இந்தியாவிலிருந்து யாரும் இதுவரை ஜெயித்திராத வேர்ல்ட் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட் சாம்பியன்ஷிப்பில் ஜெயிக்க நினைக்கும் ஹீரோ ஜெயித்தாரா இல்லையா என்பதே ‘லைகர்’ படத்தின் ஒன்லைன்.
சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இதே பூரி ஜெகன்நாத் இயக்கிய ’அம்மா நானா ஒ தமிழ அம்மாயி’ படத்தின் ரீமேக்கான ‘எம்.குமரன் மஹாலஷ்மி’ படத்தின் 2022-ம் ஆண்டு வெர்ஷன்தான் இந்த ’லைகர்’. ஆனால் இப்படத்தில் ஆக்ஷனும் இருந்தது. எமோஷனும் இருந்தது. ஆனால் ‘லைகர்’ படத்தில் நாக்-அவுட்டில் அடிப்பட்ட பாக்ஸிங் வீரரைப் போல சுருண்டு கிடக்கிறது திரைக்கதை.
விஜய் தேவரகொண்டாவின் இந்த அட்டகாசமான, கம்பீரமான ட்ரான்ஸ்பர்மேஷன் ரசிக்க வைக்கிறது. ரொமான்ஸில் இளசுகளைக் கிறங்கடித்த விஜய் தேவரகொண்டா ஆக்ஷனில் வெளுத்து கட்டியிருக்கிறார். ஆனால் படம் முழுக்க, திக்கி திக்கி பேசும் காட்சிகள் ஓவர் டோஸ் ஆகி நம்மை நெளிய வைக்கின்றன.
அனன்யா பாண்டேயை கமிட் செய்தால் காஸ்ட்யூம் செலவில் எக்கச்சக்கமாக மிச்சம் பிடிக்கலாம் என்ற கியாரண்டியை இப்டபத்தில் கொடுத்திருக்கிறார். அநேகமாக நாலைந்து துண்டுகளில் இவரின் ஒட்டுமொத்த காஸ்ட்யூமையும் காஸ்ட்யூம் டிசைனர் வடிவமைத்து இருப்பார் போல. மற்றபடி அனன்யா பாண்டேவினால் வேறெந்த பலனும் இல்லை.
ரம்யா கிருஷ்ணன், ஆக்ரோஷமான தாயாக நடித்திருக்கிறார். மகனுடன் காதலைப் பற்றி பேசும் காட்சியில் இயல்பாக இருக்கும் இவரது நடிப்பு, கோபத்தில் கொந்தளிக்கும் சில காட்சிகளில் செயற்கைத்தனமாகவும் இருக்கிறது.
பாக்ஸிங்கில் கொடிக்கட்டிப் பறந்த மைக் டைசனை இப்படத்தின் ஹைலைட்டாக விளம்பரப் படுத்தி இருந்தனர். ஆனால் அவர் இப்போது ‘லைகரில்’ ஏன் நடித்தோம் என்று நொந்துப் போய் கன்ஃபெஷன் ரூமிற்குள் கதவைச் சாத்தி கொண்டு இருப்பார். பாவம் டைசன்.
நல்லவேளையாக ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மாவும், ஜாக்கி சானுடன் இணைந்து பணிப்புரிந்த சண்டைப் பயிற்சியாளர் ஆண்டி லாங்கும் ‘லைகர்’ படத்தை காப்பாற்றியிருக்கிறார்கள். உண்மையில் லைகரில் இருக்கும் லயனும், டைகரும் இவர்கள் இருவரும்தான்.
விஜய தேவரகொண்டா, அனன்யா பாண்டேவின் தயவால் பாடல்கள் ‘பார்ப்பதற்கு’ அழகாய் இருக்கின்றன.
ஓவர் ஹைப் கொடுத்தால் எந்த கதையென்றாலும் நிச்சய்ம் ஓடும் என நினைப்பவர்களுக்கு பூரி ஜெகன்நாத்தின் ‘லைகர்’ ஒரு நல்ல பாடம். விஜய் தேவரகொண்டா தனது சாக்லேட் பாய் உடம்பை ஒரு கட்டுகோப்பான பாக்ஸரின் உடம்பைப் போல மாற்ற மூன்று வருடம் அவகாசம் கொடுத்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் திரைக்கதை மூன்று நாள் கூட அவகாசம் எடுத்து கொள்ளவில்லையோ என்று பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’லைகர்’ யோசிக்க வைத்திருக்கிறது.
ஆக்ஷனை பொறுத்தவரை லயனுக்கும், டைகருக்கும் பிறந்த லைகர், சத்தியமாக ஸ்கிரீன்ப்ளேக்கும், மேக்கிங்கிற்கும் பிறந்தவன் இல்லை. படத்தில் வில்லன் இல்லையே என்ற குறையை, இயக்குநர் பூரி ஜெகன்நாத் தீர்த்து வைத்திருக்கிறார்.
காதல், மோதல், கோபம், பாசம் என அடித்து துவம்சம் செய்ய நல்ல வாய்ப்புகள் இருந்தும் அதை கோட்டை விட்டுருக்கிறார் இயக்குநர்