நயன்தாராவுக்கும் அஜீத்துக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு.
படம் நடிப்பதோடு என் வேலை முடிந்துவிடும். எனக்கு கதை பிடித்ததால் அந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் அது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மக்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்பது எனக்கு தெரியாது. அதனால் அவர்களிடம் எனக்கு பிடித்ததை ரசிகர்களிடம் திணிக்க முடியாது. அதனால் பட ப்ரமோஷன்களில் நான் கலந்து கொள்வது இல்லை. ரசிகர்களாக படம் பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளட்டும் என்று அஜீத் சொல்வது வழக்கம்.
நயன்தாராவும் இதே கொள்கையை கையில் எடுத்திருக்கிறார். அவர் நடித்த திரைப்படம் ரீலிசாகும் போது படத்தின் தயாரிப்பாளர்களும் இயக்குநரும் வேண்டுகோள் விடுத்தாலும், விளம்பரக் கூட்டங்களுக்கும் ஊடகங்கள் சந்திப்புக்கும் வராமல் எஸ்கேப் ஆகிவிடுவார் நயன்தாரா.
இது தமிழ்த் திரையுலகில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதனால் இதுவரை பிரச்சினையில்லை. அவர் அப்படிதான் என்று விட்டுவிடுவார்கள்.
ஆனால் இப்போது பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.
கணவர் விக்னேஷ் சிவனும் அவரும் இணைந்து – தங்களுடைய தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ‘கனெக்ட்’ படத்தின் ப்ரமோஷனுக்காக குடும்ப சகிதமாக வந்திருந்தார் நயன்தாரா.
ஊடகங்களையும் ரசிகர்களையும் கொஞ்சம் கூட மதிக்காத நயன் தனது சொந்தப் படத்துக்காக மட்டும் வெளி வந்தார். போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார். பொறுமையாக சிரித்தார்.
இந்த சம்பவம் தயாரிப்பாளர்களை கடுப்பேற்றியிருக்கிறது. உங்கள் படத்துக்கு ஒரு நியாயம் அடுத்தவர் படமென்றால் வேறு நியாயமா என்று கேட்கிறார்கள்.
கேட்ட சம்பளம் கொடுக்கிறோம். பாதுகாப்புக்காக பவுன்சர்களையும் வைக்கிறோம். ஸ்டார் ஹோட்டல்களில் ரூம், தனி கேரவேன் வசதிகளையும் செய்கிறோம். உதவியாளர்களுக்கு பணம் கொடுக்கிறோம். இப்படி சம்பளம் போக ஏராளமான செலவுகளை செய்கிறோம். ஆனால் படத்தின் ப்ரமோஷன் என்றால் மட்டும் எஸ்கேப் ஆகிவிடுகிறார். இது அவரது இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது. இப்போது சொந்தப் படத்தின் விளம்பரத்துக்கு மட்டும் போகிறார் என்று புலம்புகிறார்கள் தயாரிப்பாளர்கள்.