No menu items!

நியூஸ் அப்டேட் : சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்

நியூஸ் அப்டேட் : சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்

சசிகலாவை அதிமுக கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக் குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஸ்ரீதேவி, சசிகலா மனுவை நிராகரிக்கக்கோரி அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனுக்களை ஏற்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வை எதிர்த்து சட்டப் பேரவையில் தீர்மானம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ள நுழைவுத் தேர்வை கைவிடக்கோரி தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, “பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது. எனவே, மாநில அரசுகளின் உரிமையினை நிலை நாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்த இருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட மத்திய அரசினை வலியுறுத்துகிறோம்” என்று ஸ்டாலின் கூறினார்.

எதிர்காலத்தில் தளபதியா தலைவனா – விஜய் பரபரப்பு பேட்டி

நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில், தனியார் டிவிக்கு விஜய் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியை ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ள நெல்சன் தொகுத்து வழங்கி உள்ளார். அதில், “அப்பா ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரத்தோட வேர் மாதிரி. அப்பாக்கும் கடவுளுக்கும் ஒரு வித்தியாசம் தான். கடவுளை நாம் பார்க்க முடியாது, அப்பாவை பார்க்க முடியும் அது தான் வித்தியாசம்” என்று விஜய் கூறியுள்ளார். அண்மைக்காலமாக தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் விஜய் பேசுவதில்லை என தகவல் வெளியான நிலையில், தந்தை குறித்து விஜய் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், “நான் விரும்புறது வெறும் 100 ரூபாய் பிரியாணி தான்” என்றும் விஜய் கூறியுள்ளார்.

“தளபதியிலிருந்து தலைவரா மாறனும்னு விருப்பம் இருக்கா?” என்ற கேள்விக்கு, “ நான் இளைய தளபதியாக இருந்து தளபதி ஆனதை ரசிகர்கள் தான் முடிவு செய்தார்கள். அதேபோல் தான் நான் தலைவன் ஆக வேண்டுமா என்பதையும் அவர்களே முடிவு செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையும் வரணும். ஆனால் எனக்கு விஜய்யாக இருப்பது தான் பிடிக்கும்” என்று பதிலளித்துள்ளார்.

உ.பியில் மாணவர்களுக்கு கொரோனா: மீண்டும் ஆன்லைன் வகுப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத், வைஷாலியில் உள்ள கே.ஆர். மங்கலம் வேர்ல்ட் தனியார் பள்ளியில் பயிலும் 3-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று முதல் புதன்கிழமை வரையிலான 3 நாட்களுக்கு அந்த பள்ளியில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. எனினும் வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைன் முறையில் நடைபெறும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் தான் காசியாபாத்திலுள்ள இன்னொரு பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...