தமிழ்நாட்டு பாஜகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து துணை பொறுப்பாளராக இருந்த திலீப் கண்ணனும் விலகியிருக்கிறார்.
திருச்சி சூர்யா, காயத்ரி ரகுராம் வரிசையில் இப்போது சிடிஆர் நிர்மல் குமார் கடந்த சில மாதங்களில் மூன்று பெரிய வெளியேற்றங்கள்.
காயத்ரி ரகுராம்க்கும் நிர்மல் குமாருக்கும் ஒரு ஒற்றுமையும் ஒரு வேற்றுமையும் உண்டு. ஒற்றுமை, இருவருமே பாஜக தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். வேற்றுமை, காயத்ரி எந்தக் கட்சியிலும் இணையவில்லை. ஆனால் நிர்மல் குமார் உடனடியாக எடப்பாடி அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து வெளியேறிய பிறகும் இன்று அண்ணாமலைக்கு ஆதரவாக குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்.
கடந்த நவம்பர் மாதம் பாஜகவின் திருச்சி சூர்யா – டெய்சி பேசிய ஆபாச ஆடியோ வெளியானதிலிருந்தே பாஜகவின் உட்கட்சி மோதல்கள் வெளியில் தெரிய ஆரம்பித்தன.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார் காயத்ரி ரகுராம். தமிழ்நாட்டு பாஜகவின் வார் ரூம் பெண்களை குறி வைத்து தாக்குகிறது என்று புகார் எழுப்பினார்.
அடுத்து பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் தமிழ்நாட்டு பாஜகவுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டார்.
அண்ணாமலையுடன் எப்போதுமே இருக்கும் அமர் பிரசாத் ரெட்டியின் கடந்த கால லீலைகளை பவர் பாயிண்டில் விவரித்தார்.
இந்த சூழலில் இப்போது ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் வெளியில் வந்திருக்கிறார். அவர் அண்ணாமலை மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. ஃபோர் ட்வெண்டி என்று திருடர்களை, ஏமாற்றுக்காரர்களைக் குறிப்பிடும் 420யை அண்ணாமலையுடன் பொருத்துகிறார். 420மலை என்கிறார். விலகல் கடித்தத்தில் பல குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்.
‘`கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து, இன்று நான் பா.ஜ.க-வின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், உண்மையாக, நேர்மையாக, கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்தவரை பணியாற்றினேன். இன்று விடைபெறுகிறேன். என்மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவுக்கான காரணத்தைத் தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க தலைமை தொண்டர்களையும், கட்சியையும், செருப்பாகப் பயன்படுத்தி, கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அல்பத்தனம், எதுவும் இல்லை.
அதையும் தாண்டி, தன்னை நம்பியிருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி, இடத்துக்கு ஏற்ப நடித்து ஏமாற்றிவரும் தலைமையைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் வேதனையடைந்ததுதான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது, தான்தோன்றித்தனம். இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரைப்போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கிச் செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.
2019-ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20 சதவிகிதம்கூட இல்லை. அதைப் பற்றித் துளியும் கவலை இல்லாமல், மாய உலகத்தில் சுற்றிவரும் ஒரு நபரால் கள யதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த முயன்று என்னைப் போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஓர் அமைச்சருடன் கடுமையான சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்த அமைச்சரை வெளியில் வீரவேசமாகப் பேசிவிட்டு, திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்…
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவுக்கு, ஒரு 420 மலையாக இருக்கும் நபரால் தமிழக பா.ஜ.க-வுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே மிகப்பெரிய கேடு. தன்னை நம்பியிருக்கும் தொண்டர்களையும், கட்சியையும் ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை எப்படி நம்பி பயணிக்க முடியும்?”
கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி……இடத்துக்கு ஏற்ப நடித்து…..தொண்டர்களை மதிக்காது, தான்தோன்றித்தனம்……மனநலம் குன்றிய மனிதரைப்போல் செயல்படும்……மாய உலகத்தில் சுற்றிவரும்…. சொந்தக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அல்பத்தனம் ….என்றெல்லாம் மிகக் கடுமையான சொற்களால் விமர்சித்து விட்டு அடுத்துச் சொல்லும் விஷயம் அதிர்ச்சி தர வைப்பது.
‘நான் ஓர் அமைச்சருடன் கடுமையான சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்த அமைச்சரை வெளியில் வீரவேசமாகப் பேசிவிட்டு, திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்…’ என்று கேட்கிறார் நிர்மல் குமார்.
நிர்மல் குமார் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த வழக்கு நடந்து வருகிறது. அதைதான் நிர்மல் குமார் குறிப்பிடுகிறார்.
ஒரு கட்சியைவிட்டு வெளியேறும்போது அந்தக் கட்சியைப் பற்றி குற்றச்சாட்டுக்களை வைப்பது அரசியலில் சர்வ சாதரணம்தான். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியானவை.
அதிர்ச்சியைத் தாண்டி இந்த விலகலில் ஒரு அரசியல் ட்விஸ்ட் இருக்கிறது.
அண்ணாமலை மீது இத்தனை குற்றச்சாட்டுக்களை வைத்த நிர்மல்குமார் சேர்ந்திருப்பது பாஜகவின் கூட்டணிக் கட்சியான எடப்பாடி அதிமுகவில்.
அடுத்து வரும் காலங்களில் அதிமுக எந்த மாதிரியான அரசியல் பாதையில் செல்லப் போகிறது என்பதை அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த நிர்மல்குமாரை பூங்கொத்து வாங்கி கட்சியில் சேர்த்திருப்பதன் மூலம் புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலேயே அதிமுகவுக்கும் பாஜகவுக்கு இடைவெளி விழத் தொடங்கியது. அண்ணாமலை அங்கு ஒரு சில மணி நேரங்களே பரப்புரை செய்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முன்பே கூறினோம் என்று போஸ்ட்மார்டம் செய்தார்.
இடைத் தேர்தல் சிக்கல் மட்டுமில்லாமல் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவரை பாஜகவில் சேர்த்துக் கொண்டதில் அதிமுகவினருக்கு அதிருப்தி உண்டு.
இதற்கு முன்பு பாஜகவிலிருந்த டாக்டர் சரவணன், அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
ஒரே கூட்டணி என்று கூறிக் கொண்டாலும் இப்படி கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் தொடர்ந்திருந்தது. அதன் உச்சமாகதான் நிர்மல்குமார் இணைந்ததையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான அமர் பிரசாத் ரெட்டி நேற்றிலிருந்து அதிமுகவை மறைமுகமாக தாக்கி ட்விட்டரில் பதிந்து வருகிறார்.
‘கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை என்றவர்கள் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கிறார்கள். பாஜகதான் தமிழ்நாட்டில் ஒரே எதிர்காலம்.’
’ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா?’
இவையெல்லாம் அமர்பிரசாத் ரெட்டியின் பதிவுகள். அண்ணாமலையின் அனுமதி இன்றி வெளிவர முடியாத பதிவுகள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உடைந்துக் கொண்டிருக்கிறது என்பதையே நிர்மல்குமாரின் அதிமுக வரவு காட்டுகிறது.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற சூழலில் அதிமுக அதிருப்தியில் இருப்பதை டெல்லி பாஜக பார்த்துக் கொண்டிருக்குமா? அண்ணாமலையின் அதிகாரப்போக்கு தொடர அனுமதி அளிக்குமா?
அண்ணாமலை முக்கியமா? அதிமுக முக்கியமா?