மலையாளம் மெகா ஹிட் அடித்த ‘ப்ரேமம்’ படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் வந்தார்.
‘கொடி’ படத்தில் தனுஷுடன் நடித்தார். கொடி பெரிதாக உயரத்தில் பறக்கவில்லை. அடுத்து அதர்வாவுடன் நடித்தார். அதுவும் எடுப்படவில்லை.
கதைகளையும், கதாபாத்திரங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பதால்தான் அதிக படங்களில் நடிக்கமுடியவில்லை என்றார் அனுபமா பரமேஸ்வரன். ஆனால் சமீபத்தில் வெளியான ‘ரவுடி பாய்ஸ்’ என்ற படத்தில் முதலில் நடிக்க மறுத்தார். காரணம் அப்படத்தில் இதழ்களை இதழ்களால் சிறைப்பிடிக்கும் லிப் லாக் காட்சி இருந்ததுதான்.
ஆனால் அனுபமாதான் வேண்டுமென அடம்பிடித்த தயாரிப்பு நிறுவனம், சம்பளத்தில் ஒரு ஐம்பது லட்சத்தைக் கூடுதலாக கொடுக்க முன்வந்தது. பட்டென்று ஐம்பதை வாங்கி கொண்டு லிப் லாக் காட்சியில் கனகச்சிதமாக நடித்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன்.
என்னங்க இப்படி பொசுக்கென்று உங்கள் க்ளாமர் பாலிஸியை கைவிட்டுடீங்க என்று கேட்டால், ‘அத விடுங்க பாஸ். எனக்கு க்ரியேட்டிவான விஷயங்கள்ல ஈடுபாடு அதிகம். [லிப் லாக்கை சொல்கிறாரோ?] புனைவு கதைகளை எழுதுறது வழக்கம். தொடர்ந்து எழுதணும்’ என்கிறார்.
போகிற போக்கில் கதை எழுதி இயக்குநராகவும் ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே என்று கமெண்ட்டுக்கும் அனுபமாவிடமிருந்து பதில் கிடைத்தது.
‘கண்டிப்பா ஒரு நாள் நானும் டைரக்டர் ஆவேன். டைரக்டர்களிடம் அசிஸ்டெண்ட்டா வேலைப் பார்க்கணும். டைரக்ஷனை கத்துக்கணும். அப்புறம் என் கதையில டைரக்ஷன் பண்ணனும்’ என்கிறார்.
தமிழ் சினிமா இயக்குநர்களின் ஒடிடி உதயம்
கோவிட்டுக்கு பிறகு ஒடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகி இருக்கிறது.
ஒடிடி நிறுவனங்களின் வளர்ச்சியால் திரைப்படங்களுக்கு ஒரு வகையில் வருமானம் ஈட்டிக்கொடுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
ஆனால் பெரிய தயாரிப்பாளர்களின் சின்ன பட்ஜெட் படங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் ஒடிடி நிறுவனங்கள் சிறிய தயாரிப்பாளர்களின் படங்களையோ அல்லது இரண்டாம் கட்ட நட்சத்திரங்களின் படங்களையோ வாங்குவது இல்லை.
இதனால் ஒடிடி நிறுவனங்கள் ஓரவஞ்சனை காட்டுகின்றன என்ற ஆதங்கள் தமிழ் சினிமாவில் இன்று இருக்கிறது.
இதை தகர்த்தெறியும் வகையில் நாமே ஏன் ஒரு ஒடிடி தளத்தை உருவாக்க கூடாது என்ற எண்ணம் தமிழ் திரைப்பட படைப்பாளிகளிடையே எழுந்திருக்கிறது.
இந்த எண்ணத்திற்கு முதலில் விதையை விதைத்தவர் இயக்குநர் ஷங்கர்.
இயக்குநர் எல்லோரும் சேர்ந்து ஒரு ஒடிடி நிறுவனத்தைத் தொடங்கினால். நம்முடைய படங்களை எல்லா படங்களையும் வாங்கி ஸ்ட்ரீமிங் செய்தால் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் நிலை மேம்படும். இயக்குநர்களுக்கும் ஒரு நல்ல தளமாக அமையும் என்று சில முக்கிய இயக்குநர்கள் கலந்துரையாடலில் முடிவாகி இருக்கிறது.
மிக விரைவிலேயே தொடங்க இருக்கும் இந்த ஒடிடி-க்கு ‘ரெயின்’ என்று பெயர் வைக்கவும் முடிவாகி இருக்கிறதாம்.
ஆஸ்கரில் ஒலிக்குமா ஆர்.ஆர்.ஆர். படப்பாடல்
ஒவேஷன் ஹாலிவுட்டில் டால்பி தியேட்டரில் மார்ச் 12, 2023 அன்று ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
கோலங்கள், ஜல்லிக்கட்டு, கல்லி பாய், வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், நியூட்டன், விசாரணை என இந்தியாவிலிருந்து படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டாலும், இவற்றில் ஒன்று கூட ஷார்ட் லிஸ்ட்டில் இடம்பெறவில்லை.
இந்த முறை ஆஸ்கர் விருதை வாங்காமல் விடப்போவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி.
எக்கச்சக்கமான யுக்திகள். ஏராளமான ப்ரமோஷன்கள் என களத்தில் சுழன்று சுழன்று இயங்கி கொண்டிருக்கிறது ஆர்.ஆர்.ஆர். படக்குழு.
அதற்கு இப்பொழுது பலன் கிடைத்திருக்கிறது.
ஆஸ்கர் விருதில் 10 பிரிவுகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெஸ்ட் ஒரிஜினல் சாங் பிரிவில் போட்டியிட தகுதிப்பெற்றிருக்கும் 14 படங்களுடன் போட்டியில் இருக்கிறது ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்.
இதனால் எம்.எம். கீரவாணி இசையமைத்திருக்கும் ‘நாட்டு நாட்டு’ ட்ராக் இப்பொழுது ஆஸ்கர் ஷார்ட் லிஸ்ட்டில் இருக்கிறது. ஆஸ்கர் விருதை வழங்கும் அகாடமி மியூசிக் [ஒரிஜினல் சாங்] உட்பட இதர பிரிவுகளுக்கான பட்டியலை ஜனவரி 24, 2023 அன்று வெளியிட இருக்கிறது.