மனதில் சட்டென்று பதிந்துவிடுகிற அப்பாவித்தனமான முகம்.
க்ளுக்கோஸ் குடித்ததும் கிடைக்கிற தெம்பைப் போல உற்சாகப்படுத்துகிற ஹஸ்கியான குரல்.
தமிழ் ரசிகர்களுக்கே பிடித்த மாதிரி அளவான எடை.
அந்த அழகை பாந்தமாக காட்டும் உடை.
வசீகரமான அழகுடன் சரியான விகித்ததில் கலந்திருந்த நடிப்புத் திறமை.
இதுதான் ஆரம்பகால கீர்த்தி சுரேஷ்.
எவ்வளவு நாள்தான் இதே த்ரிஷாவையும், தமன்னாவையும், நயன்தாராவையும் பார்த்துகொண்டே இருப்பது. ஹீரோயின்கள் வேறு யாரும் இல்லையா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த போது, தமிழ் சினிமாவிற்கு ஹோம்லி தேவதையாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
’ரஜினி முருகன்’ படத்தில் இடம்பெற்ற ’உன் மேல ஒரு கண்ணு’ பாடலில் தனது புருவத்தை உயர்த்தி, காதலுடன் கிறங்கடித்த அந்த ஃப்ரேம்மிலேயே கீர்த்தி சுரேஷ் தமிழ் இளைஞர்களின் ஹாட் கிரஷ்.ஆக கொண்டாடப்பட்டார்.
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ ஹிட். மீண்டும் எஸ்.கே உடன் சேர்ந்து நடித்த ‘ரெமோ’ ஹிட். சிவகார்த்திகேயன், தனுஷ் என இன்றைய இளைய தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், விஜயுடன் ‘பைரவா’ படத்தில் நடித்தப்பிறகு முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.
இதற்கு காரணம், பாலிவுட், டோலிவுட், மோலிவுட்களிலிருந்து இங்கே நடிக்க களமிறங்கிய நடிகைகளைப் போல் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் இறங்கவில்லை.
இந்த நேரத்தில் தெலுங்கிலும் வாய்ப்புகள் வர, அங்கே ’நான் ஈ’ புகழ் நானியுடன் ஜோடி சேர்ந்த ‘நேனு லோக்கல்’ படமும் ஹிட்டாக, தெலுங்கிலும் பிஸியானார்.
இப்படி அறிமுகமான சில வருடங்களிலேயே இவரது சினிமா க்ராப், பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாதையைப் போல ஜிவ்வென்று உயர்ந்தது. இதற்கு ஒரே காரணம், கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் என்றாலும் கூட கீர்த்தி சுரேஷ் தனது கவர்ச்சியை நம்பாமல் தனது நடிப்பை மட்டும் நம்பியதுதான்.
இதனால்தான் காதல் காட்சிகளிலும், டூயட்களிலும் கூட கீர்த்தி சுரேஷூக்கு கவர்ச்சியான உடைகளோ, அல்லது அவரது உடலழகைக் காட்டும் கேமரா ஆங்கிள்களோ இருந்தது இல்லை.
கமர்ஷியல் ஹீரோயினாக இருக்கும் போதே, தெலுங்கில் இவர் நடித்த சாவித்திரியின் பயோபிக் படமான ‘மகாநட்டி’ அனைவரது வரவேற்பையும் பெற்றது. தேசிய விருதும் கிடைத்தது.
இதனால் நயன்தாராவைப் போல, அனுஷ்காவைப் போல ஹீரோயின் சப்ஜெட்களில் நடிப்பதில் கீர்த்தி சுரேஷ் அக்கறை காட்டினார்.
கீர்த்தி சுரேஷ் நடித்து ஹீரோயினை மையமாக கொண்ட ‘பென்குயின்’ படம் ஒடிடி-யில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்து ஹிந்தியில் டீக்கடை அதிபராக நடித்த ‘மிஸ். இந்தியா’வும் ஆறிப் போன டீயைப் போல ரசிகர்களால் ரசிக்க முடியாமல் போனது.
ஒருபக்கம், ஹீரோயினை மையமாக கொண்ட திரைப்படம் ஒன்று ஓடினாலே அவ்வளவுதான். காரணம் அது ஒரு முள் கிரீடம் மாதிரி கெளரவமாக தெரிந்தாலும் உள்ளே குத்திக்கொண்டே இருக்கும். ஆனாலும் வலிக்காதது போல வெளியே புன்னகைத்து கொண்டே இருக்கவேண்டும். ஆனால் கீர்த்தி சுரேஷ் பெரிதும் நம்பிய படங்கள் ஃப்ளாப் ஆகின.
மறுபக்கம், டாப் கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே கீர்த்தி சுரேஷ் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் நடிக்க தேடி வந்த வாய்ப்புகளை, டேட்ஸ் இல்லை என்று தவிர்த்தார்.
ஆரம்ப கால நட்புக்காக ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனோடு நடித்தவர், அடுத்து எஸ்.கே. பக்கம் திரும்பவே இல்லை. காரணம் ‘சர்கார்’ படம். தனது பள்ளிப்பருவ க்ரஷ்ஷான விஜயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்ததும், யாரும் அணுக முடியாத தொடர்பு எல்லைக்கு அப்பால் மறைந்து போனார்.
எனக்கு கோலிவுட்டும் வேண்டாம், டோலிவுட்டும் வேண்டாம் பாலிவுட் மட்டும் போதும் என்று ஹிந்தியை டார்க்கெட் செய்த கீர்த்திக்கு மார்கெட் மேலும் டல்லாக, காரணம் பாலிவுட்டில் அப்போது பிரபலமாக இருந்த ‘சைஸ் ஸீரோ’ கலாச்சாரம்.
வசதி வாய்ப்புகள் இல்லாமல், சாப்பிட எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்து, எலும்பும் தோலுமாக இருப்பவர்களைப் போல, எலும்பும் தோலும் மட்டும் இருக்கும் ஒரு பரிதாபமான தோற்றத்தைதான் வசதி படைத்தவர்களும், மாடல்களும், நடிகைகளும் சைஸ் ஸீரோ என்று சொல்லி டயட்டுக்கு மாறினார்கள்.
சைஸ் ஸீரோ ஆர்வத்தில் மெலிந்து போன கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கனுடன் ‘மைதான்’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் இழந்தார்.
அத்தோடு அவரின் பாலிவுட் கனவு கலைந்தது. மும்பையில் தங்கிய ஃப்ளாட்டை காலி செய்து கொண்டு, நம்மூர் பக்கம் வந்தவரை, இங்கே உள்ளவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவு எடை குறைந்து, மெலிந்திருந்தார்.
அழகாய் தெரிந்த கீர்த்தி சுரேஷ், பார்க்கவே பரிதாபமாய் மாறிப்போனார்.
இதனால் கீர்த்தி சுரேஷை வாய்ப்புகள் தேடி வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
பெரும் பெயரை பெற்றுத்தரும் என்று நினைத்த ‘சாணி காயிதம்’, கமர்ஷியலாக நம்பர் ஒன் நடிகையாக பெயரெடுக்கலாம் என்று நினைத்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த ‘சர்காரு வாரி பாட்டா’ என அடுத்தடுத்தப் படங்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இப்போது தன்னுடைய மார்க்கெட் நிலவரம் என்ன… இன்றைய ராஷ்மிகா மந்தானாக்கள் மத்தியில் தன்னுடைய இடம் என்ன… என்பது எதுவும் தெரியாமல் திணறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வாய்ப்பு கிடைக்காத நடிகைகளின் கடைசி ஆயுதமான கவர்ச்சியை இப்போது கையில் எடுத்திருக்கிறார்.
இழந்த மார்க்கெட்டை மீட்டெடுப்பதற்காகவே வேறு வழியின்றி அவர் கவர்ச்சி தாராளமயமாக்கலில் இறங்கிவிட்டார் என்கிறார்கள்.
இதுவரை ’மறைத்து வைத்திருந்த’ அழகை எல்லாம் ’வெளிப்படையாக’ போட்டோ செஷனாக எடுத்து, சோஷியல் மீடியாவில் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்.