சோழர்கள்தான் இப்போது ஹாட் டாபிக்.
காரணம், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ சினிமா. இந்த படத்துக்கு அடிப்படையாக அமைந்தது, கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல். இந்த நாவலை எழுத கல்கிக்கு அடிப்படை ஆதாரமாக அமைந்தது வரலாற்றாசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய ‘சோழர்கள்’ நூல். எனவே, ‘பொன்னியின் செல்வன்’ பற்றிய விவாதங்களில் இப்போது கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பெயரும் அவரது ‘சோழர்கள்’ புத்தகமும் அதிகம் பேசப்படுகிறது.
‘சோழர்கள்’ புத்தகம் என்ன சொல்கிறது? யார் இந்த நீலகண்ட சாஸ்திரி?
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் 1892இல் பிறந்தவர் நீலகண்ட சாஸ்திரி. கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி என்பதுதான் இவரது முழுப் பெயர். அதுவே கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி என்றானது. தற்கால தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் சில மாவட்டங்கள் சேர்ந்த அக்கால சென்னை மாநிலத்தில் முதுகலைப் பட்டத்தில் (எம்.ஏ) முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றவர், இவர்.
வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியராக பணியாற்றிய நீலகண்ட சாஸ்திரி, அக்காலகட்டத்தில் தென்னிந்தியா குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதனடிப்படையில் தென்னிந்திய வரலாறு, தென்னிந்தியாவின் அரசர்கள், விஜய நகர வரலாறு, அதன் எழுச்சி, வீழ்ச்சி, தூரக் கிழக்கு நாடுகளிலும் பரவிய தென்னிந்தியரின் தாக்கங்கள் என விரிவான பல நூல்களை எழுதியுள்ளார். 1929 முதல் 1975 வரைக்குமான சுமார் அரை நூற்றாண்டு கால இடைவெளியில் 30 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் 25 நூல்கள் தென்னிந்திய வரலாறு பற்றியவை.
பாண்டிய வரலாறு, சோழர் வரலாறு, நாயக்கர் வரலாறு, பண்டைய தமிழகம் முதல் நாயக்கர் காலம் வரையிலான தமிழ்நட்டின் வரலாறு, தென்னிந்தியப் பேரரசுகள், தென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியத் தாக்கம், தென்னிந்தியாவில் சமய வளர்ச்சி, சங்கப் பாடல்கள் மூலம் அறியும் தமிழ்நாட்டு வரலாறு, தமிழர்களின் வரலாறும் பண்பாடும், ஆரிய-திராவிட பண்பாட்டுத் தொடர்பு போன்ற தலைப்புகள் கொண்ட இவரது நூல்கள் பழங்கால தமிழ்நாட்டின் வரலாற்றை படிப்பவர்களுக்கு இன்றும் தவிர்க்க முடியாதவை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவரது நூல்கள் தமிழிலும் மேலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1957இல் இவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அளிக்கப்பட்டது.
தமிழர்களுக்கு ஒரு செழிப்பான வரலாறு இருக்கிறது; அதற்கு ஆதாரமாக கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள் எல்லாம் இருக்கிறது என்பது 1900 வரைக்கும் நமக்கு தெரியாது. தமிழர்களின் 1000 ஆண்டுகள் சாதனையாக இன்று கொண்டாடப்படும் தஞ்சை பெரிய கோயிலை கட்டுவித்தது ராஜராஜ சோழன் என்பதுகூட 1907ஆம் ஆண்டு வரை யாருக்கும் தெரியாது. அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள்தான் பழங்கால கல்வெட்டுகளை ஆராய்ந்து இந்த வரலாறுகளை எல்லாம் நமக்கு சொல்லித் தந்தார்கள். இந்நிலையில் அந்த ஆதாரங்கள் அடிப்படையில் முதன்முதலில் தமிழ்நாட்டின் வரலாற்றை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரிதான் எழுதினார்.
சாஸ்திரியின் முதல் நூல் ‘The Paṇḍyan Kingdom from the Earliest Times to the Sixteenth Century’ 1929ஆம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாவது நூல் ‘Studies In Chola History And Administration’ (1932), மூன்றவாது நூல் ‘The Cholas’ (1935).
1935ஆம் ஆண்டு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய ‘The Cholas’ நூலின் மொழிபெயர்ப்புதான் ‘சோழர்கள்’. இரண்டு பாகங்கள், 1200 பக்கங்கள் கொண்ட இந்நூலை தமிழில் கே.வி. ராமன் மொழிபெயர்த்துள்ளார். (தற்போது நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட அச்சுப் புத்தகம் கடைகளில் கிடைக்கிறது. விலை: ₹1250. அதேநேரம், Indian Council Of Historical Research வெளியிட்ட இந்நூலின் முதல் பதிப்பு இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. டவுன்லோட் செய்து படிக்கலாம்.)
இந்நூலுக்கு பின் வந்த ‘சோழர்கள்’ பற்றிய வரலாற்று நூல்கள், நாவல்கள் அனைத்துக்கும் அடிப்படை வழிகாட்டியாக அமைந்தது இந்நூல்தான். சோழர்கள் பற்றிய நூல்களில் மட்டுமல்ல கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் நூல்களிலும் இந்நூலே சிறந்ததாக குறிப்பிடப்படுகிறது. ‘ஒரு வரலாற்று நூல் எத்தகைய முழுமையான சித்திரத்தை அளிக்க முடியும் என்பதற்கான முன்னுதாரணமாக இந்நூல் விளங்குகிறது’ என்று பிற வரலாற்று ஆசிரியர்களாலேயே பாராட்டப்படுகிறது.
சோழ மன்னர்களின் வரலாறு, படையெடுப்புகள், ஆட்சி நிர்வாக முறை, நில உரிமை முறை, வரி விதிப்பு, மக்களின் வாழ்க்கை முறை, தொழில், வணிகம், கல்வி, சமயம், கலை இலக்கியம் என சோழர் காலத்தின் பல தளங்களையும் கல்வெட்டு, இலக்கிய பதிவு ஆதாரங்கள் அடிப்படையில் விரிவாக விளக்குகிறார்.
இந்த நூல் குறித்து சர்ச்சைகளும் இருக்கிறது. உதாரணமாக, ராஜராஜ சோழன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலையை யார் செய்தது என்ற உடையார்குடி கல்வெட்டு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் நீலகண்ட சாஸ்திரி அதை கவனத்தில்கொள்ளாமல், ‘உத்தம சோழன் சதி’ என வரலாற்றை திரித்துவிட்டார் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும் ‘சோழர்கள்’ புத்தகத்தில் அநேக இடங்களில் நீலகண்ட சாஸ்திரியின் முடிவுகளும் அவரே சொல்லும் ஆதாரங்களும் முரண்படுவதை பல வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். சாஸ்திரியின் இந்து சமயச் சார்பு, சமஸ்கிருத ஆதரவு, இந்தியாதான் உலகிலேயே சிறந்த நாடு போன்ற கருத்தாக்கம் ஆகியவை குறித்தும் விமர்சனங்கள் உள்ளன.
மேலும், மன்னர்களின் வரலாற்றைச் சொல்வதிலேயே நீலகண்ட சாஸ்திரி அதிகக் கவனம் செலுத்தியுள்ளார்; தமிழ்நாட்டின் வரலாற்றை அரச மரபினரின் வரலாறாகவே இந்நூல் சொல்கிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், நீலகண்ட சாஸ்திரி மட்டுமல்ல பொதுவாக அக்கால தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதியவர்கள் அனைவருமே மக்களை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல் மன்னர்களை பற்றி எழுதுவதிலேயே கவனம் செலுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்கள் இருந்தாலும், கிட்டத்தட்ட நூற்றாண்டை நெருங்கிவிட்ட இந்நூலே, அதன் ஆய்வு தரத்தினால், இன்றும் ‘சோழர்கள்’ பற்றிய நூல்களில் முதன்மை நூலாக விளங்குகிறது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியை 20ஆம் நூற்றாண்டு தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்று எழுத்தாளர் என்று பாராட்டுகிறார், வரலாற்று பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரிக்குப் பின்னர் சதாசிவப் பண்டாரத்தார் முதற்கொண்டு பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா, கே.கே. பிள்ளை உட்பட குடவாயில் பாலசுப்ரமணியன் வரை பலரும் சோழர்கள் வரலாற்றை எழுதியுள்ளார்கள். என்றாலும், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி நூலை தவிர்த்துவிட்டு சோழர்கள் காலத்தை தெரிந்துகொள்ள முடியாது என்பதே இன்றும் நிலை.
புத்தகத்திலிருந்து…
(சோழர்கள் காலத்தில்) “சமூக வாழ்வில் முழுப் பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால், அடக்கமே பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாகச் சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்து வந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.”
“கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்கு முன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ராஜராஜ பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்தச் சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது. அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.”
*****