இந்திய அரசியலில் உணவு இப்போது மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. விருந்து ஒன்றில் அசைவம் சாப்பிட்ட ராகுல் காந்தி மற்றும் பீஹாரின் முன்னாள் முதல்வரான லாலுவை சமீபத்தில் விமர்சித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘புனித மாதமான சாவன் மாத்ததில் அவர்கள் கறி சாப்பிடுகிறார்கள் என்று சொல்லியிருந்தார். இது தனி மனித உரிமையல்லவா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
அந்த சர்ச்சை ஒரு பக்கம் இருக்கட்டும். நம் அரசியல் கட்சித் தலைவர்கள் என்னென்ன உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் தெரியுமா?
நரேந்திர மோடி:
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்த உணவு கிச்சடி. இதைத்தவிர குஜராத்தின் பிரபல உணவான காட்டா டோக்லா, காண்ட்வி ஆகியவற்றையும் அவர் விரும்பிச் சாப்பிடுவார். சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், லேசான உணவு என்பதால் தமிழகத்தின் பொங்கல் தனக்கு பிடித்த சிற்றுண்டியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்:
காலையில் எழுந்து பல் துலக்கியதும் 2-3 பேரிச்சம்பழம், 4 ஊறவைத்த பாதாம் பருப்பு எடுத்துக் கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். காலை உணவாக 1-2 தோசை அல்லது 2 இட்லி, கொஞ்சம் டீ மட்டுமே காலை உணவாக எடுத்துக் கொள்வாராம். மதிய உணவில் குறைவான அளவு அரிசி சாதத்துடன் அதைவிட அதிகமாக கீரை, காய்கறிகள், பருப்பு கட்டாயம் இருக்கும். இரவில் பெரும்பாலும் இட்லி, இடியாப்பம், பழங்கள் ஆகிய எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்கிறார்.
அரவிந்த் கேஜ்ரிவால்:
ஆரோக்கியமான உணவை சாப்பிடும் வழக்கம் கொண்டவரான அரவிந்த் கேஜ்ரிவால், மற்ற உணவுகளைவிட எளிதில் செரிக்கக் கூடிய பிஸ்கெட்களை அதிகம் சாப்பிடுவார். இப்போது சிறையில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் அதிக அளவில் மாம்பழங்களை சாப்பிடுவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமித் ஷா:
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிகவும் பிடித்தது வட இந்திய உணவான போஹாதான். இலகுவான, எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவது அவரது வழக்கம். அத்துடன் அடிக்கடி எலுமிச்சம் பழ ஜூஸையும் அவர் குடிப்பாராம்.
ராகுல் காந்தி:
சமீபத்தில் கோவைக்கு பிரச்சாரம் செய்யவந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சாலையில் மீடியனைக் கடந்து சென்று முதல்வர் ஸ்டாலினுக்காக மைசூர் பாக் வாங்கிச் சென்றார். ஸ்டாலினுக்காக மைசூர் பாக் வாங்கிச் சென்ற ராகுல் காந்திக்கு மிகவும் பிடித்த உணவு பிரியாணியும், கபாப்பும்தான். இதைத்தவிர மோமோசையும் அவர் விரும்பிச் சாப்பிடுவார்.
மம்தா பானர்ஜி:
அலூர் சாப் என்ற பெங்காலி வகை உணவும் பொரித்த உருளைக் கிழங்கும்தான் மம்தா பானர்ஜிக்கு மிகவும் பிடித்த உணவு. அடிக்கடி டீ குடிப்பதும் அவரது வழக்கமாக உள்ளது.