No menu items!

‘அக்னிபாத்’ – பலம் சேர்க்கிறதா? பயம் காட்டுகிறதா?

‘அக்னிபாத்’ – பலம் சேர்க்கிறதா? பயம் காட்டுகிறதா?

இந்திய ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் முறையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. ‘அக்னிபாத்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி வருடத்துக்கு 46 ஆயிரம் பேர் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். முதல் வருடத்தில் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தொடங்கும் இவர்கள் பணி நான்காவது வருடத்தில் 40 ஆயிரம் ரூபாயை எட்டும். அவர்கள் நான்கு வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றுவார்கள். நான்கு வருடங்கள் முடிந்ததும் சேர்க்கப்பட்டவர்களில் 25 சதவீதத்தினர் மட்டும் ராணுவப் பணியில் தொடர்வார்கள். மற்றவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அப்படி வீட்டுக்கு அனுப்பப்படுபவர்களுக்கு பென்ஷன் கிடைக்காது, ஆனால், சுமார் 12 லட்ச ரூபாய் நிதி அவர்களுக்கு கொடுக்கப்படும். இந்த ராணுவ வீரர்கள் ‘அக்னிவீர்’ என்றழைக்கப்படுவார்கள்.

இந்தப் புதிய திட்டத்தை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார். இதை புரட்சிகரமான திட்டமாக பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவம் இளம் ரத்தத்துடன் புதுப் பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது நமது ராணுவத்தினரின் சராசரி வயது 32 ஆக இருக்கிறது. இந்த நான்கு வருடத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் நமது ராணுவத்தின் சராசரி வயது 26 ஆக மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளமையான ராணுவம் என்பது மட்டும் நோக்கமல்ல. இன்று ராணுவத்தில் ஓய்வூதியம்தான் மிகப் பெரிய செலவாக இருக்கிறது. 4 ஆண்டுகள் முறை பின்பற்றப்பட்டால் ஓய்வு ஊதிய செலவு பெருமளவு குறையும்.

ஆனால், 4 ஆண்டுகள் முடிந்து வெளியேற்றப்படும் ராணுவ வீரர்களுக்கு சுமார் 12 லட்ச ரூபாய் கொடுக்கப்படுகிறதே அது பெரும் சுமையாக இருக்கமல்லவா என்ற கேள்வி எழலாம். அக்னிவீருக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் 30 சதவீதம் இந்த நிதிக்காக பிடித்தம் செய்யப்படும். அரசும் அதே அளவு தொகையை கொடுக்கும். அதாவது 12 லட்சம் ரூபாயில் 30 சதவீதம் ராணுவ வீரரின் சம்பளத்திலிருந்தே கிடைத்துவிடுகிறது. அதனால் அரசுக்கு முழுமையான செலவு கிடையாது.

நான்கு வருடப் பணியிலிருந்து விடுவிக்கப்படும் வீரர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்காக அரசும் தன்னார்வ அமைப்புகளும் உதவும். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசு கருதுகிறது.

உலகின் இரண்டாவது பெரிய ராணுவம் இந்தியாவுடையது. சீன ராணுவத்தில் 21 லட்சம் பேர் (2,180,555) இருக்கிறார்கள். அதற்கடுத்து இந்திய ராணுவத்தில் 14 லட்சம் வீரர்கள் (1,455,550) இருக்கிறார்கள். அதற்கடுத்து 13 லட்சம் வீரர்களுடன் (1,388,100)அமெரிக்க ராணுவம் உள்ளது.

ராணுவத்துக்கு செலவழிப்பதில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. வருடத்துக்கு 801 பில்லியன் டாலர் செலவழிக்கிறது. இரண்டாம் இடத்தில் இருக்கும் சீனா 292 பில்லியன் டாலரும் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா 77 பில்லியன் டாலரும் செலவழிக்கின்றன.

உலகின் சக்தி வாய்ந்த ராணுவங்கள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் முன்னணியில் இருக்கின்றன.

இப்படி இந்திய ராணுவம் உலக அளவில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்த ‘அக்னிபாத்’ திட்டம் இந்திய ராணுவத்தை மேலும் வலிமையாக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

‘அக்னிபாத்’ திட்டம் இந்திய ராணுவத்தை வலிமையாக்குமா?

இந்தக் கேள்விக்கு ஆமாம் என்று ஒருமித்த கருத்து வரவில்லை.

நமது எல்லைகளில் போராட ஒரு ராணுவ வீரரை தயார்படுத்த குறைந்தது 8 வருடங்களாவது ஆகும். நான்கு வருடங்களில் ஒரு ராணுவ வீரரை எப்படி தயார்படுத்த முடியும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

நான்காண்டுகளில் திறமையைக் காட்டும் வீரர்கள் மட்டுமே நீட்டிக்கப்படுவார்கள், மற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதனால் திறமையானவர்கள் மட்டுமே ராணுவத்தில் இருப்பார்கள் என்று அதற்கு பதில் கொடுக்கப்படுகிறது.

அப்படியானால் விடுவிக்கப்படும் 75 சதவீதத்தினருக்கு நான்கு வருட பயிற்சி கொடுப்பது வீண்தானே என்ற மறு விமர்சனம் வைக்கப்படுகிறது.

அடுத்த 18 மாதங்களில் பத்து லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பல்வேறு துறையினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய பிறகு இதை பிரதமர் அலுவலகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இப்போதிலிருந்து 18 மாதங்கள் என்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு முன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு தீவிரமாக முயன்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ‘அக்னிபாத்’ திட்டத்தையும் பார்க்க வேண்டும்.

இந்திய ராணுவத்தை வேலை வாய்ப்பு அலுவலகமாக மாற்றக் கூடாது என்ற கருத்து சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகிறது.

இந்தத் திட்டத்தை சோதனை ஓட்டமாக நடத்திப் பார்த்திருக்க வேண்டும், தடாலடியாக ஒரே நாளில் கொண்டு வந்திருக்கக் கூடாது என்பது ராணுவ வல்லுநர்களின் கருத்து.

’இந்தத் திட்டம் எப்படி செயல்படும் என்று சோதனை செய்து பார்க்காமல் அப்படியே செயல்படுத்த முயல்வது குழப்பத்தை ஏற்படுத்தும்’ என்கிறார் ஓய்வுப் பெற்ற ராணுவ மேஜர் அஜய் சேத்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெஃப்டினண்ட் ஜெனரல் பாட்டியா வேறொரு கருத்தை முன் வைக்கிறார். ’ராணுவத்தில் பயிற்சி பெற்ற 100 பேரில் 25 பேரை மட்டும் வைத்துக் கொண்டும் மற்ற 75 பேரை விடுவிப்பது ஆபத்தானது. அவர்கள் நான்கு வருடங்கள் ராணுவப் பயிற்சி பெற்றவர்கள். வேலையிலிருந்து விடுவிக்கப்பட்ட மனநிலையில் சமூகத்துக்குள் வருவார்கள். இது ஆபத்தானது’ என்கிறார் அவர்.

ஆனால், இந்தக் கருத்தை ஏற்க மறுக்கிறார்கள் இந்தத் திட்டத்தின் ஆதரவாளர்கள்.

‘ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைன் இத்தனை காலம் தாக்குப் பிடித்ததற்கு காரணம் இது போன்ற ஒரு திட்டம் அங்கு செயல்பாட்டில் இருந்ததுதான். ராணுவத்தில் பயிற்சி பெற்று வேறு பணிகளில் இருந்த 6 லட்சம் பேரை உக்ரைனால் உடனடியாக திரட்ட முடிந்தது.

உக்ரைன் ராணுவத்துடன் அவர்களும் இணைந்து போர் செய்வதால்தான் ரஷ்ய ராணுவத்தால் முன்னேற இயலவில்லை’ என்ற கருத்தை முன் வைக்கிறார் ஒய்வுப் பெற்ற லெஃப்டினண்ட் ஜெனரல் அபய் கிருஷ்ணா.

இது போன்ற திட்டங்கள் இஸ்ரேல், அமெரிக்க போன்ற நாடுகளிலும் உள்ளது. ஆனால், அதே திட்டம் இந்திய சூழலுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஹாலிவுட்டின் பல படங்களில் ஹீரோக்களும் வில்லன்களும் முன்னாள் ராணுவ வீரர்களாக இருப்பார்கள், அவர்கள் ராணுவப் பணி முடிந்து மெர்சினரி எனப்படும் கூலிப்படை கூட்டத்தில் சேர்ந்திருப்பார்கள். இந்தியாவுக்கு இது புதிது. ராணுவத்திலிருந்து விடுவிக்கப்படும் அக்னிவீர்கள் அப்படி மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சமும் எழுப்பப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்தில் காலமான முப்படை தளபதி பிபின் ராவத்தின் யோசனைதான் இந்த ‘அக்னிபாத்’ திட்டம்.

மோடி அரசின் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்புத் திட்டங்களைப் போல் இந்தத் திட்டமும் பல குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...