில் பாஜகவினர் அனுதாபம் தேடுவார்கள் என்று நிதிஷ் கருதினரோ என்னவோ முதல்வர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்து ஆட்சியிலிலிருந்து விலகினார். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஆளுநரை சந்தித்து தனக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று ஆதரவு கடிதங்களைத் தந்து ஆட்சிப் பொறுப்பு கோரினார். நிதிஷ் குமாரின் இந்த சதுரங்க காய் நகர்த்தலை பாஜக எதிர்பார்க்கவில்லை. இதுதான் நிதிஷ் குமார். இத்தனை வருட அரசியல் அனுபவம் இது போன்ற முடிவுகளை எடுக்க அவருக்கு உதவுகிறது.
2017-ல் ஊழல்வாதிகள் என்று லாலு குடும்பத்தை விமர்சித்து அவர்களை கூட்டணியில் கழற்றிவிட்ட நிதிஷ், இன்று அதே குடும்பத்துடன் கூட்டணி வைத்திருப்பது அரசியல் சாதுர்யமா அல்லது சந்தர்ப்பவாதமா என்பதை வரும் தேர்தல்கள் முடிவு செய்யும். பீகாரில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி 39 இடங்களில் வென்றது.
2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. பாஜகவுக்கும் முக்கியமான தேர்தல். எதிர்க் கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தல். மத்தியில் ஆட்சியை முடிவு செய்யும் முக்கிய வட மாநிலங்களில் பீகாரும் ஒன்று. நிதிஷ் குமாரின் பிரிவு பாஜகவுக்கு இழப்பு என்றே பார்க்கப்படுகிறது. பீகாரில் சாதிய அடிப்படையில் கணக்குகள் போடப்பட்டுதான் தேர்தல் நடக்கும். நிதிஷ் குமாருக்கு தலித் மக்கள் மற்றும் மிகவும் பின் தங்கிய சமூகத்தினரின் வாக்குகள் உண்டு. லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கும், காங்கிரசுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் அதிகம். இவர்கள் இணைவது பாஜகவுக்கு பலவீனம் என்று கணக்கிடப்படுகிறது.
எதிர்க் கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளாராக நிதிஷ் குமார் நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் அதை மறுத்திருக்கிறார் நிதிஷ். “நான் பிரதமர் வேட்பாளர் இல்லை. இப்போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி 2014-ல் வந்தவர் 2024-ல் ஜெயிப்பாரா? என்பதுதான்’ என்று செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் நிதிஷ்.
உண்மைதான். 2024-ல் பாஜக ஜெயிப்பதற்கும் மோடி பிரதமர் ஆவதற்கும் நிதிஷ் குமார் கூட்டணி உதவியிருக்கும் ஆனால் இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. பீகாரில் பாஜக தனித்து விடப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து ஆட்சியைப் பிடித்தது பாஜகவுக்கு அதி சாதுர்யமான கட்சி என்ற பிம்பத்தை தந்தது. ஆனால் அந்த பிம்பத்தை பீகார் உடைத்திருக்கிறது. பாஜகவை வியூகங்கள் மூலமாகவும் வீழ்த்த முடியும் என்பதை நிதிஷ் குமார் நிருபித்திருக்கிறார். இது எதிர்க் கட்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும்.
நிதிஷ் குமார் பாஜகவின் எதிரணிக்கு வருவது மமதாவுக்கு பின்னடைவாக இருக்கும். பிரதமர் வேட்பாளாராக முன்னிறுத்தப்படலாம் என்ற மமதா பானர்ஜிக்கு, நிதிஷ் குமார் வடிவில் ஒரு போட்டி உருவாகியிருக்கிறது.
மமதா பானர்ஜியுடன் இணைவதற்கு காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் தயக்கங்கள் உண்டு, வெறுப்புகள் உண்டு ஆனால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதில் இந்தக் கட்சிகளுக்கு தயக்கங்கள் இருக்காது.
பாரதிய ஜனதாவின் நீண்ட கால அரசியல் வியூகம் டினா ஃபாக்டர் (There is no alternative – TINA)), அதாவது மாற்று இல்லை என்பதைக் காட்டுவது. எதிரணியில் மோடிக்கு மாற்றாக யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு எதிர்க் கட்சிகளால் இதுவரை ஒருங்கிணைந்து ஒருவரை அடையாளம் காட்ட முடியாமல் இருப்பதுதான் பாஜகவின் வெற்றி வியூகம். போட்டியாளராக யாரையும் பாஜக வளரவிடுவதில்லை. நாடு முழுவதும் அறிந்த காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியை பப்பு என்ற பிம்பத்துக்கு அடைத்து அவரை முடக்கி வைத்திருக்கிறது. மமதா பானர்ஜி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு, விசாரணைகள், கைதுகள் என பயமுறுத்தி வைத்திருக்கிறது. இந்த இருவரைத் தாண்டி மாற்று முகமாக எதிரணியில் யாரும் இல்லாமலிருப்பதுதான் பாஜகவின் பலம். அந்த பலத்தை நிதிஷ் குமார் உடைப்பாரா?