தெலுங்குப் படமான ’உப்பென்னா’வில் வில்லன் விஜய் சேதுபதியின் மகளாக அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி. இவரது அழகு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்ததுவிட்டது. இதனால் பெரும் எதிர்ப்பார்புக்குள்ளான நடிகைகளில் ஒருவரானார் கீர்த்தி ஷெட்டி. ஆனால் அழகு கைக்கொடுத்த அளவிற்கு அதிர்ஷ்டம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, இவர் நடித்தப் படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, டாப் 5 நடிகைகள் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டுமென்ற கனவில் இருந்த கீர்த்தி ஷெட்டிக்கு, இரண்டாம் நிலை ஹீரோக்களுடன் நடிக்கதான் வாய்ப்புகள் வந்தன.
இதனால் தமிழ் சினிமா பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார் கீர்த்தி ஷெட்டி. அப்போது கிடைத்த வாய்ப்புதான் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக திட்டமிடப்பட்ட ‘வணங்கான்’.
எல்லாமும் சரியாகப் போய்கொண்டிருந்த வேளையில்தான் பாலாவிற்கும், சூர்யாவிற்கும் இடையே முட்டிக்கொண்டுப் போக, சூர்யா ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகினார். சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய் என்றதும், கீர்த்தி ஷெட்டியும் சொல்லிக்கொள்ளாமல் கால்ஷீட் இல்லையென்றபடியே கழன்று கொண்டார்.
இதனால் சரியான வாய்ப்புக்காக காத்திருந்த கீர்த்தி ஷெட்டிக்கும் இப்போது சுக்ர திசை அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘எல்.ஐ.சி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
‘எல்.ஐ.சி’ வாய்ப்பு கிடைத்ததை விட, பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த சூர்யா உடன் நடிக்கும் வாய்ப்பு கைவிட்டு போனதில் ஏக வருத்தத்தில் இருந்த கீர்த்திக்கு இப்போது கார்த்தியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதுதான் உற்சாகத்தை அளித்திருக்கிறதாம்.
‘வா வாத்தியாரே’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாகி இருக்கிறார் கீர்த்தி ஷெட்டி. அதேபோல் ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிக்க மற்றுமொரு படத்திலும் கீர்த்தி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு, நிச்சயம் நான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பேன். பொறுந்திருந்து பாருங்கள் என்று கீர்த்தி சொல்லியதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்.