ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்போது முளைத்திருக்கும் புதிய எதிரி வி.கே.பாண்டியன். ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் வி.கே.பாண்டியனைத்தான் சமீபத்திய பிரச்சாரக் கூட்டங்களில் கடுமையாக தாக்கி வருகிறார் பிரதமர் மோடி.
பூரி ஜெகன்நாதர் கோயிலின் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டது என்று சமீபத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியது இவரை மனதில் வைத்துதான். அந்த அளவுக்கு மோடியின் எதிரியாக மாறியிருக்கும் வி.கே.பாண்டியன் யார் என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்திருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்தவரான வி.கே.பாண்டியனின் முழுப் பெயர். வி.கார்த்திகேய பாண்டியன். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த வி.கே.பாண்டியன், 2000-ம் ஆண்டில் குடிமைப்பணி தேர்வில் வென்று பஞ்சாப் கேடர் அதிகாரி ஆனார். 2002-ல் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணம் முடித்ததால், அம்மாநிலப் பணிக்கு மாறினார்.
2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார், அங்கு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரையும் ஒருங்கிணைத்து பெரும் பங்காற்றினார். 2005-ல், ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தினார். இது மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. இந்த பனிக்காக அவருக்கு குடியரசுத் தலைவரின் விருது கிடைத்தது.
முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொந்த மாவட்டமான கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சியராக அவர் ஆற்றிய சிறந்த பணிகளுக்காக ‘ஹெலன் கெல்லர் விருது’ பெற்றார் வி.கே.பாண்டியன். அந்த மாவட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டதை நாட்டிலேயே மிகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக இரு முறை பிரதமரின் கையால் விருதுகள் பெற்றார். அந்த காலக்கட்டத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அவர் நெருக்கமானார்.
வி.கே.பாண்டியன் ஒடிசாவில் தனிக் கவனம் பெறத் தொடங்கியது 2011-ம் ஆண்டில்தான். அந்த ஆண்டில் அவர் ஒடிசா முதல் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதிலிருந்து கடந்த ஆண்டுவரை முதல்வரின் நிழலாகவே செயல்பட்டிருக்கிறார் வி.கே.பாண்டியன்.
ஒடிசாவில் நிர்வாகம், உள்கட்டமைப்பு, கல்வி, மருத்துவம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் ஒடிசா அடைந்திருக்கும் முன்னேற்றத்தில் வி.கே.பாண்டியனுக்கு பங்கு உண்டு.
ஒடிசாவின் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 1000, இளைஞர்களுக்கு ஆண்டு உதவித்தொகையாக ரூ. 10,000. மிகவும் சமமான மாநிலமாகப் போற்றப்படும் பெண்கள் இப்போது 0% வட்டியில் 5 லட்சம் வரை கடன் பெறலாம். உணவுப் பற்றாக்குறை மாநிலமாக இருந்து, ஒடிசா இப்போது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. நவீன் பட்நாயக் அரசின் இந்த சாதனைகளுக்கெல்லாம் பின்புலமாக இருந்திருப்பவர் வி.கே.பாண்டியன்தான்.
இந்திய தேசிய ஹாக்கி அணிக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) ஸ்பான்சர் செய்வதிலிருந்து, தொடர்ந்து இரண்டு முறை ஆண்கள் FIH ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவது வரை, ஹாக்கியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பாண்டியன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரின் விருதைப் பெற்றிருக்கிறார்.
ஒடிசா அரசில் நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ள வி.கே.பாண்டியன், கடந்த அக்டோபர் மாத்த்தில் தனது அரசுப் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதே ஆண்டு நவம்பர் மாத்த்தில் நவீன் பட்நாயக் முன்னிலையில் பாண்டியன் முறைப்படி பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார். இப்போது நவீன் பட்நாயக்கின் நிழலாக இருக்கும் வி.கே.பாண்டியனை அவரது அடுத்த வாரிசாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளே ஏற்றுள்ளனர்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதலில் பாஜகவும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமும் கூட்டணி அமைப்பதாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்தது. இந்த பேச்சுவார்த்தை முறிந்ததற்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் என்று பாஜக தலைவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தாம் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மாறி மாறி பாண்டியன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். ஒடிசாவை ஒரு தமிழர் ஆளப் பார்க்கிறார் என்று இனப் பிரச்சினையை எழுப்புகிறார்கள்.