’நடிகையர் திலகம்’ படம் நடிப்பில் அசர வைத்த சாவித்திரியின் பயோபிக் ஆக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு அதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பும் ஒரு காரணம். இவரது நடிப்புக்கு தேசிய விருதும் கிடைத்தது.
கதாநாயகர்களுடன் டூயட் பாட மட்டுமே கதாநாயகிகளைப் பயன்படுத்தும் பெரும்பாலான திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, நடிகைக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதற்கு தகுதியுள்ள நடிகையாக கீர்த்தி சுரேஷ் கொண்டாடப்பட்டார்.
இதனால் அவர் கதாநாயகிகளை மையமாக கொண்ட இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அவை எடுப்படவில்லை. லாபம் ஈட்டவில்லை. இதனால் பழைய படியே கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் இப்போது கர்நாடக சங்கீதத்தில் தவிர்க்கவே முடியாதவராக திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மதுரையில் ஒரு மத்திய வர்க்க குடும்பத்தில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி தனது குரல்வளத்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் வசம் ஈர்த்தவர். சிறு வயதில் அவரது வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களுடன் போராட்டமாக கழிந்திருக்கிறது இவற்றை எல்லாம் பிரதிபலிக்கும் வகையில் பயோபிக் ஆக எடுக்க இருக்கிறார்களாம்.
எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியிருப்பதாக ஒரு கிசுகிசு நிலவுகிறது. இவர் முடியாது என்றால் த்ரிஷா அல்லது நயன்தாராவை கேட்கலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி கதாநாயகர்களுக்கு மார்க்கெட் வேல்யூ எப்படி இருக்கிறது. எந்தளவிற்கு இருக்கிறது என்பதை அவர்களது படங்களின் வசூல் நிலவரம் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
இன்றைய நிலவரப்படி ரஜினி, விஜய், கமல் ஆகிய மூன்று பேருடைய படங்கள் மட்டுமே வசூலில் தாக்குப்பிடித்து நிற்கின்றன. இவர்களுக்கு அடுத்து இருக்கும் விக்ரம், சூர்யா ஆகிய இருவரும் கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து இருக்கும் கார்த்தி, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, ஜெயம் ரவி, விஷால் இவர்கள் தங்களுடைய வசூலை தொடர்ந்து தக்க வைக்கும் படங்கள் கொடுத்தால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலையில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி ஓரளவிற்கு பெயர் வாங்கிய படம் ‘டாடா’. இதில் நடித்த கவினுக்கு இப்போது ஒரு வரவேற்பு இருக்கிறது. அடுத்து இவர் நடித்த ‘ஸ்டார்’ படம் ஆகா ஒஹோ என்று வசூலிக்கவிட்டாலும் கூட, கவினுக்கு ஒரு மார்க்கெட் வேல்யூ உருவாக காரணமாகி இருக்கிறது.
இதனால் குறைந்த பட்ஜெட்டில் கவினை வைத்து நல்ல கதைகளை படமெடுத்தால் ஓரளவிற்கு வசூலைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இப்போது பல தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது.
இதையடுத்து கவினை வைத்து விஷ்ணு எடவன் படமொன்றை இயக்கவிருக்கிறாராம். இதில் கவினுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகி இருக்கிறார்களாம்.
பெரிய ஹீரோக்களும், முன்னணி ஹீரோக்களும் நயனுடன் நடிக்க இப்போது ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார்கள். அதேபோல் நயன்தாரா தன்னை மையமாக கொண்ட படங்களில் நடிப்பதை தொடர்ந்தார். ஆனால் அந்த படங்களும் வசூலில் காலை வாரிவிட்டன. இப்படி ’லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் அவருக்கு தலையில் வைத்த முள் கிரீடம் போல் பிரச்சினையைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால்தான் அந்த பட்டம் வேண்டாமென்று நயன் வெளிப்படையாக சொன்னார்.
வாய்ப்பில்லாமல் இருக்கும் நயனுக்கு கவின் படத்தில் நடிக்க அணுகியிருப்பது உற்சாகத்தை கொடுத்திருக்கிறதாம். கவினுக்கு ஜோடியாக நடித்தால், சீனியர் ஹீரோயின் என்ற இமேஜில் இருந்து இளம் நடிகை என்று ஒரு இமேஜை தக்கவைக்கலாம். இளம் ஹீரோக்களுடன் நடிக்க இது உதவும் என்றும் நினைக்கிறாராம்.
இந்த விஷ்ணு எடவன், லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர். லியோ மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் பாடல்களையும் எழுதியவர்.
கான்ஸ் விழா – 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப்படம்
உலகில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் அதிக மதிக்கப்படும் ஒன்று கான்ஸ் திரைப்பட விழா விருதுகள். தெற்கு ப்ரான்ஸில் வருடந்தோறும் இந்த திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் இந்தியப் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் கமர்ஷியல் கேட்டகரி எனப்படும் பணம் செலுத்தி விழாவின் போது திரையிடப்படும் படங்கள். இப்படி திரையிடுவதால், நம்முடைய படங்களை வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பித்து, அதன் மூலம் வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடுவார்கள். மற்றபடி இந்தப் படங்கள் விழாவில் திரையிடுவதற்கு போட்டியில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் அல்ல.
ஆனால் இது போல் பணம் செலுத்தி திரையிப்படும் படங்களையும் கூட கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் என இங்கே விளம்பரப்படுத்துவார்கள்.
கான்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படும் உயரிய விருது ’பால்ம் டி ஓர்’ [Palm D’or] விருது. இந்த விருதைப் பெற கடும் போட்டி இருக்கும்.
இந்த விருதுக்கான போட்டியில் தேர்வான கடைசி இந்தியப்படம், ’சுவாஹம்’ என்னும் மலையாளப்படம். 1994-ம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் போட்டி பிரிவில் கலந்து கொண்டது. ஷாஜி.என்.கருண் இயக்கியிருந்தார். இதற்குப் பிறகு எந்த இந்தியப்படமும் கான்ஸ் திரைப்பட விழாவில் போட்டி பிரிவுக்கு தேர்வாகவில்லை.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு இந்தியப் படம் பால்ம் டி ஓர் விருதுக்கு தேர்வாகி இருக்கிறது. இந்தப்படமும் மலையாளப் படம்தான். பாயல் கபாடியா இயக்கியிருக்கும் ‘ஆல் வி இமாஜின் அஸ் லைட்’ படம்தான் இப்போது கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்வாகி இருக்கிறது.
மும்பையில் நடக்கும் கதை. கனி குஷ்ருதி, சயா கடம், திவ்யா பிரபா மற்றும் ஹிரிது ஹரூன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கனியும், திவ்யாவும் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் யார் என்று அறிந்து கொள்ள பயணிக்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்பதே திரைக்கதை.