நயன்தாரா…
பரபரப்பான கிசுகிசுக்களாலும் சூடான செய்திகளாலும் நேற்றுவரை மீடியாவின் டார்லிங்.
அருமையான நடிப்பாற்றலாலும் கதையைத் தேர்ந்தெடுக்கும் திறமையாலும் இன்று தமிழ் ரசிகர்களின் டார்லிங்.
தற்போது தமிழ் சினிமா நட்சத்திரங்களில், வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் நயன்தாராவை பிடிக்கிறது. ’உங்களுடைய ஃபேவரிட் ஹீரோயின் யார்?’ என்ற கேள்விக்கு பெரும்பாலான ஆண்களின் பதில் ‘நயன்தாரா’ என்பதாகத்தான் இருக்கிறது. பெண்களும் ’பொறாமையை’ ஓரங்கட்டி வைத்துவிட்டு, நயன்தாராவைப் பிடிக்கும் என்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், இன்றைய பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் மற்றும் மார்க்கெட் நிலவரப்படி, தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார் நயன்தாரா.
இதெல்லாம் நயன்தாராவிற்கு எப்படி சாத்தியமாகி இருக்கிறது? மனரீதியாக தன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சவால்களை அவரால் எப்படி சமாளிக்க முடிந்திருக்கிறது? நயன்தாராவின் வெற்றிக்கு காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில் என்னவென்பதை நாம் பார்க்கலாம்.
2005-ல் ’ஐயா’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ‘கேரளத்து வல்லியப் பெண்’ டயானா மரியம் குரியன் எனும் நயன்தாரா. இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக ‘சந்திரமுகி’ படத்தில் கைக்கோர்த்தார். சூப்பர் ஸ்டார் ஜோடி என்றாலே அடுத்தடுத்து படங்கள் வரிசைக் கட்டி நிற்கும் என்பது ஒரு சொல்லப்படாத மேஜிக். அதுபோலவே ‘கஜினி’, ‘கள்வனின் காதலி’, ‘வல்லவன்’ ‘தலைமகன்’, ‘ஈ’, ‘பில்லா’, ‘யாரடி நீ மோகினி’, ’குசேலன்’, ‘ஏகன்’, ‘வில்லு’, ‘ஆதவன்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ என அடுத்தடுத்து படங்கள் வந்தன.
இதற்கிடையில்,
சிம்புவுடன் முதல் காதல், பிரபுதேவாவுடன் மீண்டுமொரு காதல், சிம்புவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து பரப்பு போஸ்டர், பிரபுதேவா பெயரை பச்சைக் குத்தி… இப்படி தொடர்ந்து மீடியாக்களுக்கு தீனி கொடுத்த நயன்தாராவுக்கு அந்த காலக்கட்டத்தில் அவர் நடித்த படங்கள் அவரது நடிப்புத் திறமைக்கு தீனிப் போடவில்லை.
ஒரு கமர்ஷியல் ஹீரோயினாக மட்டுமே அந்த சமயத்தில் வலம்வர முடிந்தது. அவரது சினிமா கேரியர் க்ராஃப் மற்ற நடிகைகளைப் போலவே ஏற்ற இறக்கத்தோடுதான் இருந்தது.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அஜித்தின் அடுத்த நாயகிக்கான தேடல் நடந்துக் கொண்டிருந்தது. படக் குழுவினர் நயன்தாராவை தேர்ந்தெடுத்தார்கள். மீண்டும் அஜீத்துடன் கைக்கோர்த்தார். ‘ஆரம்பம்’ படம் நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ்ஸிற்கான ‘ஆரம்பமாக’ அமைந்தது.
‘ஆரம்பம்’ வெளிவந்து ஓடிக்கொண்டிருந்த போது, சிவகார்த்திகேயன் நடிக்க அட்லீ இயக்க, ஒரு திரைப்படத்துக்கான திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு நடிகையையும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் சிவகார்த்திகேயன் அப்படத்தில் நடிக்க முடியாமல் போக, அந்த ப்ராஜெட்டில் ஒப்பந்தமானார் ஆர்யா. ஹீரோ மாறியதும் ஹீரோயினாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம், த்ரிஷாவா இல்லை நயன்தாராவா என்ற ’கலர்ஃபுல்லான’ கேள்விக்கு, ‘நயன்தாரா’ என ஒட்டுமொத்தமான பதில் கிடைத்தது.
அப்படத்தின் விளம்பரங்களுக்காக, தமிழ்நாடே அதிரும்படியான ப்ரமோஷனை பண்ணவேண்டுமென, படக் குழுவினர் யோசித்தப் போது உதித்த ஐடியாதான், ‘ஆர்யா – நயன்தாரா திருமணம்’ என்ற அதகளமான போஸ்டர். வில்லங்கதனமான ஐடியா என்றால் முன்னணி ஹீரோக்களே ஓடி ஒளியும் போது, தைரியமாக ‘ஓகே’ சொன்னவர் நயன்தாரா.
அந்தப் படம்தான் ’ராஜா ராணி’. இப்படத்தில் இடம்பெற்ற நயன்தாராவின் ’டயானா’ கதாபாத்திரம் அவரை ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான ஒருவராக முன்னிறுத்தியது.
ஒரு படம் வெற்றிப் பெற்றால்தான் அந்த படத்துடன் தொடர்புடையவர் அனைவருக்கும் வருமானம், எதிர்காலம் என்பதை நயன்தாரா புரிந்திருந்ததால்தான் ஆர்யாவுடன் திருமணம் என்ற ஏடாகூடமான பப்ளிசிட்டி யோசனைக்கு அவர் ஒகே சொன்னார். அந்த அளவு அவர் திரைத் துறையை புரிந்து வைத்திருக்கிறார்.
அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களுக்கு ஒகே சொல்ல ஆரம்பித்தார். அதன் துவக்கமாக ‘நீ எங்கே என் அன்பே’ திரைப்படத்தை கூறலாம்.
ஹிந்தியில் வித்யா பாலன் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற ‘கஹானி’ படத்தின் தமிழ் பதிப்பு ‘நீ எங்கே என் அன்பே’. இப்படத்தில் பெரிய ஹீரோ யாரும் தனக்கு ஜோடியாக, இல்லாவிட்டாலும் தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டது நயன்தாரா எடுத்த தைரியமான முடிவு. காரணம் ‘நீ எங்கே என் அன்பே’ படத்தின் விளம்பர போஸ்டர்களில் இடம்பெற்ற இயக்குநர், தயாரிப்பாளர், டெக்னீஷியன் என பலருடைய பெயர் தமிழ்நாட்டில் அறிமுகமில்லாத பெயர்கள். நயன்தாரா மட்டுமே அப்படத்தின் ஹைலைட்டாக இருந்தார். போதுதான், இந்தப் படம் அவரது அடுத்த உயர்வுக்கு ஆரம்பமாய் இருந்தது.
அடுத்து,
நயன்தாராவை தமிழ்சினிமாவில் ’தனி ஒருத்தி’ ஆக, பாக்ஸ் ஆபீஸ்ஸில் நிமிர்ந்து நிற்க வைத்தது த்ரில்லர் படமான ‘மாயா’. இதன் வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடிதான்’ படம். இவரது நடிப்பிற்கு திரையரங்குகளில் அப்ளாஸ் அள்ளியது. ’மாயா’ கொடுத்த உற்சாகம் அவரை ‘Solo Heroine’ ஆக களத்தில் இறங்க உற்சாகப்படுத்தியது. அதன் அடுத்தக்கட்டமே ‘டோரா’.
‘திருநாள்’, ‘காஷ்மோரா’, ‘இருமுகன்’ ஆகியப் படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் நயன்தாரா மார்க்கெட் அப்படியேதான் இருந்தது. வாய்ப்புகள் வந்துகொண்டேதான் இருந்தது. அடுத்தடுத்து வந்த ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘பிகில்’, ‘விஸ்வாசம்’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ ஆகியப் படங்களில் நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரங்களில், கவர்ச்சியை நம்பாமல் தன்னை நம்பியே நடித்தார்.
வாழ்க்கையைப் பொறுத்தவரை நயன்தாராவிற்கு ஏற்ற இறக்கங்கள் நிரம்பியதாகத்தான் இதுவரையில் அமைந்திருக்கிறது. ‘ஐயா’ படத்திலும் சந்திரமுகியிலும் அப்பாவித்தனமாக தோன்றும் தோற்றம் மாற்றம் கண்டது ‘வல்லவன்’ படத்தில்தான். அப்போதுதான் அவரது காதல் அத்தியாயமும் தொடங்கியது. அவர் சிம்புவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களும் வெளிவந்து வைரல் ஆகின. ஆனால், சிலருக்கு முதல் முயற்சி என்பது தொடக்கமாக மட்டுமே இருக்கும். அது இரண்டாவது முயற்சியில் தொடரும். அப்படிதான் நயன்தாராவின் காதலும். சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு ஆறுதலாக இருந்தவர் பிரபுதேவா. இவர்கள் இருவரும் அந்நியோன்யமாக இருந்ததுதான் அப்போதைய ஹாட் டாபிக். சவுதியில் பிரபுதேவாவிற்காக ஒரு நடனப் பள்ளி ஆரம்பிக்க நயன்தாரா பெரும் உதவியாக இருந்தார். காதலையும் காதலரையும் கெளரவிக்கும் வகையில் தனது கையில் ’Prabhu’ என்று ஆங்கிலத்தில் டாட்டூ குத்திக்கொண்டார்.
பச்சைக் குத்திய காதல், யார் கண்களை உறுத்தியதோ தெரியவில்லை. மீண்டும் காதலில் சறுக்கல். ஆனாலும் மனம் தளரவில்லை. ’Prabhu’ என்று டாட்டூ குத்தியதை ‘Positivity’ என மாற்றியதிலிருந்தே நயன்தாராவுக்கு வாழ்க்கை, காதல் மீது இருந்த பாஸிட்டிவ் எண்ணத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.
அசாதாரணமான சூழலிலும் கூட சாதாரணமாக அதை கையாளும் மனப்பக்குவமும் அமைதியான குணமும் அவரை சினிமா துறையில் நிலைநிறுத்த உதவியது. இந்த காதல் சர்ச்சைகளே அவரை தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஹாட் லேடியாக முன்னிறுத்தின. அதை அவர் சரியாக பயன்படுத்தி கொண்டார். காதல் கிசுகிசுக்களை பாஸிட்டிவ்வாக மாற்றிக் கொண்டதால், அவருக்கான மவுசும் சினிமா இண்டஸ்ட்ரியில் குறையவில்லை.
நயன்தாராவுக்கு அன்பு வந்தால் அதிகம் வரும். கோபம் வந்தாலும் அதுவும் உச்சத்தைத் தொடும். அதனால்தான் அவரை நெருங்குவது அவ்வளவு எளிதாக இருந்தது இல்லை. பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கும் போது, இதை நன்றாக உணர்ந்திருந்தார்கள். தன்னிடம் வேலைப் பார்க்கும் மேக் அப் மேன், டச் அப் பாய், ஹேர் ஸ்டைலிஸ்ட், அசிஸ்டண்ட் என அனைவருக்கும் தேவையானவற்றை வாங்கி கொடுப்பார். அவர் வாங்கிக் கொடுக்கும் பட்டியலில் பைக், ஃப்ளாட்களும் அடங்கும். இப்படி அன்பு ஒரு பக்கம். ஏதாவது ஒன்றில் பிடிக்காமல் போய்விட்டால், அதன் பிறகு நயன்தாரா அவர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்டவராகவே இருப்பார். இதுவே இன்று வரை தொடர்கிறது.
நயன்தாரா வாழ்க்கையின் திரைக்கதையை மாற்றியமைத்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். பாடல் எழுதியவருக்கு பரிசாக கிடைத்தது நயன்தாராவின் இதயம். ஊரே கொண்டாடும் ஒரு அழகிய நட்சத்திரம், தன் கைகளில் இருந்தால் அதன் பிரகாசம் தன்னையும் ஜொலிக்க செய்யும் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டார்.
அந்த காதலின் வெளிப்பாடே ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நான் பிழை நீ மழலை’ என்ற பாடலின் வரிகள். இப்பாடலை நயன்தாராவுக்கென்றே விக்னேஷ் சிவன் பிரத்யேகமாக எழுதியிருப்பது அவர்களை தெரிந்தவர்களுக்கு புரியும். இந்த காதல் திருமணத்திற்கு பின்பும் தொடர்வது குறித்து ஜூன் 9, 2022 -க்கு பிறகு தெரியும்.
இப்படி வாழ்க்கையில் அதிக காயங்களை கண்டிருந்தாலும் நயன்தாராவின் சினிமா கேரியர் க்ராஃப் மளமளவென உயரத்திற்குப் போக, அவருக்கு 5 முதல் 7 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகி இவ்வளவு சம்பளம் வாங்குவதும் இதுவே முதல்முறை என முணுமுணுக்கிறது கோடம்பாக்கம்.
முன்பெல்லாம் முன்னணி கமர்ஷியல் ஹீரோக்கள் ஓகே பண்ணி வைத்திருக்கும் ப்ராஜெக்ட் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று இயக்குநர்கள் கேட்பதுதான் வழக்கமாக இருந்தது. இன்று அதையும் உடைத்திருக்கிறார் நயன்தாரா. இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ‘நயன்தாரா ஓகே பண்ணிய கதைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்க ஆரம்பித்திருப்பது அவருடைய ’சூப்பர் ஹீரோயின்’ அந்தஸ்தை காட்டுகிறது.
சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே வரும் படங்களை ஒப்புக் கொண்டுவிட்டால், கல்லா கட்டிவிடலாம் என்று நினைப்பது பொதுவான சினிமா லாஜிக். ஆனால், அதிலும் மாறுப்பட்டு நிற்கவே நயன்தாரா முயற்சிக்கிறார். தன்னைத்தேடி வருகிற படங்கள் அனைத்தையும் அவர் ஒப்புக்கொள்வது இல்லை.
கதைகள் அதிகம் கேட்கிறார். தனக்கு செட்டாகும் கதை என்றால், அதில் அதிக அக்கறைக் காட்டுகிறார். அந்த ப்ராஜெட்டை எப்படியாவது வெற்றிகரமானதாக கொடுக்கவேண்டும் என்பதற்காக ’க்ரியேட்டிவிட்டி’ தொடர்பான விஷயங்களிலும் முழுமையாக தன்னை ஈடுப்படுத்தி கொள்கிறார். கமர்ஷியல் ஹீரோக்கள் தங்களது படங்களுக்குக் காட்டும் ஈடுப்பாட்டை தற்போது நயன்தாரா தனது படங்களுக்கு காட்டுகிறார்.
இதெல்லாம் ஓகே.. ஆனால், தன்னை மையப்படுத்தி வரும் கிசுகிசுக்கள், சர்ச்சைகள் அதன் மூலம் உளவியல்ரீதியாக உண்டாகும் மன அழுத்தம், பிரச்னைகளை எல்லாம் எப்படி தாண்டி அவரால் 17 ஆண்டுகாலம் சினிமாவில் வெற்றிகரமாக தாக்குப்பிடிக்க முடிந்திருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கான பதில் இதோ..
நயன்தாரா எந்த பிரச்னைகளையும் சர்ச்சைகளையும் கண்டுக்கொள்வதே இல்லை. எதைப் பற்றியும் கவலைப்படுவதும் இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதுதான் அவரது கேரக்டர். அதேபோல், எந்த கிசுகிசுக்களையோ செய்திகளையோ அவர் பத்திரிகைகளில் படிப்பதும் இல்லை. அதுபோன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் இல்லை.
கோடிகளில் சம்பளம், தனக்கு பிடித்த கதையைத் தேர்ந்தெடுக்க கிடைத்திருக்கும் அங்கீகாரம், கால்ஷீட் கிடைக்குமா என காத்திருக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் என நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக விஸ்வரூபம் எடுத்து நிமிர்ந்து நிற்கிறார்.