No menu items!

நமீபியா To இந்தியா – மீண்டும் வேங்கைகள்

நமீபியா To இந்தியா – மீண்டும் வேங்கைகள்

இந்தியாவில் சற்று வித்தியாசமான இறக்குமதி நடந்திருக்கிறது. நமீபியா நாட்டிலிருந்து 8 சிறுத்தைகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. பிரதமர் மோடி பிறந்த நாளான இன்று இந்த சிறுத்தைகளை மத்திய பிரதேசத்திலுள்ள குணோ தேசியப் பூங்காவில் விடுகிறார்கள்.

சிறுத்தை என்று எல்லோருக்கும் புரியும் வகையில் அழைத்தாலும் இவற்றை சிறுத்தைகள் என்று சொல்லக் கூடாது. இவை சிவிங்கிப் புலி என்றழைக்கப்படும் வேங்கைகள். Leopards எனப்படும் சிறுத்தைகள் நமது நாட்டிலேயே பல காடுகளில் பரவி இருக்கின்றன. இந்த Cheetah எனப்படும் வேங்கைப் புலிகள்தாம் நமது நாட்டில் அழிந்துவிட்டன.

இந்திய வரலாற்றைப் பார்க்கும்போது சீட்டா என்றழைக்கப்படும் வேங்கைகள் பல்கி பெருகி இருந்திருக்கின்றன. சீட்டா என்ற பெயரே சமஸ்கிருத வார்த்தையான சீத்ராக்காவிலிருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. முகலாய மன்னர் அக்பர் தனது அரண்மனையில் ஆயிரம் வேங்கைகளை வைத்திருந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, பல மன்னர்கள் வேங்கைகளை வளர்த்ததற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளன.

இத்தனை ஆயிரங்கள் இருந்த வேங்கைப் புலிகள் 1952ல் இந்தியாவில் முற்றிலும் அழிந்துப் போனதாக கூறப்படுகிறது. புலிகள் குடும்பத்தில் இருந்தாலும் இந்த வேங்கைப் புலிகள் மனிதர்களை தாக்குவதில்லை. மனிதர்களைக் கண்டால் பயந்து ஓடும் தன்மை கொண்டவை. இந்த வேங்கைப் புலியின் மிகப் பெரிய பலம் ஓட்டம்.

அதனால் மணிக்கு 70 முதல் 100 கி.மீ வேகத்தில் நான்கு கால் பாய்ச்சலில் ஓட முடியும். உலகின் மிக வேகமான விலங்கு வேங்கைதான். வேகம் மட்டும்தான் வேங்கையின் பலமாக கருதப்படுகிறது. காடுகளில் கூட தாங்கள் வேட்டையாடிய உணவுகளை அவற்றால் பாதுகாத்துக் கொள்ள முடியாது. இவை வேட்டையாடியவற்றை மற்ற ஆக்ரோஷ விலங்குகள் பிடுங்கிச் சென்று விடும்.

மன்னர்கள் சிலர் நாய்களைப் போல் வேங்கைப் புலிகளை வேட்டையாட அழைத்துச் சென்ற கதைகளும் இருக்கின்றன. வேங்கைப் புலியை காட்டுக்குள் கொண்டு சென்று அவற்றின் மூலம் மான், முயல்களை வேட்டையாடியிருக்கிறார்கள். இப்படி ஓரளவு சாதுவாக இருந்த வேங்கைப் புலி மனிதர்களாலும் சக விலங்குகளாலும் வேட்டையாடப்பட்டு இந்தியாவில் இல்லாமேலேயே போய்விட்டது.

இந்தியாவில் மீண்டும் வேங்கைப் புலிகளை வளர்க்க வேண்டும் என்பது பல வருட கோரிக்கை. இந்த கோரிக்கைக்கு ஆதரவும் உண்டு எதிர்ப்புகளும் உண்டு. ஆசிய சூழலுக்கு ஆப்பிரிக்க வேங்கைகளை கொண்டு வருவது சரியல்ல என்பது எதிர்ப்புகளின் சாரம்சம். இந்திய கண்டத்தில் வேங்கைகள் வளர்வதற்கான சூழல் இருக்கிறது. நமது நாட்டில் வேங்கைகளை பெருக்குவோம் என்று எதிர்வாதம் வைக்க்ப்பட்டது.

2009ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஆப்பிரிக்காவிலிருந்து வேங்கைகள் வந்திருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்ககுகள் முடிவடைந்து வேங்கைகள் இந்தியா வர 2022 ஆகிவிட்டது.

முதல்கட்டமாக ஐந்து பெண் வேங்கைகளும் மூன்று ஆண் வேங்கைகளும் நமீபியாவிலிருந்து இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விமானத்தில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 16 மணி நேர பயணம். பயணத்தில் வேங்கைகளுக்கு உணவு கிடையாது. அவற்றுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் 16 மணி நேர பட்டினியாய் பயணம். லேசான மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கும். பயணக் குழுவில் மூன்று கால்நடை மருத்துவர்களும் உண்டு.

குணோ தேசியப் பூங்காவில் இந்த வேங்கைகளுக்காக தனித் தனி தனிமைப்படுத்தல் இடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அடைப்புகளில் ஒரு மாதம் காலம் வேங்கைகள் இருக்கும். அங்கு மருத்துவர்களால் தீவிரமாய் கண்காணிக்கப்படும்.

ஒரு மாத தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததும் அவை ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இருப்பிடங்களுக்கு மாற்றப்படும். இங்கு அவை வேட்டையாட விலங்குகள் இருக்கும். வேங்கைகள் வேட்டையாடத் துவங்கும். சில காலம் இந்த இருப்பிடங்களில் இந்திய வனச் சூழலுக்கு பழக்கப்படுத்தப்படும். வேங்கைகள் அங்கு நலமாக இருந்தால் அவைகள் 740 கிலோமீட்டர் பரப்புள்ள தேசியப் பூங்காவிற்குள் விடப்படும். இதுதான் இப்போதைய செயல் திட்டம்.

ஆப்பிரிக்க வேங்கைகளின் வரவு நல்வரவாகட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...