தமிழ் சினிமா இப்படியொரு விவகாரமான பஞ்சாயத்தை, சர்ச்சையை எதிர்கொண்டது இல்லை. அதாவது போதைப் பொருள் கடத்தல் மாதிரியான ஏடாகூடமான பிரச்சினைகளில் சிக்கியது இல்லை.
திடீரென ஒரு பரபரப்பான தயாரிப்பாளராக உருவெடுத்த ஜாபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் இருப்பதும், அவருடன் பல திரைப்படப் புள்ளிகள் நெருக்கமாக இருந்ததும்தான் இப்போது கோலிவுட்டில் பீதியைக் கிளப்பி இருக்கிறது,’
இந்த பிரச்சினை எந்த மாதிரியான ரூட் எடுக்கும் என்பது யாருக்கும் புலப்படாத ஒன்றாக இருப்பதுதான் கோலிவுட்டில் பயத்தைக் கொடுத்திருக்கிறது.
ஜாபர் சாதிக், பாடல் ஆசியர் ஒருவருக்கு போதைப் பொருள் கொடுத்ததாக கூறியிருப்பதாக வெளிவந்த தகவல் உண்மையா பொய்யா என்று தெரியாத சூழலிலும் கூட, அந்த பாடலாசிரியர் யார் என்று ஆளாளுக்கு ஆருடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய வரலட்சுமியின் மேனேஜர் குறித்த பரபரப்பு மீண்டும் கிளம்பியிருக்கிறது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் 300 கிலோ எடையுள்ள ஹெராயினை கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு சுமார் 2,100 கோடி. ஹெராயின் மட்டுமில்லாமல், ஏகே 47 துப்பாக்கி, 9 எம்.எம். துப்பாக்கியையும் கூடவே கைப்பற்றினார்கள்.
இவற்றை வைத்திருந்தவர் ஆதிலிங்கம் என்பவர். இவர் நடிகை வரலட்சுமியிடம் மேனேஜர் மற்றும் தனி உதவியாளராக சில மாதங்கள் பணியாற்றியவர். அவர் பணியிலிருந்து விடுப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்துதான் இந்த போதைப் பொருள் கட த்தலில் சிக்கியிருக்கிறார் என்பதை வரலட்சுமி சொன்ன பிறகுதான் இந்த பிரச்சினை அப்படியே அமைதியாகிப் போனது.
இதே போல் ஜாபர் சாதிக் பிரச்சினையும் இருக்கலாம். அல்லது இவர்களுக்குள் ஏதாவது ஒரு தொடர்பு இருக்குமா? அப்படி இருந்திருந்தால், ஜாபர் அப்பொழுதே சிக்கியிருப்பார் என பல யூகங்களில் இப்போது கோலிவுட் கிறுகிறுத்து கிடக்கிறது.